About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 18 செப்டம்பர், 2026

ஒரு ADCயின் மறுபக்கம்!

நம் ஜனாதிபதியின் மெய்க்காப்பாளராக இருந்த மேஜர் ரிஷப் சிங் சம்பியல் கடந்த மாதம் இறுதியில் தன் பன்னிரண்டு வருட ராணுவப் பணியிலிருந்து விடுவித்துக் கொண்டார். முப்பது வயதான இளைஞர் துடிப்புடன் மிடுக்குடன் செயல்படுவதை நான் ரசித்துப் பார்த்திருக்கிறேன்.


இத்தனை ஆண்டுகள் தன் பெற்றோரை விட்டுப் பிரிந்திருந்ததும், அவர்களுடன் இராணுவ இணைப்பு ஃபோனில் பேச முடியாத சூழலில் இருந்ததாலும், தன் குடும்பத்திற்கு மகனாக ஆற்றவேண்டிய கடமைகள் இருப்பதாலும் இந்த முடிவை எடுத்ததாக ஒரு பேட்டியில் மனம் திறந்து சொல்லியிருந்தார். தன்னைப் பற்றிய வதந்திகளும் விமர்சனங்களும் பரவி வருவதைக்கேட்டு பெற்றோர் மிகவும் வேதனையடைந்தனர் என்றார்.

குறைந்தபட்ச 20 வருடப் பணிக்காலம் இல்லாததால் இராணுவ ஓய்வூதியம் கிடையாது. ஊடகவியல் சார்ந்த வருவாய் ஈட்டும் சில திட்டங்களை அவர் வைத்திருப்பதாகச் சொன்னார். திருமதி முர்மு அவர்களும் இவரும் பெற்ற தாய்- மகன் உறவாகவே வெளிப்பட்டனர். 

'என் தாய்நாட்டிற்கு இயன்றவரை சேவை செய்தாயிற்று, இனி பெற்றோர்க்கு சேவை செய்ய வேண்டும். என்னுடன் படித்தவர்கள் நண்பர்கள் எல்லோரும் இயல்பாக வாழும் வாழ்க்கையை என்னால் வாழ முடியாமல் போனது. வெளியுலகம் அறியாமல் சமுதாயத்தில் உறவாட முடியாமல் நான்கு சுவர்களுக்கு உள்ளே அடைப்பட்டதுபோல் இறுக்கமாக உணர்ந்தேன். இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்து கம்பீரமான அந்தச் சீருடையைப் போட வேண்டும் என்பதே 16 வயதினில் என் பள்ளிப் பருவக்கனவாக இருந்தது. அதுவே இனிமேல் வேண்டாம் என்று மனம் நினைத்தது. அதனால் பணியிலிருந்து விலகினேன்' என்று பேசினார்.

வீணர்களும் தத்திகளும் தம்முடைய தொகுதியில் எந்தவொரு சமுதாயப் பணியும் செய்யாமல் ஐந்தாண்டுகள் எம்எல்ஏவாக இருந்த பின் உரூ.20000 முதல் 60,000 வரை அந்தந்த மாநிலம் நிர்ணயித்த மாதாந்திர ஓய்வூதியமும், ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் மருத்துவ செலவுக்கும் பெறுகின்றனர். இதுவே மாநில நிதித்துறைக்குப் பெருஞ்சுமை!

மேஜர் ரிஷப் சிங் சம்பியல் போன்ற கர்ம வீரர்களுக்குச் சிறப்பு ஓய்வூதியத்தைத் தர பாதுகாப்புத் துறை பரிந்துரை செய்ய வேண்டும். போய் வா தம்பி, வெற்றி பெற வாழ்த்துகள்! 💐

-எஸ்.சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக