முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் கருங்காலி கட்டையில் செய்த வழு வழுப்பான கொண்டபள்ளி மரப்பாச்சி ஆண்/பெண் பொம்மைகள் சர்வசாதாரணமாக இருக்கும். இப்போதும் உள்ளது.
தவழும் பிராயத்தில் உள்ள குழந்தைகள் அதை வைத்து விளையாடும், வாயில் வைக்கும், கடிக்க முற்படும். அந்த மூலிகைக் கட்டை, வாய் உமிழ்நீரில் ஊறி மருத்துவ குணம் ஏறுவதால் அதை விழுங்கும்போது தேகம் வலுப்பெறும். பொதுவாகவே இப்பொம்மைகள் நம் வீடுகளில் நவராத்திரி கொலு சமயத்தில் மட்டும் தலையைக் காட்டும். கருங்காலி இலைச் சாறில் பருத்தி நூல் கண்டை நனைத்து உலர்த்திய பின் அதை வைத்து இரும்பை, கண்ணாடியை அறுக்கலாம் என்கிறார் போகர்.
இன்று கருங்காலி பொம்மையை வைத்து எந்தக் குழந்தையும் நவீன நகரங்களில் விளையாடுவதில்லை. சித்த வைத்தியப் பாடல்களில் கருங்காலிக்கு நல்லதொரு மதிப்பு. வியாபாரத்திற்கு வேம்புக் கட்டையில் பொம்மைகளைச் செதுக்கி அதற்குச் சாயம் ஏற்றி அதை வைரம் பாய்ந்த கருங்காலி கட்டையெனச் சொல்லி அதிக விலைக்கு விற்கின்றனர். அந்த மாலையை அணிந்தால் நற்பலன் கிட்டுமா அல்லது உள்ளது அனைத்தும் துடைத்துக்கொண்டு போகுமா என்பது ஜோசியருக்கே தெரியாது. உண்மையான மாலை தண்ணீரில் மூழ்குமா, நீரின் நிறம் மாறுமா என்பதைப் பரீட்சித்துப் பார்த்து உடனே ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது.
திடீரென கடந்த ஓராண்டாக கருங்காலி/ செங்காலி மாலைக்கு நல்ல கிராக்கி வந்துள்ளது. கருங்காலி மரங்களெல்லாம் அழியத் தொடங்கும். ஜாதகத்தில் உள்ள கோள்களின் தசாபுத்தி மோசமாகவே இருந்தாலும் குலதெய்வத்தை வேண்டிட அவரவர் இன்னல்கள் குறையும்.
வனத்திலுள்ள எல்லா மரங்களின் கட்டைகளுக்கும் வேர்களுக்கும் மருத்துவ குணமும் கருதொழில் சக்தியுமுண்டு. நம் சித்தர் பாடல்களில் கணக்கில்லாமல் பல மூலிகைத் தாவரங்களின் முக்கியத்துவம் சொல்லப்பட்டுள்ளது. கருங்காலி மரம் இருக்கும் இடத்தில் இடி தாக்காது, தீய சக்திகள் அண்டாது, மந்திர பீஜ ஒலியை வேகமாய் ஈர்த்துக்கொள்ளும். கோயில் கும்பாபிஷேகத்தின்போது கலசத்தில் கருங்காலி கட்டையும் நவதானியத்துடன் இருக்கும். சூரிய வெப்பக்கதிர்களின் தீமையைத் தடுக்கும்.
நம் பங்கிற்கு ஏதையேனும் புதுமையாகச் சொல்லி மக்களின் ஆவலை மேலும் கிளப்பிவிடுவோமே! எருக்கன் மாலை, நெருஞ்சி மூக்குத்தி, தர்ப்பை மோதிரம், வேப்பந்தோடு, ஆமணக்கு ஒட்டியாணம், ஆலம் விழுது வளையல், ஏறு சிங்கி ஊன்றுகோல், என பலதும் பயன்படுத்தி நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுங்கள். 😂
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக