வீடு மனைவி மக்கள் செல்வம் என எல்லா உடைமைகளையும் உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது என்கிறது இந்தப்படம். இந்தத் தத்துவம் உண்மை என்றாலும் நிஜவாழ்க்கையில் சாத்தியம் இல்லை. மூட்டைகளை ஏன் சுமக்க வேண்டும்? இந்தச் சுமைகள் வேண்டாம் என ஆரம்பத்திலேயே தீர்மானித்துக் கொண்டால், சங்கடங்கள் வராது. ஆனால் சமூகம் அப்படி விடாது, கட்டாயப்படுத்தும். அப்படியான சுமைகளை ஏற்றிவிட்டு இப்படியான ஓர் உபதேசத்தைத் தந்தால் அவன் என்ன செய்வான்? ஐயோ பாவம்! அவன் ஜாதகத்திலே சன்னியாசி யோகம் போன்றதொரு அமைப்பு இருந்தால் தப்பித்தான். ஆனால் அது எல்லோருக்கும் வாய்க்காது.
ஒரு நடுத்தர குடும்பஸ்தன் மூட்டைகளை உதறுவது எப்போது?
* வீட்டிற்கான மாத EMI கட்டவேண்டும், அசலை மொத்தமாக அடைத்தபின்...
* பொருளீட்டி வைத்து மகனை/மகளைக் கரை சேர்த்த பின் ....
* மனைவியை அம்போவென விடாமல் அவளுக்கான மாதவருவாய் ஏற்படுத்தித் தந்தபின்...
நடுவில் வேலை பறிபோகாமல் இருந்து மாத சம்பாத்தியம் தொடர்ந்து வந்தால் ஒருவாறு சமாளிக்கலாம். இதெல்லாம் நிறைவேறவே அறுபது வயதாகிவிடும். அப்போது மூப்பினால் சர்க்கரை/ ரத்தக்கொதிப்பு/ மூட்டுவலி எல்லாம் படை எடுத்துவந்து மோதும். மருத்துவச் செலவும் பலகீனமும் ஏற்படும். எல்லாம் தீரும்வரை இறைவனைச் சுமக்க வாய்ப்பே அமையாது. அகக்கடல் உறங்கி அமைதி கொள்வது எப்போது? திடீரென விரக்தியில் உதறிவிட்டு ஓடிப்போனால் உண்டு. ஆனால் அதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும்.
எங்களுக்குத் தெரிந்த ஒரு பாட்டியம்மா, வயது 99. அவர் சில மாதங்களுக்கு முன் இறந்தார். அவருக்கு ஆறு பெண் பிள்ளைகள். சுமார் 60 வருடங்களுக்கு முன் அவருடைய கணவர் பெரிய தொழில் செய்து நொடிந்து போனார். கடன் தொல்லைகளாலும், பெண்களைக் கரை சேர்க்க முடியாத அச்சத்தாலும் வீட்டைவிட்டு ஓடியே போனார். பிறகு காலவோட்டத்தில் தாயும் மகள்களும் கஷ்டப்பட்டு உழைத்து ஒருவாறு காலூன்றி நின்றனர். அந்தக் கிழவர் கடைசிவரை வரவில்லை. நான் பார்க்கும்போது கால்கள் பலமிழந்த நிலையில் அந்தப் பாட்டி தரையில் உட்கார்ந்தே நகர்ந்து போவார். வெளியில் எங்கேனும் செல்ல மட்டும் சக்கர நாற்காலி.
படத்தில் உள்ள சங்கதிபடி மூலவனைச் சுமக்கவே அக்கிழவர் இப்படிச் செய்தார் என்று அன்று நடந்த உண்மை நிலையை அறியாதோர் நினைக்கலாம் அல்லவா?
போகர் தன்னுடைய குரு காலாங்கியின் வாழ்க்கையைப் பற்றி விவரிக்கையில், "பெண்ணாசை அறுத்துத் தன் மக்களை வெவ்வேறாய்ப் போய் எங்கோ திரியும் என்று விடுத்தார்" என்கிறார்.
பக்தியோகம் தவிர பெருஞ்சித்தர்கள் செய்ததை எல்லாம் நிஜ வாழ்க்கையில் சாமானியர்கள் பின்பற்ற முடியாது என்பதே நிதர்சனம். ஜெனித்தது முதலே இறைவனை ஆன்மரூபமாய்ச் சுமந்துகொண்டுதான் வாழ்கிறோம். உள்ளே ஒருவன் உள்ளான் என்பதை இளம் பிராயம் முதலே உணர்தல் சிறப்பு. நம்முள் குடியிருப்பதால் நம் பாரத்தை அவன்தான் சுமக்கிறான் நாமல்ல என்று நினைத்தால் எதையும் உதறித்தள்ள அவசியமில்லை.
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக