அர்ச்சகரின் தட்டில் இனி தட்சணை காசு போடக்கூடாதாம். கோயில் உண்டியலில் மட்டும் போடவேண்டும் என்று இந்து அறநிலையத்துறை வலியுறுத்துகிறதாம். கோயில் ஆபீசில் கட்டணம் செலுத்தி அங்கு பக்தர் யாருக்கேனும் கட்டளை சேவையோ, ஹோமமோ, பரிகாரப் பூஜையோ, திருமணமோ நடத்தி வைத்தால் அதை நடத்தி வைப்பவர்க்கு இனி சம்பாவனை கொடுப்பது எப்படி? நான் அறிந்தவரை அர்ச்சகர்களின் மாத வருமானமே ₹750 முதல் ₹3000 வரை தான். இதை வைத்து இக்காலத்தில் என்ன ஜீவனம் செய்ய முடியும்?
சோறுடைத்த சோழ தேசத்தில் மாதம் மும்மாரி பொழிந்ததற்கு அந்தணர்கள் பெரும்பங்கு வகித்தனர்.
"வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை
மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!"
பெண்கள் தம் கற்பில் தவறலாம், மன்னன் சரியாக ஆட்சி செய்யத் தவறலாம். ஆனால் மறையோதும் வேதியர் கடமைகளிலிருந்து ஒருபோதும் தவறிடக்கூடாது என்ற பொது நோக்கத்தில் அவர்களை ஆதரித்து வறுமை வராமல் காத்திடவே சதுர்வேதிமங்கலம் கிராமங்களை இராஜராஜ சோழன் நிறுவினான். தான் கட்டுவித்த கோயில்களில் எல்லாமே கிரமமாக நடக்க ஏற்பாடுகள் செய்தான். ஆனால் இக்கால முற்போக்கு வரலாற்று ஆசிரியர்கள் சோழனின் இச்செயலை சமூக அநீதி என விமர்சித்து உமிழ்ந்தனர்.
இன்றைக்கு நடப்பது எதுவும் நல்லதல்ல. மாதம் மும்மாரி என்ற நிலை மாறி வடகிழக்கு/ தென்மேற்கு என்ற அளவில் உள்ளது. சமயத்தில் அதுவும் பொய்த்துப் போகும். கடும் புயல் வீசி உள்ள பயிர்கள் அழிந்து நாசமாகும். அப்படியே அறுவடை ஆனாலும் நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பயிா் முளைத்து வீணாகும்.
ஆக அரசு உத்தரவு என்ற பெயரில் இனி சம்பிரதாய நெறிமுறைகளை மாற்றி விடுவார்கள். பெரிய கோயில்களில் அபிஷேகம் அலங்காரம் ஒருமுறை போதும், சஷ்டி/ பிரதோஷ கால அபிஷேகத்திற்கு தேன் பால் பன்னீர் யாவும் அரை லிட்டர் மட்டும் உபயோகிக்க வேண்டும், வேதகோஷ மந்திரங்கள் கருவறைக்கு வெளியே கேட்கக்கூடாது, மடப்பள்ளியில் திருவமுது சமைப்பது கூடாது போன்ற புதிய விதிகள் அமலுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை! 😀
"சுழலும் பூமி உயிர்களை வளர்க்கும்
நடுங்கும் பூமி அதர்மத்தைக் காட்டும்
உழலும் ஆன்மா வினைப்பயன் ஏற்கும்
கழலும் ஊன்றக் காலச்சுவடு வலிக்கும்"
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக