என்னுடைய பழைய பதிவு ஒன்றைப் படித்த நண்பர் கேள்வி கேட்டிருந்தார்.
"சைவ உணவுதான் சரி, அசைவம் நமக்கு உகந்ததல்லனு சொல்லியிருக்கீங்க. அப்படி பார்த்தா... கருப்புசாமி ஆடு சாப்பிடுகிறார், கண்ணப்பன் சிவனுக்கு மாமிசம் படைச்சான், சிறுத்தொண்டர் பிள்ளை கறி கொடுத்தார், அகோரிங்க நரமாமிசம் திங்கறாங்க, புத்தர் பன்னி கறி தின்னாரு, ஏசு மீன் சாப்பிட்டார், ராமகிருஷ்ணர் பலி கொடுத்தார், இதுக்கு என்ன சொல்லுவீங்க? அடுத்தவன் சாப்பாட்டைப் பற்றி தப்பா பேசுறது தப்புதானே?" என்று கேட்டார்.
"ஆமாங்க, உங்க சாப்பாட்டை விமர்சிக்க யாருக்கும் அதிகாரமில்லை. புலால்/ கள்ளுண்ணாமை பற்றி திருக்குறள்ள இரண்டு மூன்று அதிகாரம் இருக்கு. நம் மாநில அரசு திருக்குறள், திருவள்ளுவர் பற்றி உசத்தியா சொல்லுது. அப்படி பார்த்தா கசாப்பு/ சாராயக் கடைங்க இருக்கக்கூடாதில்ல? ஆனா, ஆண்டுக்கு ஐம்பதாயிரம் கோடிவரை டாஸ்மாக் நல்லா வசூல் ஆகுதாம்.
வள்ளலார்கூட புலால்/கள் எதிர்த்துப் பேசி இருக்கார். அக இனம்/ புற இனம், அப்படீன்னு சைவம்/அசைவம் உண்ணும் மக்களை வேறுபடுத்தி, புறயினம் மக்கள் தன் சங்கத்திற்கு வரக்கூடாதுனு அப்பவே கன்டிஷனா சொன்னார்.
கண்ணப்பன், குகன் எல்லாம் மூடபக்தில மாமிசம் படைச்சாங்க, சிறுத்தொண்டர் பிள்ளக்கறி சமைச்சு கொடுத்தது ஈசன் திருவிளையாடல், அகோரிங்க தாந்திரீக சக்திக்காத உண்பாங்களாம், அது போக வேத மதம் சாராதவர்களான புத்தர் ஏசு எல்லாரும் சாப்பிட்டது ஆச்சரியமில்லை. கருப்புசாமி/காளிக்குப் பலியிடும் பழக்கம் காலங்காலமாவே இருக்கு. அந்த பலி படையலைப் பிரசாதமாகப் பக்தர்கள் உண்ணவேண்டும் அல்லது மண் தோண்டிப் புதைக்க வேண்டும்.
இந்தக் காலத்தில் வள்ளுவர்/வள்ளலார் பேச்செல்லாம் எடுபடாது. உங்க வாய் உங்க விருப்பம், யார் என்ன சொல்றது? மனசை போட்டு வருத்திக்காதீங்க. நல்லா புகுந்து விளையாடுங்க" என்றேன். அசைவம் சாப்பிடுவதை விடக்கூடாது என்ற கொள்கையுள்ள ஒருவரிடம் நாம் எதை விளக்கிச் சொன்னாலும் சற்றும் புரியப் போவதில்லை. எதற்கு மல்லு கட்டி நிற்கவேண்டும் என்று விட்டுவிட்டேன். அப்பாடா என்று அவருக்கும் மனநிறைவு. 😂
-எஸ்.சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக