கோயில் மண்டபம் களை கட்டியது. பேச்சியும் சிவனாண்டி குடும்பமும் எல்லோரையும் வரவேற்று அமர வைத்தனர். சிறிய ஹோமம் செய்துவிட்டு தாலியைத் தவசியிடம் எடுத்துத்தர, ஈசன் சாட்சியாக ஊர் பெரியவர்கள் முன்னிலையில் தவசிக்கும் சிந்தாமணிக்கும் திருமணம் இனிதே நடந்தது. காலையிலேயே முஹுர்த்தம் என்றாலும் கூட்டம் இருந்தது.
அழைப்பினர்கள் அனைவரும் இக்கிராமத்து மகளுக்கு நிறைய ரொக்கமும் பொருளையும் பரிசாகத் தந்தனர். கல்யாணி மாமி ஒரு பித்தளை தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழம் பூ பத்துரூபாய், ரவிக்கை துணி வைத்து அதில் ஒரு பிளாஸ்டிக் பெட்டியும் வைத்துக் கொடுத்தாள். “சிந்தாமணி. உன் அம்மா ஆத்து சீரா நினைச்சு வாங்கிக்கோடி” என்று கொடுத்தாள். சிந்தாமணி முகம் மலர அதை வாங்கித்திறந்து பார்த்தாள். பெட்டி நிறைய பல வண்ணங்களில் வளையல்கள், சீப்பு, கண்ணாடி, ஹேர் கிளிப், மற்றும் ஒரு வெள்ளிக்குங்குமச் சிமிழ். அவள் சிமிழை திறந்ததும் தாழம்பூ அரக்குநிற குங்குமம் கும்மென்று தூக்கியது.
“மாமி, குங்குமம் வெச்சி விடுங்க” என்று சொல்லி ஆசி பெற்றாள். வந்தவர்கள் அத்தனைபேரும் கோயில் மண்டபத்தில் அமர்ந்து டிபன் காபி முடித்துக் கொண்டு கிளம்பினர். ஊர் வெட்டியான் மாரி திருநீறணிந்து ஓரமாக அமைதியாய் வந்து அமர்ந்திருந்தான். “ஏண்டா மாரி. இப்பதான் வந்தியா, உன் பொஞ்சாதிய அழைச்சிண்டு வரலியோ? சரி, சீக்கிரம் போய் சாப்பிடு” என்றாள் கல்யாணி.
“அம்மா. மத்தவங்க ஏதாவது நினைப்பாங்களோனுதான் நான் ஓரமா உக்கார்ந்திருந்தேன். பொஞ்சாதி சொல்லி அனுப்பினா. பணக்கார சாதிக்காரங்க வந்தா உன்னை தீட்டுனு நினைக்கப் போறாங்க. நீ ஒதுங்கியே உக்காருன்னு சொன்னா” என்றான்.
“பொறந்தா புருடு தீட்டு, போனாலும் தீட்டுதான். பத்துநாள் கணக்குனு சொல்லி தீட்டு போறதுங்கிறோம். அப்படிப்பாத்தா நம்பளோட ஆன்மா எல்லாமே தீட்டோடவேதான் ஜென்ம ஜென்மாந்திரமா பிறவி எடுத்து திரிஞ்சுண்டு இருக்கு. அதுக்கு என்ன பண்றது? லோகமே தீட்டுதானே? ஆன்மாவுக்கு பிறவி இல்லாம முக்தி கிடைச்சு சிவஜோதில கலக்கிறவரைக்கும் நித்திய தீட்டுதான். பூஜைக்கு தேக சுத்தியோட மடி ஆச்சாரம் தேவைதான். ஆனா உறவுமுறைகள் பந்தத் தீட்டு வந்தாலும் மனசுல அவனை நினைச்சு பூஜை பண்ணமுடியாதா என்ன? மடியா குளிச்சு தேகம் சுத்தபத்தமா இருக்கு. ஆனா ஆரம்பத்துலேயே தீட்டுபட்ட ஆன்மா இதுக்குள்ளதானே அடைபட்டிருக்கு? இந்த உடம்புகூடு நன்னா மடியோடதான் இருக்குனா, அப்போ ஆன்மாவும் மடியாயிடுமா என்ன?
புறம் சுத்தமா இருந்தும் அகம் முழுக்க தீமையா இருக்குற மனுஷாளை என்ன பண்றது? இது எதையுமே புரிஞ்சுகாம ஆயிரம் பேசுவா. அதையெல்லாம் நீ காதுல வாங்கிக்காதே. ஆன்மா வெளியேறின தேகம் நெருப்புல எரிஞ்சு பஸ்மம் ஆகிறவரைக்கும் தட்டிப் புடம் போடறே. அவன் ஆன்மாவை தட்டிப் புடம்போட்டு அது வேகலைனா திரும்ப பிறவி எடுக்க வைக்கிறான். இதுல பாத்தியோ, நீ தேகத்தை கொளுத்தறது அவன் கொடுக்கறதுனு இப்படியே பிறவி விளையாட்டு ஓட்றதுடா. கிட்டத்தட்ட நீங்க ரெண்டுபேரும் சரிசமம்தான். சரி விடு... அவா காசுபணம் இருக்கறவா, அவா பேசறத எல்லாம் காதுல வாங்கிண்டு உன் மனச வருத்திக்கப்படாது” என்றாள்.
ஆன்மாவின் ரகசிய சூட்சுமத்தைப் அப்போதுதான் புரிந்து கொண்டான். மாமியின் தீர்க்கமான வார்த்தைகளில் பிரம்ம தத்துவத்தையே உணர்ந்தான். வந்து போகிற போக்கில் ஈசனின் கோயிலில் பிறவியின் ஆன்மரகசியத்தையும் தன் குலத் தொழிலின் மேன்மையையும் அறிந்து பூரித்துப் போனான்.
இது 'உயிர்ப்பு' என்ற என் நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி. விலை: ரூ.65/-.
DK Publishers, பேசி: 044-24351283, 9940498436
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக