தங்கம்/வைரம் வியாபாரம் செய்யும் செட்டியின் தொழிலும் சொல்லும் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை கொண்டது என்பதை யாகோபு சித்தர் தன் பஞ்சமித்திரம் நூலில் நகைச்சுவையாக உரைக்கிறார்.
"சுமார் எட்டு மாற்று தரமுள்ள ஒரு தங்கநகையைக் கொண்டுபோய் ஒரு செட்டியிடம் கொடுத்தால், அதை அவன் கருமைநிற உரைகல்லில் அழுத்தித் தேய்த்தும், அதன்பின் வில்லில் நாண்போல் பூட்டி இழுத்துப் பார்த்தும் அதன் தரத்தைச் சோதித்தபின், இந்தத்தங்கம் அப்படி ஒன்றும் துடிப்புடன் இல்லை, இதன் மாத்து ஐந்து இருந்தால் அதிகம், அதனால் நான் எடுத்துகொள்வது இல்லை என்று பூத்த பூவின் அழகுச்சிரிப்பை உதிர்த்தாற்போல் நல்லவன் முகத்துடன் சொல்வான்.
இன்னொரு கடைக்குப் போய் நகையைக் காட்டினால், நான் பார்த்துச் சொல்கிறேன் என்பவன், இன்னும் அந்த நகையை மேலும் அழுத்தமாய் உரசித்தேய்த்துப் பார்த்து, இது வளமான தங்கமில்லை காணும், மாத்து ஆறு வரும், இதை நான் எடுப்பதில்லை என்று அவனும் சொல்வான்.
கொண்டுபோன வளமான தங்கத்திலிருந்து இப்படியே ஆளாளுக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் பொன்னைத் திருடிக்கொண்டு இறுதியில் அதன் தரத்தைத் தாழ்த்தி விடுவார்கள். இவ்வாறு அவனுடைய போக்கு இருந்தால் அவன் வாத தங்கமெடுத்து நகை செய்தாலும் அதை ஒருவரும் நம்பமாட்டார்."
இன்றைய காலத்தில் பொன்னின் தரம் அறிய உரைகல், அமிலம், ஹால்மார்க் முத்திரை, கேரட்மீட்டார், என பல தொழில்நுட்ப முறைகள் பயன்பாட்டில் உள்ளன. நம் சித்த இலக்கியத்தில் ‘நாத வேதை மூலம் தங்கம், காந்தரசம் மூலம் தங்கம், வாசித்தங்கம்’ என்று பல்வேறு முறைகளில் தங்கம் பெற்றது இப்போது நினைவுக்கு வருகிறது.
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக