போன வாரம் நான் கலந்துகொண்ட ஒரு திருமணத்தில் நடந்த 'நாந்தீ தேவதா' பூஜை சடங்கைப்பற்றிச் சொல்கிறேன்.
வீட்டில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும் நமது முன்னோர்களின் ஆசியை அவசியம் பெறவேண்டும் என்பது மரபு.
இந்தச் சம்பிரதாயத்தை நாந்தீ சோபனம் என்ற பெயரில் திருமணத்திற்கு முதல்நாள் விரதத்தின்போது ஒன்பது அந்தணர்களை அமரவைத்துச் செய்து முடிப்பார்கள். மாப்பிள்ளை வீட்டார் பக்கம் ஹோமம் வளர்த்துச் செய்வார்கள். அதில் சில பிரிவினர் மங்கலப்பானைகளில் இந்த நாந்தீ சோபன தேவதைகளை ஆவாஹணம் செய்து வணங்குவார்கள். வம்ச விருத்தி என்பது முன்னோர்களின் ஆசியால்தான் உண்டாகும் என்பதால் இது கட்டாயம் பின்பற்றப்படுகிறது.
அதில் சொல்லப்படும் மந்திரத்தில் குலதேவதா மற்றும் பித்ரு வழிபாடு வருகிறது. முன்னோர்களின் மூன்று தலைமுறைப் பெயர்களைச் சொல்லி அவர்களுடைய ஆசியை வேண்டுவார்கள். ஒளி ரூபமாய் அவர்கள் வருகிறார்கள் என்பது ஐதீகம்.
ஹோமம் வளர்த்து அங்கு மந்திரம் ஓதப்படுகின்றபோது ஏதோ உந்துதல் வர முன் வரிசை இருக்கையிலிருந்து எழுந்தேன். மண மேடைக்கு விரைந்தேன். அப்போது மொபைலை எடுத்துப் படம் பிடிக்கும் சமயம் அந்த மந்திரத்தில் 'ப்ரபிதாமஹ பிதாமஹ ...' என மூதாதையர் உறவுமுறை (பூட்டன் பாட்டன் ...) பெயர்கள் உச்சரிக்கப்பட்டன.
படம் எடுத்தபின் பெரிதாக்கிக் பார்க்கும் போது என் உடலில் நிலவிய அதிர்வுகள் அமைதியாயின. ஹோமத் தீயில் வந்த வடிவம் ஆச்சரியப்படுத்தியது. அதில் பெரிய காக்கை ஒன்று மணமகனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அது அவனுடைய பாட்டனும் பூட்டனும் ஆவார்கள். சாஸ்திரம் சொல்வதுபோல் அக்கணம் ஆதித்ய ஒளி ரூபமாக வந்து ஆசிகள் வழங்கியுள்ளனர்.
ஆக நம் சடங்குகள் அர்த்தமுள்ளவையே! ஆத்மார்த்தமாக மந்திரம் சொன்னால் முன்னோர் வந்து ஆசி வழங்குவர் என்ற ஐதீகம் உண்மை என்பதற்கு இப்படமே சாட்சி! ஓம் நமசிவாய.
- எஸ்.சந்திரசேகர்