‘வாங்க சாமி! எல்லாரும் சுகமா இருக்கிறீங்களா? ஆடி வெள்ளில ஆத்தாளுக்கு பொங்கல் வெச்சி புடவை சாத்தி அபிஷேக ஆராதனை செய்ய வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோசம். இப்படி வந்து உக்காருங்க. சித்த நேரத்துல ஆயத்தமாயிடுவேன்' என்றார் பண்டாரம். குழந்தைவேல் கவுண்டர் குடும்பத்தார் அந்த ஊர் மகாமாரியம்மன் கோயிலில் வழிவழியாகப் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள்.
‘மாலைகள் எல்லாம் புதுசா கட்டித்தொடுத்துகிட்டு இருந்தாங்க அதான் நாமக்கல் தாண்டி வர்ற வழியிலே வாங்கிட்டோம்' என்று சொல்லியவாறு பட்டுப்புடவை ரவிக்கைத்துணி மற்றும் பூசைப் பொருள்கள் யாவற்றையும் தாம்பாளத் தட்டில் நிறைவாய் வைத்துவிட்டு உதயகுமாரன் குடும்பத்தார் மகிழ்ச்சியும் பயபக்தியுடனும் அமர்ந்தனர்.
சுமார் நானூற்று ஐம்பது வருடங்களாக அந்தவூர் கிராமத்தில் மூதாதையர்கள் வாழ்ந்து, நிலங்களை ஆண்டு அனுபவித்து, பயிர் விளைத்து, குல தெய்வத்திற்குச் சீரும் சிறப்புமாய்க் கோயில் கட்டி, பூசைகள் செய்து விழா எடுத்து வழிபட்ட ஊர். காலப்போக்கில் இந்த வம்சாவழியினர் புலம் பெயர்ந்து ஈரோடு, கரூர், சென்னையில் குடியேறிவிட்டனர்.
நதிக்கரை மீது அமைந்துள்ள கோயிலைச் சுற்றியுள்ள நிலங்களில் மஞ்சளும் கரும்பும் விளைந்து காற்றில் அசையும்போது அங்கு வீசும் நறுமணம் நம் ஆன்மாவைத் தொட்டுவிட்டுப் போகும். நிசப்தமான சூழலில் எங்கோ கூவும் குயிலும் கரையும் காக்கையும் மௌனத்திற்கு அழகு சேர்க்கும். தெய்வீகம் குடிகொண்டுள்ள தலம் என்பதைப் பூரணமாக மனமும் உடலும் புரிந்து கொள்ளக்கூடிய தருணமது.
சற்று நேரத்திற்கெல்லாம் அன்றைய பூஜை ஆரம்பமானது. பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்வித்து வஸ்திரம் அலங்காரங்கள் சாற்றி நைவேத்தியம் படைத்துத் தூபதீப ஆராதனையுடன் இனிதே தொடங்கியது. சந்தன கருப்புசாமிக்கும் ஆராதனை செய்தபின், இறுதியாக மகாமாரியின் கருவறைக்குச் சென்று திரையை மூடினார். உள்ளே அம்மனுக்கு நீராட்டி, சந்தனம் மஞ்சள் பொலிவுடன் பூசி, சாற்றுவதற்கு அளித்த புதுப்புடவையை நேர்த்தியாக முடிந்து, அலங்காரம் செய்து, கண்மலர்கள் வைத்து, மாலைகள் அணிவித்து, வேப்பிலைகள் புடைசூழ திவ்யமாக அம்மனை எழுந்தருளச் செய்திருந்தார்.
வந்தோர் அனைவரும் கருவறை முன்னே வரிசையில் கண்கொட்டாமல் திரை விலகக் காத்திருந்தனர். மணி அடித்ததும் திரை விலக, சமைத்த இனிப்புப் பொங்கல் நைவேதியத்தைப் படைத்து, கற்பூர தீப ஆரத்தி எடுத்து அனைவருக்கும் தீர்த்தமும் குங்குமப் பிரசாதமும் தந்தார். சிறப்பாகப் பூஜைகள் செய்துவைத்த பூசாரிக்குத் தக்க மரியாதையும் சம்பாவனையும் உதயகுமாரன் குடும்பத்தார் வைத்துக் கொடுத்தனர்.
கோயிலை வலம் வந்தபின் ஆங்காங்கே நின்று படங்கள் எடுத்துகொண்டபின் சற்றே மதில் சுவரோரம் வந்து அமர்ந்தார்கள். இயற்கையை ரசித்துக்கொண்டே பழைய சங்கதிகளை அலசி பேசிக்கொண்டனர்.
“நம்ம முப்பாட்டன் ஓட்டன் வாழ்ந்த வீடு இப்போ இல்லை. சுமார் எண்பது வருஷங்களுக்கு முந்தி அதோ அந்தச் சோளக்கொல்லைக்கு அந்தண்ட இருந்துதாம். கொள்ளுப்பாட்டிக்குக் கல்யாணமான பிறகு கொஞ்சகாலம் இங்கே வாழ்ந்துட்டு சிதிலமடைஞ்ச அந்த வீட்டை மேற்கொண்டு மராமத்து பண்ணமுடியாத நிலையில அதை வித்துப்போட்டு அக்கரையிலே வந்து குடியேறினாங்கனு கேள்விபட்டிருக்கேன்” என்றார் உதயகுமாரன்.
“அப்பா, நாம இங்கேயே ஒரு வீடு புடிச்சு இருந்துட்டா, நல்லா இருக்குமில்ல. ஓடுற நதி, பச்சை பசேல்னு பூமி, மஞ்சள் மார்கெட், கரும்பு பிழிஞ்சு சக்கரையாக்குற பண்ணை, இப்படி எல்லாமே இருக்கு. என் பள்ளிக்கூடம் ஆண்டு பரீட்சைக்கு லீவு விட்டா பேசாம இங்கேயே வந்து இருக்கலாமா?” என்றாள் உதயகுமாரின் மகள்.
“இல்லடா. இப்போ இங்கே நமக்கு செட் ஆவாது. இங்கே பொழுது போக ஒண்ணுமே இல்லை. சொந்தமா வயக்காடு தொழில் ஏதேனும் இருந்தா பரவாயில்லை, நாள் பூராவும் இங்கே உக்காந்து என்ன செய்ய? அவசரத்துக்கு சாமான் வாங்கணும்னா பக்கத்துப் பெரிய ஊருக்குத்தான் போகோணும். கார் பைக் இல்லாம முடியாது. இந்தபக்கம் பஸ் ஓடுதானு தெரியலை. இதுவரைக்கும் கண்ணுல படலையே! நதிக்குக் குறுக்கால பிரிட்ஜ் இன்னும் போடலை அதனால பரிசல் புடிச்சுத்தான் அக்கறைக்கு போகோணும்டா. நம்ம மூதாதையர் வாழ்ந்த பூர்வீக பூமியே இப்போ நமக்கு வேத்து ஊரா ஆயிட்டு பாத்தியா? இதுதான் யதார்த்தம். இந்த பூமி நமக்கு இப்போ சொந்தம் இல்லைனாலும் குல சாமி நமக்குச் சொந்தம்டா. நம்ம குலதெய்வம் மட்டும் சுமார் நானூறு வருஷமா இந்த ஊர்ல இருந்துகிட்டு நம்மளை எல்லாம் பாத்துக்குறா.”
இவர்கள் மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கே வந்த பூசாரி, “ஆமாங்க. உங்க முப்பாட்டன் காலத்துல இங்கே நிலநீச்சு நிறைய இருந்துச்சுன்னு என்ற பாட்டனாரு சொன்ன ஞாபகம் இருக்குங்க. நாங்களும் இந்த ஊர்ல இல்லீங்கணா. பக்கத்து கிராமம். பூசைக்கு வாராங்கன்னு சொல்லிப்போட்டா அப்போ மட்டும் வந்து கோயில் நடை திறந்து வெச்சிருப்பேனுங்க. கோயிலுக்கு வரவு செலவு எல்லாம் நம்ம பங்காளி மோகன் தம்பிதான் இன்னிவரை பாத்துகிறாருங்க” என்றார்.
“நீங்க காலையில எப்போ சாப்பிடீங்க? ஆத்தாளுக்கு அஞ்சு ஆழாக்கு போட்டு பொங்கல் செய்தேனுங்க. ஒரு இலையிலே வெச்சி தாரேன் இன்னும் தாராளமா சாப்பிடுங்க. தூக்குல எங்களுக்கும் நிறைய இருக்கு” என்றார் பூசாரி.
“பூசாரி ஐயா, சித்த முந்தி பிரசாதம் சாப்பிட்டதே போதும். நாங்க புறப்படும்போதே சோறு கட்டிக்கிட்டு வந்தோம். இன்னும் பசிக்கலை ... கொஞ்சம் உச்சி நேரம் ஆகட்டும்னு இருந்தேன். பூஜை ரொம்ப சிறப்பா செய்து வெச்சீங்க. ரொம்ப சந்தோஷம். எங்களுக்கு ஆத்ம நிறைவுங்க. அப்ப நாங்க புறப்படறோம். இப்போ கிளம்பினாதான் ராத்திரிக்குள்ள வீட்டுக்குப் போய் சேர்ந்திடலாம்” என்றார் உதயகுமாரன்.
அங்கிருந்து நகர மனமில்லாமல் குடும்பத்தார் அனைவரும் வந்து காரில் ஏறிக்கொண்டனர். “சார், வேறு எங்காவது கோயிலுக்கு போகணுமா?” என்று டிரைவர் கேட்டார். “இல்லீங்க. இன்னும் முடிவாகலை. போகும்போது நடை திறந்திருந்தா பக்கத்தூரு சிவன் கோயிலுக்குப் போகலாம். அதுக்கு முன்னாடி வழியிலே எங்காவது சாப்பாடு முடிச்சிப்போம்” என்றார் உதய்.
கோயிலை விட்டுக் கிளம்பி ஐந்து நிமிட தூரம் போயிருப்பார்கள். “இப்பதான் எனக்கு கொஞ்சம் பசிக்கிற மாதிரி இருக்கு. மெயின் ரோடுக்கு போகுறதுக்கு முன்னாடி இந்த வயகாட்டு பக்கம் ஓரமா மரத்தடியில உக்காந்து சாப்பிடலாம். என்ன சொல்றீங்க?” என்றாள் அவர் மனைவி. “ஆமாம்மா. இங்கேயே இருந்து நாம சாப்டுட்டு போகலாம்” என்றாள் மகள்.
அச்சமயம் கோயிலிருந்து பூசாரியின் ஃபோன் அழைப்பு வந்தது. “சாமி, நீங்க ரொம்ப தூரம் போயிட்டீங்களா?” என்றார்.
“இல்லீங்க. இன்னும் மெயின் ரோடுக்குப் போகலை. தபால் ஆபீஸ் சமீபத்துலதான் இருக்கோம். என்ன விஷயங்க?” என்றார் உதயகுமாரன்.
“நீங்க கொண்டு வந்த ஜிப் போட்ட ஒரு பேக் இங்கிருக்கு. அதுல பிரசாதம், மாலை, இத்யாதி எல்லாம் இருக்குங்க” என்றார். “இதோ வர்றோம்” என்று சொல்லிவிட்டு வண்டியை திருப்பிக்கொண்டு மீண்டும் கோயிலுக்கே போனார்கள்.
“வாங்க, உள்ளே உங்க பையை மறந்து வெச்சிடீங்க போல. நடையை சாத்திட்டு போகலாம் இருந்தேன், கண்ணுல பட்டுதுங்க”’என்றார் பூசாரி.
“ஏதோ காரணத்துக்கு ஆத்த எங்களை மறுபடியும் உள்ளே வந்து போகச் சொல்றா போல” என்று உதய் சொன்னார்.
“அப்பா, வந்தது வந்துட்டோம் இங்கேயே உக்காந்து சாப்டு போகலாம்” என்று சொல்ல, உதய் “பூசாரி ஐயா, இங்கே உக்காந்த்து நாங்க சாப்டுட்டு போகலாமுங்களா?” என்று கேட்டார்.
“என்ன இப்படி கேட்டுபோட்டீங்க? அந்த மண்டபத்தைச் சுத்தம் செய்து தரேன். இங்கேயே இருந்து திருப்தியா சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு உடனே துப்புரவாகப் பெருக்கி சுத்தம் செய்து தந்தார்.
“பூசாரி ஐயா, நீங்களும் வந்து சாப்பிடுங்க” என்று அழைப்பு விடுக்க, “இருக்கட்டும் சாமி, களத்துமேட்டு வேலை பாக்கி இருக்கு. அது முடிச்சதுக்கு அப்புறம்தான் மதியம் சாப்பிடுவேன். நீங்க சாப்பிடுங்க. குடிக்க தண்ணி வேணும்னா அதோ குழாயில வருது. இரண்டு மாசம் முந்திதான் மேல்தொட்டி கட்டினோம். நான் கிளம்பறேன். என் பங்காளி தம்பி இங்கேதான் இருப்பாருங்க” என்றார்.
காரிலிருந்து இறக்கப்பட்ட தூக்கு, சம்படம், கரண்டி, பாக்குமட்டைத் தட்டு, தண்ணீர் பாட்டில், ஊறுகாய், சிப்ஸ் பொட்டலம், எல்லாமே மண்டபத்தில் வரிசைகட்டி இடம் பிடித்தது. வாழை இலை பரப்பி வைத்து மூடிய தூக்கைத் திறந்ததும் தயிர் சாதம், புளி சாதம் ‘கமகம’ என்று நாசிக்கு மணம் வீசிப் பசியைத் தூண்டியது. பரிமாறப்பட்ட உணவை எல்லோரும் அமர்ந்து சாப்பிடும் முன், உதயகுமாரன் அந்த வாழை இலையில் உணவை வைத்து மண்டபத்தின் பின்பக்கம் வைத்துவிட்டு வரப்போனார்.
வெட்டவெளியைப் பார்த்தவாறு “ஆத்தா, உன் கோயில்ல சாப்பிடறோம். நீயும் எங்களோடு சாப்பிடு தாயி” என்று சொல்லும்போது, ஒரு ஒடிசலான கிழவி புதர் அருகிலிருந்து வெளிப்பட்டாள். அவள் கொப்பு முடிந்து, பச்சை குத்திய கைகளுடன், முழங்கால் அருகே சேலை கிழிசலுடன் இருந்தாள்.
“நல்லதா போச்சு, இந்தா நீயே சாப்பிடு தாயி. இதுல தயிர் சாதம், புளி சாதம் எல்லாம் இருக்கு. நீ சாப்பிடு. இன்னும் வேணும்னா கேளு. நாங்க மண்டபத்துலதான் உக்காந்து சாப்பிடுறோம்” என்றார். உணவை மகிழ்வுடன் வாங்கிக்கொண்ட அவள் மண்டபத்தின் பின்னே புதர் அருகே குந்தியிட்டுக்கொண்டு அள்ளி எடுத்துச் சாப்பிடலானாள்.
கொண்டுவந்த பதார்த்தங்களை இவர்களும் சாப்பிட்டு முடித்துக் குழாயருகே பாத்திரங்களைக் கழுவித் தேய்த்து எடுத்துகொண்டு மீண்டும் மண்டபத்திற்கு வந்து அமர்ந்தனர். உதயகுமார் மண்டபத்தின் பின்னே சென்று, “தாயி, தண்ணி பாட்டில் இந்தா இருக்கு, குடிச்சுக்க” என்றார்.
அந்தப் பொக்கைவாய்க் கிழவி சிறு பாட்டிலைப் பெற்றுக்கொண்டு, “தம்பி, ஆத்தாளுக்குப் பொங்க வெக்க வந்தியா? எனக்கு ஒரு சேலை வாங்கி கொடுப்பா, இது நைந்து கிழிஞ்சு போச்சு” என்று கேட்டாள். திடீரென புடவைக்கு எங்கே போவது? இந்தக் கிழவி சமயம் சந்தர்ப்பம் தெரியாமல் கேட்கிறாளே என்று நினைத்துக் கொண்டார்.
