வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும், சுகமும் துக்கமும், வெற்றியும் தோல்வியும், அவ்வப்போது வந்து போவது இயல்பு. உண்மையில் அவை நிரந்தரமற்ற மாறும் வெளிப்பாடுகள் என்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. குளிர் வெயில் மழை இரவு பகல் என மாறுகின்ற தன்மையைப் போன்றது.
ஒரு காலத்தில் வாழ்ந்த ஏற்றமிகு வாழ்க்கையை நினைத்தோ, எப்போதோ அடைந்த வெற்றியை நினைத்தோ, அனுபவித்த சுகத்தை நினைத்தோ, நிகழ்காலத்தில் இக்கணம் நினைத்து நினைத்து மனம் வெதும்புதல் கூடாது. அதற்கு மாறாக மனம் குதூகலித்தால் நல்லதே. ஆனால் நம்மில் பலர் செய்வது என்ன? கட்டிய வீடு போச்சு, போட்ட நூறு பவுன் நகை போச்சு, வியாபாரம் போச்சு, நல்ல வாழ்க்கை போச்சு, உடல்நலமும் போச்சு, இனி எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று அங்கலாய்ப்போரே அதிகம். அதனால் மன உளைச்சல்தான் ஏற்படும்.
அதனால் இன்றைய நிலையுடன் ஒப்பீடு செய்துகொண்டு தோல்வி ஏமாற்றம் துக்கம் ஆகியவற்றை நினைத்து மனம் கவலை கொள்ளக்கூடாது. அவற்றை ஒரு படிப்பினையாக மனம் ஏற்கவேண்டுமே தவிர இன்று உட்காந்து புழுங்குவது சரியல்ல. மத்திமமாய் வாழப்பழகினால் நிம்மதி தங்கும்!
சுகம் துக்கம், வெற்றி தோல்வி பற்றியே சதா நினைத்தால் அவை எல்லாம் தன் ஊழ்வினைப்பயனே என்பதையும் மனம் ஒப்புக்கொண்டு ஏற்கவேண்டும். இந்தச் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டு மௌனமாய் இருந்தால் அதுவே உத்தமம்.
வாழ்ந்து கெட்டவன் என்றால் வாழ்க்கையில் இதுவும் கடந்து போகும் என்பதைப் புரிந்துகொண்டு அனுபவத்தால் மீண்டு எழுந்து விவேகத்துடன் எளிமையாக நிறைவுடன் வாழ்பவன் என்பதே பொருள்.
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக