About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 13 மார்ச், 2026

தென்னை மரத்தில் தேள் கொட்டினால்...!

இன்னும் சிறிது காலம் போர் நீடித்தால் உலகெங்கும் அதன் தாக்கம் பெருமளவில் பாதிப்பைத் தரும். இறக்குமதியாகும் கச்சா எண்ணெய், எரிபொருள், எரிவாயு சார்ந்தே இத்தனைக் காலமும் ஓட்டியாகிவிட்டது. இனி மாற்று உபாயம் வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இனிமேல் தற்சார்பு வழியே உதவும்.

சூரியசக்தி, தாவர எரிபொருள், பயோகேஸ், மற்றும் புதுப்பிக்கவல்ல எல்லா வழிகளும் கையாள வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது கண்கூடு. குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு கார் என்ற பந்தா மேல்தட்டு கலாச்சாரம் தீவிர எரிபொருள் பற்றாக்குறையை விளைவிக்கும்.

கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை பீதியால் induction stove, electric rice cooker இன்னும் அதிகமாக விற்பனையாகிறதாம். அது சரி. ஆனால் இதன் அதிகரித்த தேவை மின்சாரப் பற்றாக்குறைக்கு வழி வகுக்கும். நான் கணக்கெடுத்தவரை மும்முனை இணைப்பு உள்ள வீடுகளில் கோடையில் இனி AC, Fridge, Washing machine, Induction stove, Electric rice cooker, RO, Inverter, Fan, Light, kettle எல்லாம் ஒரே நேரத்தில் ஓடினால் ஆச்சரியமில்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் அனுமதிக்கப்பட்ட 5 kw அளவைவிட மொத்த பயன்பாட்டு அளவு தாண்டிவிடும். கூடுதல் ASD விதிக்கப்படும்.

இன்னும் சிலர் வீடுகளில் முன் எப்போதோ மின்வெட்டு ஆனபோது எல்லா phase selector switch ஒரே முனையில் திருகி வைத்து அதை அப்படியே மறந்து போனவர்களும் உண்டு. மின் பளு அதிகமாகி கம்பத்தில் இருந்து வீட்டு மீட்டர் பாக்ஸ் மெயின் போர்டுக்கு வரும் கேபிள் உருகும் அபாயமும் எழும். அப்படியானால் ஒரு/ இரு முனை சப்ளை மட்டும் வரும். இதனால் மின் பளு Load demand அதிகமாகும். வரும் வாரங்களில் அடிக்கடி டிரான்ஸ்பார்மர் ட்ரிப் ஆவதும் நடக்கும். 

ஆக அவரவர் வீடுகளில் மின் பயன்பாட்டை விழிப்புடன் sanctioned load அளவுக்குள் பயன்படுத்த வேண்டும்.

-எஸ்.சந்திரசேகர்



செவ்வாய், 3 மார்ச், 2026

விருந்து!

 சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை எல்லா ஊர்களிலும் இது போன்ற திருமண விழா விருந்து நடந்தது என்றால் இக்காலத் தலைமுறையினர் இதை அதிசயமாகப் பார்ப்பார்கள். முட்டுச்சந்து என்றால் நீளமாகப் பந்தல் போட்டு வழியை அடைத்து விடுவது வழக்கம். என்னதான் மேஜைகள் நாற்காலிகள் போட்டு விருந்து பரிமாறப்பட்டாலும், இன்னொருபுறம் பந்தலுக்குக் கீழே தரையில் உணவுப் பந்தி களைகட்டும். விசேஷத்திற்கு வரமுடியாத முதியவர்களுக்கு தூக்கு சம்படங்களில் எடுப்புச்சாப்பாடு வீட்டுக்கே போகும். நானும் food delivery எடுபுடி செய்துள்ளேன்.

"டேய் இதுல எல்லாம் வெச்சு அனுப்பினானா பாத்தியா?" என்று உள்ளிருந்து ஒரு குரல். "இருக்கு பாட்டி... திறந்து பாரு... பெரிய மைசூர்பா இருக்கு, தாத்தாவாலதான் அதை கடிக்கமுடியாதே நான் எடுத்துக்கவா?" என்று அடாவடியாகக் கேட்டு வாங்கிய காலம். 😀

உறவுகள் சில நாட்களுக்கு முன்னதாகவே வந்து ஒன்றாக மகிழ்ந்த தருணங்கள்... நடுநடுவே சண்டையும் வரும் சமாதானம் செய்ததும் சரியாகிவிடும். அவர்களே தன்னார்வமாக வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு, காய்கறி அரிந்து தந்து, அப்பளம் வத்தல் வைத்து இட, அரிசி புடைக்க என பலவிதமான பணிகளைச் செய்தார்கள். ஆனால் தற்போது சில மணித்துளிகள்தான் உறவினர்கள் வந்திருந்து தலைகாட்டிவிட்டுப் போகின்றனர்.

பின்கட்டில் கோட்டை அடுப்பில் தடபுடலாக விருந்து சமையல் எல்லாமே தயாராகும். பெரியவர்களுக்குத்தான் மேஜையில் உணவு போடுவார்கள், சிறுவர்களுக்கு எட்டாது என்று நம்பிய ஒரு காலம். நானும் என் சிறுவயதில் இப்படிச் சாப்பிட்டுள்ளேன். 'இலை போட்டாச்சு' என்ற சங்கேத அறிவிப்பு நம் காதில் விழுந்த மாத்திரத்தில் அங்கே நீளமாக விரிக்கப்பட்ட பாயில் போய் இடம் பிடித்துக்கொள்வது இருக்கே அது ஓட்டப் பந்தயத்தில் வென்ற மகிழ்ச்சியைத் தரும். யாரும் உணவை வீணடித்ததில்லை. அது மிக அரிது!

ஆனால் இக்காலத்தில் மேஜையில் சுருள் காகிதம் உருட்டிக் கொண்டுபோக அதன் மேலே இலைகளைப் பரப்பி வைத்து அதில் திருமண மண்டபத்தில் சமைக்கப்படாமல் வெளியிலிருந்து தருவித்த 'பேக்கேஜ் மெனு' ஐட்டங்கள் பரிமாறப்படுகின்றது. அவை நமக்கு மனநிறைவைத் தருவதில்லை, பெரும்பாலும் குப்பைக்கே போகும்!

-எஸ்.சந்திரசேகர்

ஞாயிறு, 1 மார்ச், 2026

நெடுங்கால அரசாட்சி!

எகிப்தின் Ra என்கிற ரகுகுல வம்சப் பரம்பரை புகழ்பெற்றது. எகிப்தின் அறியப்பட்ட பேரரசான சீதை-ராமேசர் பார்வோன் பரம்பரை பதினெட்டாம் வம்ச ஆட்சி கிமு1580-1350வரை நீடித்தது என்றும், மன்னர் ஆக்கநாதன், சாகரன் வழியே வந்தபின், ஆக்கநாதனின் மகன் தட்டான் கமணன் பதிமூன்றாம் பார்வேந்தனாக Pharaoh அரசாட்சி செய்தார். ஆக்க நாதனின் நெருங்கிய நண்பரும் பார்வோனுமான மன்னர் தஷ்ரட்டா மிட்டானியின் மன்னராக கிமு 1358-1335 வரை ஆட்சியில் இருந்தார்.

சிறிய வயதினனான கமணன் ஒன்பதாண்டுகள் மட்டுமே அரசாட்சி செய்தார். தன் மாற்றாந்தாய் மகளான அங்கசேனாபதி (எ) அங்கசேனாமணியை மணந்தார் என்று குறிப்பு உள்ளது. அக்காலகட்டத்திலேயே சுமார் இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த மன்னராட்சியாக அப்பரம்பரை விளங்கியது என்றும், அப்போதே கெய்ரோவில் pyramid என்கிற ஆச்சரியமான பெரியமேடு அமைக்கப்பட்டிருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். 

கமணனுக்குத் தொடை எலும்பு முறிவும் பிறகு நோய் தொற்றும் ஏற்பட்டு பத்தொன்பதாம் வயதில் வாரிசுகள் இல்லாமல் இறந்ததாகத் தெரிகிறது. அதன்பின் அரசவை ஆலோசகர் ஆய், இந்த அரசி அங்கசேனாவை மணந்துகொண்டு நான்காண்டுகள் ஆட்சி நடத்தினார். இங்குள்ள படத்தில் மன்னர் கமணன், அரசி அங்கசேனாமணி, ராஜமாதா நாகபிராட்டி ஆகியோர் இருப்பதாக அங்குள்ள கல்லறை சுவரோவியம் காட்டுகிறது.

அங்கு பாதாள கல்லறைகளில் பதப்படுத்தி வைத்திருந்த மன்னர்களின் உடலில் என்ன நோய் வந்து இறந்தனர் என்பதைத் தொல்லியல் ஆய்வாளர்கள்/ விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். தங்கப்பேழையில் நவதானியங்கள் இருந்ததையும் கண்டுள்ளனர். அப்போதே புதுமையாக விவசாயப் பயிர்களைப் புகுத்திவிட்டனர் என்று உறுதி செய்துள்ளனர். 

இன்றும் உத்தர எகிப்தில் நீல நதிக்கரையின் கிழக்கே நாகா-எட்-தீர் என்ற மடாலய கிராமம் உள்ளது. அங்கே ஆயிரக்கணக்கான கல்லறைகள் கிமு3500-650 வரை ஆட்சி செய்த பரம்பரையாளர்களின் உடல்கள் உள்ளன. கடைசியாக முப்பதாம் பரம்பரை ஆட்சி நடக்கும்போது மாவீரன் அலெக்சாண்டர் போரிட்டு கைப்பற்றினான். அந்த எகிப்திய வம்சாவளி சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

-எஸ்.சந்திரசேகர்