“தாயி, கொண்டுவந்த ஒரு புடவையை ஆத்தாளுக்கு சாற்றினோம். நீ இப்போ திடீர்னு கேட்டா இந்த கிராமத்துல நான் எங்கே போகட்டும் சொல்லு? நான் வெளியூரு” என்று தன் இயலாமையைச் சொன்னார்.
அப்போது, கருப்புசாமி சன்னதி சுவருக்குப் பின்புறமாக நதிக்கரைக்குப் போகும் ஒத்தையடி பாதையில் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்த சந்தனபொட்டு குங்குமம் வைத்த மீசைக்கார வியாபாரி ஒருவர் “சென்னிமலை கைத்தறி, சுங்கிடி, நூல் புடவை, ரவிக்கைத் துணி, சவுக்கம்” என்று குரல் எழுப்பிவாறு விற்றுக்கொண்டு போனார்.
“புடவைக்காரரே! கொஞ்சம் இப்படி வாங்க. சாயம் போகாத கனமில்லாத ஒரு நல்ல நூல் புடவை கொடுங்க. தாயி! சுவருக்கு அந்தப்பக்கம் அவர் நிக்கிறாரு ஒரு புடவை எடுத்துக்க” என்றார். அவள் ஆசையாய் ஒரு கைத்தறி நூல் சேலையும் துவட்டும் சவுக்கமும் விரும்பி எடுத்துக்கொண்டு, “தம்பி, இது போதும்” என்றாள். வியாபாரி சொன்ன முன்னூறு ரூபாயைத் தந்து அனுப்பினார்.
பொக்கைவாய் கிழவிக்கு ஒரே சந்தோஷம். உதயகுமாரிடம் அவள், “நல்லா இரு” என்று வாழ்த்திவிட்டு, “இந்தா ராசா, கோயில் மரத்துல பரிச்சது. சாப்பிடு” என்று சொல்லி ஒரு மாம்பழத்தைத் தந்தாள்.
“தாயி, உனக்கு வெச்சிக, பசிச்சா சாப்பிடு” என்றார். அதற்கு அவள், “பொக்கைவாய்ல நான் பழத்தை உரிச்சுக் கடிக்க முடியாது, சிரமம். நீயே சாப்பிடு” என்றாள். அவள் தந்த பழத்தைப் பெற்றுக்கொண்டு மண்டபத்திற்கு வந்து உட்கார்ந்து குடும்பத்தாருடன் நறுக்கிச் சாப்பிட்டார்.
“அப்பா, எங்கே போனீங்க? ரொம்ப நேரமா ஆளைக் காணோம்”’என்றாள் மகள்.
“அங்கே பின்னாடி தங்கி இருக்கிற ஒரு ஏழைக் கிழவிக்குச் சாப்பாடு தரப் போயிருந்தேன்” என்றார்.
“அப்படியா சரி, நான் வண்டியில போய் உக்காந்துகிறேன், பொறுமையா வாங்க” என்றாள்.
பூசாரியின் பங்காளி மோகனிடம் நன்றி சொல்லிவிட்டு வர உதயகுமார் போனார். “அப்ப நாங்க புறப்படறோம், மறந்துபோன லக்கேஜ் எடுக்க வந்த சாக்குல திருப்தியா இங்கே உக்காந்து சாபிட்டோம். நீங்களும் சிரம் பாக்காம இடத்தைச் சுத்தம் செய்து தந்தீங்க” என்றார்.
“இல்லையா பின்ன? தன் குழந்தைங்க அவங்க வீட்டிலேர்ந்து கட்டிக்கிட்டு வந்த சோறுனா ஆத்தாவுக்கு கொள்ளைப் பிரியம். அதான் அந்த வாசம் அவளை இழுக்க, கொஞ்ச தூரம் போன உங்களை ஏதோ காரணத்துக்காக மீண்டும் உள்ளே வந்து உக்காந்து சாப்பிடனும்னு ஆசைப்பட்டா” என்றார் மோகன்.
“சார், நீங்கதான் இந்தக் கோயில் தோப்பு எல்லாம் பாத்துகரீங்களா? மாம்பழம் ரொம்ப சுவையா இருந்தது”’என்றார்.
“இல்லீங்களே, இங்கே கோயில் வளாகத்துல வெறும் தென்னை மரங்கதான் இருக்கு, அதோ பாருங்க சுத்தி இவ்ளோதான் இருக்கு. மாமரம் எதுவும் இல்லை” என்றார்.
“இந்த மண்டபத்துக்குப் பின்னாடி புதர்கிட்டே தங்கி இருக்கிற கிழவி இங்குள்ள மரத்துல பறிச்ச பழம்னு சொல்லிக் கொடுத்தாளே!” என்றார்.
“எனக்குத் தெரிஞ்சு இங்கே கிழவி யாரும் இல்லீங்களே. மண்டபம் பின்னாடி தங்கிகுற மாதிரி இடமில்ல. யாரைச் சொல்றீங்களோ தெரியலை” என்றார் மோகன்.
நடந்ததைச் சொன்னார். உடனே கண்கள் விரிய மோகன் ஆச்சரியத்தில் திளைத்தார். “சார், சுவத்துக்கு அந்தப்பக்கம் நதிக்குப் போகிற ஒத்தையடி பாதையிலே சைக்கிள்கூட போகாது. கருவேலம் முள் செடி நிரம்ப இருக்கும். நடமாட்டமே இருக்காதுங்களே. அப்போ நீங்க சொல்ற அந்த வியாபாரி இந்த சந்தனக் கருப்புதான். சேலையைக் கேட்ட அந்தக் கிழவி இந்த ஆத்தாதான். பாருங்க! இங்கே ஒரு திருவிளையாடலையே நடத்திட்டா” என்று மோகன் சொன்னதும் மயிர் கூச்செறிய திகைப்பே மேலோங்கியது.
மண்டபத்துக்குப் பின்பக்கம் அஞ்சுக்கு எட்டு அளவுலதான் இடம் இருக்கு. அங்கே ஒரு பாத்ரூம் கட்டினா உங்களைப்போல ஊர்ல இருந்து வர்றவங்களுக்கு வசதியா இருக்கும். அதுக்கு இனிமேதான் நிதி சேக்கணும் என்று மோகன் சொன்னார். “ஆகட்டும்ங்க, ஊருக்கு போய் என்னால் முடிஞ்சதை கட்டுமானத்துக்கு அனுப்புறேன்” என்றார் உதயகுமார். கட்டுச் சோறு சுவைத்த மயக்கத்தில் ஆத்தாளும் களிப்பில் இருந்தாள்!
ஞானாலயத்தில் உள்ள அணையா விளக்கில் குடி கொண்டுள்ள முருகப்பெருமானின் அம்சங்கள் -
பதிலளிநீக்குமுருகப்பெருமானுக்கு முன்னும் பின்னும் இறங்கிய 18 ஆற்றல்கள் - திரிகோண அமைப்பில் , 9 ஆற்றல்கள் முன்னும், 9 ஆற்றல்கள் முருகருக்கு பின் இறங்கினார்கள்.
1. வேலோன்
2. மயிலோன்
3. சேவலார்
4. வீரபாகு தேவர்
5. நம்பிராஜர்
6. அக்னிதேவர்
7. அருணகிரிநாதர்
8. நக்கீரர்
9. ஒளவையார்
முருகப்பெருமான் ஆறுமுகனராக
10. தெய்வயானை
11. வள்ளி
12. வருண பகவான் (இந்திர தேவர்)
13. போகர்
14. மச்சமுனிநாதர்
15. சட்டைமுனிநாதர்
16. கருவூரார்
17. புலிப்பாணி சித்தர்
18. வாயு பகவான்
தாங்கள் கண்டிப்பாக ஞானாலயம் சென்று தீக்ஷை பெற்று அகத்தியர் அருளும் ஆத்ம விடுதலை அடைய வேண்டும்.
ஓம் அம் அகத்தீசாய நமஹ
ஓம் ஈஸ்வராய நமஹ