“இலங்கையில் நான்கு தந்தங்களுடன் பெரிய யானை இனங்கள் Gomphotheres இருந்ததா? இராவணனின் தேசத்தில் என்னனென்ன அதிசயங்கள் இருந்தன?” என்று ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.
வால்மீகி இராமயணத்தில் சுந்தர காண்டத்தின் சர்கம் 4, பாடல்கள் 4,5 மற்றும் சர்கம் 9 பாடல்கள் 25,26,27 பகுதியில் இராவணனின் கோட்டையைச் சுற்றி அனுமன் பார்த்த அதிசயங்கள் பற்றி விரிவாகக் காணக்கிடைக்கிறது.
“இராவணின் உள்சுற்றுக் கோட்டையில் வீர அனுமன் நுழைந்தான். அது சொர்க்கத்திற்கு நிகராக இருந்தது. குதிரைகள், யானைகளின் ஒலிகள் எதிரொலித்தன, தேர்களில் பூட்டிய உலோக மணிகளின் சப்தமும், ஆகாய விமானங்கள் எழுப்பும் ஓசையும் காதைப் பிளந்தன. நான்கு தந்தங்கள் (சதுர்தந்த), மூன்று தந்தங்கள் (த்ரிதந்த) கொண்ட யானைகளும் காவலுக்கு இருந்தன. அவனுடைய பிரம்மாண்ட கோட்டையின் வாயில் தோரணங்கள் அழகானதாகவும், கோட்டையைச்சுற்றி வலிமையான ராட்சதர்களும், வெளியே கூர்வேல் ஏந்திய வீரர்களும் எந்நேரமும் காவலுக்கு இருந்தனர். உள்ளே பெரிய அளவில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது” என்று வால்மீகி இராமாயணம் சொல்கிறது.
அதை நம் சித்தரின் பாடல்களோடு ஒப்பீடு செய்து பார்ப்பதுதான் சரியாக இருக்கும். திரேதா யுகத்தில் பார்த்ததையெல்லாம் போகர் தன்னுடைய சப்தகாண்டத்தில் உரைக்கிறார். காலாங்கிநாதர் அவருக்கு விளக்கியது போக போகரும் பார்த்த கோட்டை அதிசயத்தை ஆறாம் காண்டத்தில் புலிப்பாணிக்குச் சொல்கிறார்.
“வெகுகோடி காலங்களுக்கு முன் பொன்னிலங்கையின் மன்னன் தசமுக இராவணனின் கோட்டையில் பார்த்த வளமான அதிசயங்கள் மிக்கவுண்டு. தேர் ராஜரின் கோட்டை விண்ணை முட்டும், சண்ட மாருதமும் பிரசண்ட மாருதமும் வீசும் வகையில் கோட்டைக்குள் ஆழியும் வந்து போகும், எழும்பி வடியும் முகத்துவாரமும் உண்டு. அவனுடைய கோட்டையைச் சுற்றி பராகிரம ராட்சதாள் நிறைய பேர் காவலுக்கு இருந்தனர். தூரத்தே வானரர்களும் கண்டேன். தேர்வேந்தனின் அதிசயிக்கும் ரதகஜ தோற்றங்களும் அதன் சப்தங்களும் அதீதமாய் அச்சுறுத்தும் வகையில் இருந்தன” என்று போகர் சொல்கிறார்.
இராமாயணம் அண்மையில்தான் நடந்திருக்கும் என்றோ அது வெறும் கட்டுக்கதை என்றோ பலர் திரித்துச் சொல்லும்போது, வால்மீகியும் போகரும் அது அப்படியல்ல, வெகுகோடி வருடங்களுக்கு முன் திரேதா யுகத்தில் நடந்தது என்று அடித்துச் சொல்வதைக் காட்டிலும் சான்று வேண்டுமோ? தேவபாடையில் இயற்றிய வால்மீகியும், நற்றமிழில் இயற்றிய போகரும் உரைத்த இராவணன் கோட்டையின் அதிசயங்கள் யாவும் பொய்யல்ல மெய்!
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக