“கருத்தரிக்காத கன்று ஈன்றாத பசுவுக்குப் பால் சுரக்குமா? குருடாகிப் போன கண்ணில் பார்வையும் வெளிச்சமும் தெரியுமா? பேசாமல் மௌனம் காத்தால் அங்கே உரையாடல் ஏது கேள்விகள் ஏது? குணம்கெட்ட வேசிப்பெண்ணுக்கு வாழ்க்கை ஏது? எவ்வயதிலும் கல்லாமல் வீணாய்க் கழித்தவர்க்குக் கல்வி வாய்க்குமா? எதையும் காணமல் இருப்பவர்க்குக் காட்சிதான் தெரியுமா? மதித்து அண்டிப் பணியாத சீடனுக்கு நல்ல குரு வாய்க்குமா? வேடிக்கையாய் வாழ்க்கையைக் கழித்தால் எல்லாம் பாழாகிப்போகும் பார்” என்று சுப்பிரமணியர் ஞானம் நூலில் முருகப்பெருமான் அகத்தியர்க்கு உபதேசிக்கிறான்.
மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் நமக்குப் பொதுவானது. ஆனால் இதற்கு மாறாகவும் சில சமயம் நடப்பதுண்டு. திருவண்ணாமலை மாவட்டத்தில் எங்கோ ஒரு பத்து வயது பசுவானது கன்று ஈனாமல் தினமும் 4 லிட்டர் பால் கறக்கிறது என்று முன் எப்போதோ செய்தித்தாளில் படித்துள்ளேன். புறக்கண்கள் குருடாகியும் அகக்கண்கள் மூலம் ஞானவொளிச்சுடர் பிரகாசத்தைக் கண்டவர்கள் உண்டு. மௌனம் நிலவினால் அங்கே வார்த்தைகள் இல்லை. ஆனால் பகவான் ரமணர் பேசாமல் இருந்து தன் சீடர்களுக்கு உபதேசித்தார். அவரிடம் இந்த அனுபவத்தை மஹாத்மா காந்தியும், பரமஹம்ச யோகனந்தாவும் பெற்றதாகத் தங்கள் சரிதையில் சொல்லியுள்ளதைப் படித்துள்ளேன்.
முறை தவறிய நடத்தையைக்கொண்ட பெண்ணுக்கு வாழ்க்கை அமைந்தாலும் அது நீண்டகாலம் ஆரோக்கியமாய் நீடிக்காது. கல்வி கல்லாதவனுக்கு ஞானம் கிட்டும். எப்போது? விட்டகுறையாலே எல்லா ஞானமும் ஓதாமலே ஓதப்பெற்றவனுக்கு. எத்தனையோ மஹான்கள் இதற்குச் சான்று. எதையும் நேரடியாகக் காணாதவர்க்கு நடந்தது என்ன என்று தெரியுமா? தெரியும்! தூரதிருஷ்டி சக்தியால் அந்தக் காட்சிகளை உட்கார்ந்த இடத்திலேயே காணலாம். பாண்டவர்- கௌரவர் இடையே நடக்கும் மகாபாரதப்போர்க் கட்சிகளை அரண்மனையில் இருந்தபடியே சஞ்சயன் திருதிராஷ்டிரர்க்கு விளக்கிச் சொன்னது இப்படித்தான்.
பணிவு பக்தி இல்லாத சீடனுக்கு நல்ல குரு வாய்க்க மாட்டார். குரு இல்லாத வித்தை பாழ். ஆனால் எந்த குருவையும் நாடிப்போகாமல் அந்த இறைவனே நம்மை நாடி வந்து குருவாக இருந்து போதித்தால் அதைவிட என்ன இருக்க முடியும்? ஒருவன் தன் வாழ்க்கையில் எதைப்பற்றியும் சிந்தியாமல், பந்த பாசம் சொத்து சுகம் எதிலும் நாட்டமின்றி விளையாட்டாய் இருப்பதுபோல் வெளியுலகிற்குத் தெரிந்தாலும், சித்தம் கலங்கிய வெள்ளிப்பாடு இருந்தாலும் அவனுடைய வாழ்க்கை வீணாகாமல் பரப்பிரமத்தையே சேரும்.
ஆக, முருகன் உபதேசித்த விதிகளுக்கு மாறாகவும் நடக்கும். அப்படி நடந்தால் அது அவனருளால் நடக்கும் திருவிளையாடலே! ஓம் சரவணபவ. 🙏
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக