About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 14 ஜூலை, 2021

ஒரு சிலை மூன்று கொலை

 மறுநாள் காலையில் ஆறு மணிக்கெல்லாம் ராமன்குட்டி எப்போதும்போல் வாக்கிங் போக வந்துவிட்டார். பால் பாக்கெட்டும் செய்தித்தாளும் காம்பவுண்ட் கேட்டுக்கு உள்ளே பையில் தொங்கிக் கொண்டிருந்தன. வாசல் இரும்பு கேட்டைத் திறந்துகொண்டு போர்ட்டிகோவைக் கடந்து படியேறி வந்தார். வாசல் கதவு திறந்திருந்ததால் நேராக உள்ளே நுழைந்தார்.

“குட்மார்னிங் மிஸ்டர் கதிரேசன். ஐ ஆம் ரெடி. போலாம்” என்று சொல்லிக்கொண்டே சோபாவில் வந்தமர்ந்தார். சில வினாடிகள் ஆகியும் யாரும் வெளிப்படவில்லை. இரு முறை அழைத்துப் பார்த்தார். பிறகு அவரே எழுந்து அழைத்துக் கொண்டே உள்ளே போனார். மின்விசிறி படுக்கறையில் ஓடிக்கொண்டிருந்த சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி!
படுக்கையில் சரோஜா கழுத்து அறுபட்டுக் கிடந்தார். அதைப் பார்த்தவர் அதிர்ச்சியில் ‘மிஸ்டர் கதிரேசன் ... கதிரேசன்’ என அழைத்தபடியே உள்ளே ஓடிப்போனார். அங்கே சமையற்கட்டில் ஆழமாகக் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கதிரேசன் குப்புறக் கிடந்தார். ஐயோ என பறிப்போய் அந்த வேலைக்காரி எங்கே என பார்த்தார். கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் அவள் குளியலறைக்கு முன்பாக எந்த அசைவின்றிக் கிடந்தாள்.
வயதான ராமன்குட்டிக்கு ரத்தக்கொதிப்பு அதிஉச்சத்தில் எகிறியது. குளிரிலும் உஷ்ணம் அதிகம் தெரிந்ததால் வியர்த்துக் கொட்டியது. முகத்தைத் துடைத்துவிட்டு ஆசுவாசப்பட அப்படியே சோபாவில் சற்று உட்கார்ந்து பிராணாயாமம் செய்தும் ஓரளவுக்குத்தான் பதற்றம் கட்டுப்பட்டது. பயத்தில் மூச்சு இரைக்க, தொண்டை வரண்டுபோக, உடனே தண்ணீர் குடித்தாக வேண்டும் போல் இருந்தது. ஆனால் தப்பித்தவறிகூட எதையும் தொட்டுவிடக்கூடாது என்று அவருடைய உள்ளுணர்வு எச்சரித்ததும் சுதாரித்துக் கொண்டார்.
மீண்டும் உள்ளேபோய் ஒவ்வொருவரின் நாசிக்குக் கீழ் விரல் வைத்து மூச்சு உள்ளதா என பார்த்தார். யாருக்கும் ஓட்டம் இல்லை. உடனே எதற்கும் இருக்கட்டும் என்று ஒவ்வொருவரின் கோலத்தையும் தன்னுடைய ஹை ரெசல்யுஷன் மொபைல் காமிரா போனில் நிறைய கோணங்களில் படம் எடுத்து வைத்துக் கொண்டார். நாளை குறுக்கு விசாரணையில் தான் நிரபராதி என இவர் தரப்பில் நியாயத்தை விளக்க உதவும் என்பதால் எடுத்து வைத்துக்கொண்டார்.
“ஹலோ, போலீஸ் ஸ்டேஷன்? சார், நான் ராயல் அவென்யு தெரு ஸ்டேட் பேங்க் பில்டிங் மேலே இருக்குற வீட்டிலிருந்து பேசறேன். இங்கே பில்டிங் ஓனர் கதிரேசன் வீட்ல மூணு கொலை நடந்திருக்கு. உங்க டீம்மோட உடனே வாங்க சார். நான் அவரோட நண்பர் ராமன்குட்டி பேசறேன்” என்று சொன்னார். தன் வீட்டிற்கும் தகவல் சொன்னதுடன் போலீஸ் வரும்வரை தான் அவசியம் இங்கிருக்க வேண்டும் என்பதையும் சொன்னார்.
விளக்குகள் ஒளிர சைரன் ஒலியெழ போலீஸ் வேன் மற்றும் ஆம்புலன்ஸ் வீட்டின் முன் வந்து நின்றது. அந்த காவல்நிலைய ஆய்வாளர் வீரபெருமாள் சம்பவம் நடந்த விலாசத்திற்கு விரைந்து வந்தார். அங்கே வழிமேல் விழி வைத்து ராமன்குட்டி காத்துக் கொண்டிருந்தபோது காவல் ஆய்வாளர் உள்ளே நுழைந்தார்.
“சார், ஐ ஆம் ராமன்குட்டி. உங்களுக்கு நான்தான் தகவல் சொன்னேன். பல வருஷமா தினமும் காலையில நானும் அவரும் வாக்கிங் போவோம். இன்னைக்கு நான் ஆறு மணிக்கு உள்ளே வந்து பாத்தா இப்படியொரு பயங்கரம். நான் இந்த ஏரியா ரெசிடன்ட்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் செகரட்ரி” என்றார்.
“சார், இங்கே எந்தப் பொருளையும் நீங்க தொடலை இல்ல?”
“நோ. நாட் அடால்! எதையும் தொடக்கூடாதுன்னு கவனமாதான் இருக்கேன்.”
“கான்ஸ்டபிள், கீழே சிதறிக் கிடக்குற பொருள்கள் எதையும் விடாம கலக்ட் பண்ணுங்க. ஃபாரன்சிக்குகு அனுப்புங்க” என்று முக்கியமான கட்டளைகள் தந்தார். விரல்ரேகை நிபுணர் மற்றும் போட்டோகிராபர் தத்தம் பணிகளைக் கவனத்துடன் செய்துகொண்டிருந்தனர். இது எப்படி நடந்திருக்கும் என்று தன் மனக்கண்ணால் ஆய்வாளர் யூகம் செய்துகொண்டே நகர்ந்து போனார்.
-எஸ்.சந்திரசேகர்
சமீபத்தில் வெளியான 'ஒரு சிலை மூன்று கொலை' என்ற என் நாவலிலிருந்து ஒரு பகுதியைப் படித்தீர்கள். விலை: ரூ.60
DK Publishers, பேசி: 044-24351283, 9940498436



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக