About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

உருமாறித் திரியும் கருத்து!

மூத்த சித்தர்களைப்பற்றி நாம் கேளிவிப்படாத தகவல்களைச் சொல்வதாகத் தலபுராணங்களை மேற்கோள் காட்டி நிறைய கட்டுரைகள் இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. ‘போகர் மகாகர்வம் கொண்டவராக இருந்தார், திருமூலரின் மற்ற சீடர்களை இம்மியும் மதிக்கவில்லை’, ‘யோகம் கற்காமல் காம இச்சை போகத்திலேயே கிடந்தார்’, அதைக் குடித்தார், இதைப் புகைத்தார்’, தன் இலக்கைக் கோட்டைவிட்டார், அவர் அப்படியாக்கும் இப்படியாக்கும் என்று பலவித குற்றச்சாட்டுகளை அக்கட்டுரைகள் சொல்லும்.

ஆனால் எதிலுமே சம்பந்தப்பட்ட மூலநூல்/பாடல் எண் எதுவும் ஆதார மேற்கோள் இருக்காது. எல்லாம் சொல்லிவிட்டு, ‘இவ்வாறு எல்லாம் இருந்ததாக நம்பப்படுகிறது, சொல்லப்படுகிறது, செவிவழியாகப் பரவிவரும் கருத்து என்று சதுரகிரி தல புராணம் சொல்கிறது, சதகம் பேசுகிறது, கலம்பகம் உரைக்கிறது’ என்ற ரீதியில் நிறைய காணக்கிடைகின்றன.
தன்னுடைய பெருநூல் காவியங்களில் எங்குமே போகர் பொய்யுரைக்கவில்லை என்கிறபோது தன்னைப்பற்றிய எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகவே சொல்லியுள்ளது தெரிகிறது. ஏதேனுமொரு தல புராணம் நூலில் சுவடிப் பிரதியின் மூலப்பாடல்களும் உரையும் இருந்தால் மட்டுமே நாம் அந்தச் சித்தரைப்பற்றிய வேறுபட்ட கருத்தை வெளிப்படுத்தலாம். மூலப் பாடல்கள் இயற்றியது யார், பதவுரை எழுதியது யார், புராணம் மேற்கோள் காட்டும் வரிகள் எது என்று எதுவுமே இல்லாமல் கிளுகிளு கதைகள்போல் அதைப் பகிரவும் செய்கிறார்கள். ஊடகத்தில் சொற்பொழிவு நிகழ்த்துவோர்கூட நம்பகத்தன்மை இல்லாததை அப்படியே குறிப்பெடுத்துச் சொல்கிறார்கள்.
நல்ல வேளையாக, இதுபோன்ற எதையும் நூல் ஆதாரங்களாக எடுத்துக்கொண்டு என் கட்டுரைகளில் நான் சொல்வதில்லை. நானே மூலப்பாடலைப் படித்து அப்போது எழும் சந்தேகத்தைப் போகரே எனக்கு விளக்கி அறியப்படுத்தினாலோ, அல்லது தேர்ச்சிபெற்ற மூத்த பண்டிதர்கள் வாயிலாகக் கேட்டறிந்தாலோ மட்டும்தான் அதைப்பற்றி மேற்கோள் காட்டுவேன். இல்லாவிட்டால் அதுபோன்ற சங்கதிகளை ஓரங்கட்டுவேன்.
முகநூலில்/ பிளாக்களில் இதுபோல் கட்டுரைகள் சுற்றி வரும்போது, முற்போக்கு ஆசாமிகள் இதுதான் தருணம் என தம் சொந்த சாகித்தியங்களையும் சேர்த்து ஏற்றி விடுவது உண்டு. நாம் படிக்கும் எதுவாகினும் அதில் மெய்ப்பொருள் காண்பதே அறிவு! கலியுகத்தில் இவ்வாறு எல்லாம் செயல்கள் பெருகிவந்தால் அதுகாறும் பொதுச்சுற்றில் இருந்த சில நூல்களைச் சித்தர்கள் அடியோடு முடக்கி/ மறைத்து விடுவார்கள்.
-எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக