"நோய் தொற்று வராமல் காத்துக்கொள்ள சிவப்பு கவுனி, மூங்கில் அரிசி மற்றும் கருங்குறுவை அரிசியை மட்டுமே சமைத்துச் சாப்பிடுங்கள்" என்று ஒரு பதிவில் சொல்லியிருந்ததைப் பார்த்தேன்.
இன்றைய சந்தை நிலவரப்படி, உத்தேச விலையாக இந்த ரகங்கள் ₹100 முதல் ₹200 வரை விற்கப்படுகிறது. பொன்னி பச்சரிசி கிலோ ₹53 முதல் ₹56 வரை விற்கிறது. இதில் மேற்படி பாரம்பரிய அரிசி ரகங்களை நடுத்தர குடும்பத்தால் ஒரு மூட்டை வாங்கிட முடியுமா? அரை கிலோ மட்டும் வாங்கி என்ன செய்ய? முழு அரிசி மணிகளை எண்ணி எண்ணித்தான் உலையில் போட வேண்டும். வழித்தால் சட்டியிலிருந்து அகப்பைக்காவது வருமா? 😀
அப்படியே சாப்பிட்டாலும் உடல் உடனே வலுப்பெற்று எதிர்ப்பு சக்தியைக் காட்டுமா? சித்த /ஆயுர்வேத மருந்துகளே நாள்பட்ட பிரச்சனைக்குக் குறுகிய காலத்தில் தீர்வு தருவதில்லை. அது ஒரு மண்டலம் தாண்டி மெள்ள வீரியத்தைக் காட்டும்வரை நோயாளிக்குப் பொறுமையும் நம்பிக்கையும் இருப்பதில்லை. ஏன்?
சிகிச்சை முறை பற்றி வைத்திய குண சிந்தாமணி சொல்வதென்ன? மருத்துவ பிரயோகத்தை உடல் ஏற்றுக்கொண்டு உடனே செயல்படும் அளவில் அந்த மருத்துவ முறையில் உடலைப் பழக்கி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நோயாளியைப் பரீட்சித்துப் பார்த்தபின் உடலில் தங்கிய கசடுகளை வெளியேற்ற ஒவ்வொரு முறையும் உள்ளுக்கு பேதி மருந்து தந்து சுத்தி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. சித்த குருமருந்து கிரகிக்கப்பட காலப்பிரமாணம் அந்தி/ சந்தியோ, வாரமோ, பட்சமோ, குணமாகப் போதுமானது. பாதிப்பின் தீவிரம் பொறுத்து மண்டலம்/ அயனம் வரை கால அளவு நீடிக்கும். வைத்திய குண சிந்தாமணி அளவுகோல் கிரமப்படி பார்த்தால் நம் இன்றைய வாழ்க்கை முறைக்குச் சித்த வைத்தியம் எடுபடாது. சித்த நூல் எழுத்தாளரே இப்படிச் சொல்கிறாரே என்று நீங்கள் நினைக்கலாம்.
திடீரென சித்தாவுக்கு மாறுங்கள் என்றால் நம் வாழ்க்கை முறைகளை நம் பூட்டன் காலத்துப் பழைய நிலைக்குக் கொண்டுபோக முடியுமா? முடியாது! 🤔 மலைவாழ் மக்கள் போல் இயற்கையுடன் ஒன்றி பூரண நலத்துடன் வாழ்ந்தால் அவர்களைப் பின்தங்கிய மக்கள் என்கிறோம். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை! ஆழமாகப் பார்த்தால், உணவும் ஆங்கில மருந்து மட்டும் எதிரி அல்ல, நம்மைச் சுற்றியுள்ள பல நாகரிக அம்சங்களும் வாழ்க்கை முறையும் சித்த மருத்துவ செயல்பாட்டுக்கு எதிரிதான்! பத்தியம் என்பது உணவுக்கு மட்டுமல்ல வாழ்வியல் முறைக்கும்தான். நாம் ஒரு நூற்றாண்டுக்கு முந்தி இருந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றவேண்டும். இதை எந்த சித்த வைத்தியராவது அடித்துச் சொல்லியுள்ளாரா? மீண்டும் மீண்டும் அவரிடம் கப்பம் கட்டும்படி ஆகிறதே!
உணவே மருந்து என்ற அளவில் அன்றாட சமையலைச் செய்து உண்டு ஓரளவுக்குக் காத்துக்கொள்கிறோம். இதில் கற்பங்கள் செய்து உண்டால் என்ன தவறு என்று நினைப்போர் உண்டு. காய்கனி தானியம் எல்லாமே மருந்தடித்து விளைவித்து எங்கெங்கிருந்தோ சந்தைக்கு வருகிறது. இதுவே உடலுக்குப் பழகிவிடுவதால் சித்த மருந்துகள் அவசரத்திற்கு எடுபடாமல் போகும். ஆர்கானிக் பண்ணைக் காய்கறிகள் என்று விற்றாலும் அதன் உண்மைத்தன்மையை ஆராய முடியாது.
நியாயமாகப் பார்த்தால் பாரம்பரிய அரிசி ரகங்களை அரசு ஊக்குவித்து அதை ரேஷன் கடையில் கிடைக்கச் செய்ய வேண்டும். கலப்படமற்ற பால் தேன் பனைவெல்லம் பதநீருக்கே வழியைக் காணோம்! இதில் அரிசியா? சித்த மருந்தோடு நாம் குடிக்கும் அநுபானம் சுத்தமாகக் கிடைக்க வேண்டாமா?
மக்களே, அதை வாங்காதீர்கள் இதை உண்ணாதீர்கள் என்று சமூக வலையில் உசுப்பேற்றி அதற்குத் தாளம் போடும் கூட்டம் ஒரு பக்கம். தனிமனித மாற்றம் வேண்டும் என்பார்கள். ஆனால் சராசரி மக்களின் பொருளாதாரத்தை நினைத்து எந்தப் பதிவும் வருவதில்லை. வசதி படைத்தவன்தான் தனி மனித மாற்றம் கொண்டு வர வேண்டும். இல்லாதவன் வெறும் கோஷம் போட்டுவிட்டு ஒதுங்க வேண்டும். ஏன்? அதை ஆதரித்து வாங்கி ஊக்கப்படுத்தும் நிலையில் அவனுக்கு வசதி இல்லையே! உற்பத்தி அதிகமானால் விலை குறையும். வாங்கும் திறன் கூடும். இதுவே யதார்த்தம்.
தன் நிலத்தில் விளைந்த அரிசியை விவசாயி உண்டாலும் இதர உணவுப் பொருளைச் சந்தையில் வாங்கத்தானே வேண்டும்? உடல் நலம் கெட்டுப்போக வேறு வழிகளா இல்லை? பொது சந்தையைச் சாராமல் ஒவ்வொருவரும் தன் குடும்பத்திற்கான தனிமனித சுயசார்பை அடைய முடியுமா? ஏற்றம் பற்றி வலைத்தள கட்டுரைப் பதிவில் வக்கணையாக எழுதவும் படிக்கவும் நன்றாக இருக்கும். ஆனால் நிஜத்தில் ...?
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக