About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 28 மார்ச், 2023

இல்லைனாதான் என்ன?

எனக்குத் தெரிந்த ஒரு முதியவர் இன்று என்னிடம் பேசும்போது தன் மனக்குறைகளைச் சொல்லி வருத்தப்பட்டார். “எனக்கு இப்போ வயசு 80க்கு மேலாச்சு. என் வம்சம் தழைக்கணும்னு நினைச்சேன் ஆனா அந்த ஆசை நிராசையாவே போச்சு. என் சம்சாரத்துக்கும் வருத்தம் இல்லாம இல்ல. என்ன செய்ய .. எல்லாம் தலைவிதி. வாங்கி வந்த வரம் அப்படி. என் தம்பிக்கு ஒரு மகனும் ஒரு பேரன் பேத்தியும் இருக்காங்க. அதைப் பார்த்து சந்தோஷப்பட்டுக்குவேன்” என்றார்.

“ஐயா, உலகத்துல எத்தனையோ கோடி ஜனங்களுக்குக் கல்யாணம் ஆகியும் குழந்தையே இல்லாம இருக்காங்க. எத்தனையோ பேர் கல்யாணமே ஆகாம இருக்காங்க. சிலருக்கு ஆண் வாரிசு இல்லாம மகள் மட்டும் இருந்து அதோட அவரோட கிளை நின்னு போகும். அதுகெல்லாம் அவங்க ஒவ்வொருத்தரும் உக்காந்து வருத்தப்பட்டா வேலைக்கு ஆகுமாங்க? சந்ததி இல்லேனா என்ன? நீங்க ஆசிர்வதிக்கபட்டவர்னு நினைச்சிகோங்க” என்றேன்.

“நான் ஆசிர்வதிக்கபட்டவனா... என்ன சொல்றே... எப்படி?” என்றார்.

“ஆமாங்க. எனக்குத் தெரிஞ்சு நீங்க யாரையும் மோசம் பண்ணினது இல்ல, யார் சொத்தையும் அபகரிக்கலை, சொல்லப்போனா உங்க சேமிப்பிலேந்து அப்பப்போ கஷ்டப்படுறவங்களுக்குக் காசு தந்து உதவுறீங்க. ஏழைங்க கல்யாணத்துக்குத் தாலிகூட தந்தீங்க. இதை நீங்க போன பிறவியின் வினைகளைக் கழிக்கப் பிராயச்சித்தம்னு வெச்சிகிட்டாகூட தப்பில்லை. ஆக மொத்தத்துல தண்டிக்ககூடிய பாவங்கள் இப்ப செய்யலை! 

பாவங்கள் ஏதாவது நீங்க செய்திருந்து, அதையும் உங்க சொத்தையும் அனுபவிக்க உங்க சந்ததியிலே எவனும் வரலைனா அதுக்கு வருத்தப்பட்றது நியாயம். அப்படி எதுவும் இல்லாதபோது நீங்க ஏன் கண்டதையும் மனசுல போட்டுக் குழப்பிக்கறீங்க. எப்படியும் மிஞ்சியிருக்குற உங்க காசுபணம் உங்களுக்கு அப்புறம் உங்க தம்பிக்கும் அவர் மகனுக்கும் போகப்போகுது. ஆக உங்களுக்கு வம்சவிருத்தி அவசியப்படாதுங்கிறது உங்க குலதெய்வ சித்தம்னு நினைச்சிகோங்க. இனி உங்களுக்கு அப்புறம் குலதெய்வ பூஜையை உங்க தம்பியும் வம்சாவளி பேரனும் தொடர்ந்து எடுத்துச் செய்யப்போறாங்க.

வாழையடி வாழையா சந்ததிகள் இருந்தாதான் மூதாதையர்கள் மோட்சம் போவாங்கனு சாஸ்திரம் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க. அவங்களே திரும்ப வந்து ஜனனம் எடுத்துப் பாவத்தைக் கழிக்க ஒரு வாய்ப்பு வரும்ங்கிற காரணத்துக்காகச் சொல்லபட்டது. இப்போ சொல்லுங்க உங்களுக்கு என்ன அவசியம் திரும்பி வந்து உங்க வம்சாவளியில பிறக்க? உங்க கிளையில் உங்களோடேயே ராகு-கேது சாபம், பிராரப்த கர்மா எல்லாம் நீர்த்துப் போச்சுங்கிறதுதான் நிஜம்" என்று சொல்லித் தேற்றினேன்.   

“ஓஹோ... இதுல இப்படியொரு சூட்சுமம் இருக்கோ...  இது தெரியாம போச்சே..  நான் எதுக்கு மனச போட்டு உளப்பணும்? எனக்கு இந்த வயசுல உன் மூலமா இது புரியணும்னு இருக்கு. சரிதான்! சந்ததி இல்லைனாதான் என்ன? நல்லா தெளிவா உணர்த்திட்ட. இன்னொருக்கா வரும்போது வீட்டுக்கு வந்துட்டுபோ” என்றார் மகிழ்ச்சிக் குரலில்.

- எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக