About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 2 செப்டம்பர், 2023

ஆதித்யா!

கற்பம் ஒரு மண்டலம் உண்டால் ஜோதிமய சந்திரர்கள் சூரியர்களுக்கு ஒப்பாக தேகவொளி கூடும் என்று ஐந்தாம் காண்டத்தில் போகர் கூறுகிறார். பன்மையில் சொல்வதைப் பார்த்தால் இப்பிரபஞ்சத்தில் பல்லாயிரம் அண்டங்களும் அதில் பல சூரியர்கள் சந்திரர்கள் இருப்பது புரிகிறது. தன் குரு காலாங்கி ஆயிரத்தெட்டு அண்டங்களைப் பார்த்துள்ளதாக ஒரு பாடலில் உரைக்கிறார்.


நம் கண்களுக்குத் தெரிவது என்னமோ ஒரு சூரியன் சந்திரன். ஆனால் அவர் சொல்வதைப் பார்த்தால் இந்தச் சூரிய குடும்பத்தில் இன்னும் எத்தனை சூரியர்கள் உள்ளனர்? விவஸ்வன் ஆர்யமான் துவஷ்டா சவிது பாகா தத்தா மித்ரா வருணா ஹம்ஸா பூஷன் இந்திரா விஷ்ணு என மொத்தம் பன்னிரண்டு. துவாதச ஆதித்யர் என்று புராணங்கள் சொல்கிறது. ஆதித்யா என்ற பொதுவாக அழைக்கப்படும் இவர்கள் சுழற்சி முறையில் யுகம்தோறும் சூரிய பதவி ஏற்பார்கள்.

உதய காலத்தில் சூரியன் வெளிப்படும்முன் அவனுடைய தேர்க்குதிரைகளைச் செலுத்தும் அருணன்தான் முதலில் வெளிப்படுவான். அதனால்தான் அந்தப்பொழுதை அருணோதயம் என்கிறோம். சிவபெருமானின் வலது கண்ணாகச் சூரியனும் இடது கண்ணாகச் சந்திரனும் திகழ்வது நாம் அறிந்ததே. சூரியரிஷியார் மேருவில் கிழக்கு முகமாக யாகம் செய்து கிரண காந்தியைக் கூட்டிச் செந்நிற ஒளியுடன் தன்னைச்சுற்றி அக்னிமண்டலத்தை வியாபிக்கச் செய்துள்ளார். உண்மையில் சூரியன் ஒரு நட்சத்திரம் என்றாலும் அதற்கென ஒரு தனித்துவம் உள்ளது. அது சுழன்றபடி இருக்க அதைச் சுற்றியுள்ள அக்னி மண்டலத்திலிருக்கும் வாயுக்களின் அணுவானது பிளாஸ்மா பிழம்பாக வெளிப்படுகிறது.

சூரிய வனத்தில் அபூர்வ மூலிகைகளும் மலர்களும் உள்ளன என்று போகர் சொல்வது நம்மால் நம்பமுடியாத ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இது ஒரு வேளை சூரியரிஷி மேருவில் அமர்ந்து யாகம் செய்யும் இடத்தில் வேண்டுமானால் இருக்கலாம், தகிக்கும் சூரியனில் அல்ல என்றுதான் நான் நினைக்கிறன்.  நம் ஊனக்கண்களுக்கு மேருவில் அரூபமாக நடப்பவை எதுவும் தென்படாது.

சூரியன் சுமார் 6000 டிகிரி செல்சியஸ் வெப்பம் வெளிப்படுத்துகிறது என்றும், அதன் வெளிப்பரப்பில் பல லட்சம் டிகிரி தகித்துக்கொண்டு Corona discharge ஆகிறது என்று அறிவியல் கட்டுரைகளில் நாம் படித்துள்ளோம். தொலைவில் உள்ள பூமிக்கு வந்து சேரும்போது 30° முதல் 45° டிகிரிவரை உத்தராயன/ தக்ஷணாயன பருவகாலத்தைப் பொறுத்து நிலவுகிறது. நம் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற வெப்பத்தை இயற்கை பராமரிக்கிறது. இதைப் பற்றி முன்னொரு சமயம் இறையாளரும் மருத்துவருமான டாக்டர் பத்மனாபராவ் அவர்கள் என்னிடம் பேசும்போது சொன்ன விவரங்களை நினைவுபடுத்திப் பார்க்கவும். 

நம் சூரிய குடும்ப கிரகங்களைச் சுற்றி சிறியதும் பெரியதுமாக மொத்தம் இருநூறுக்கும் மேற்பட்ட சந்திரர்கள் உள்ளதெனத் தெரிகிறது. Parallel Universes எனப்படும் மற்ற அண்டங்களிலுள்ள சந்திராதித்யர்களின் எண்ணிக்கை எத்தனை இருக்குமோ ரிஷிகளுக்கே வெளிச்சம். கீதையில் கிருஷ்ணர் “அர்ஜுனா, அப்பாலில் எத்தனையோ அண்டங்களும் சூரியன்களும் உள்ளன. அவை உன் கண்களுக்குப் புலப்படவில்லை என்பதால் அவை எதுவும் இல்லை என்று மட்டும் நினைத்துவிடாதே” என்கிறார்.


இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா L1 ராக்கெட் அங்கே சரிசம ஆகர்ஷண Lagrangian விசைப்பகுதியில் இருந்தபடி என்னவெல்லாம் ஆராயும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

“ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத் யுதிகாராய தீமஹி தந்நோ ஆதித்ய ப்ரசோதயாத்”

-எஸ்.சந்திரசேகர்

1 கருத்து: