About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

பதுமை வித்தை!

 தாமா, வியாளா, கடா, இதெல்லாம் போர் புரியவல்ல அசுரத்தனமான பதுமைகள். அசுரர்களின் தலைவன் சம்பாரனால் மந்திர சாதனைகள் மூலம் உயிரூட்டப்பட்ட இவற்றுக்கெல்லாம் முற்பிறவி, அகங்காரம் என்று எதுவுமில்லை. அதனால் இவற்றைத் தோற்கடிப்பது கடினம் என்கிறது புராணம்.

கடவுளர்களுக்கு எதிராக அவற்றைப் போர் புரிய வைத்தால் அதை தோற்கடிப்பது முடியாத காரியம். அதனால் பிரம்மதேவனை அணுகி உபதேசம் பெற, அவரோ “அசுரப்பதுமைகளுக்குள் ‘நான்’என்ற அகங்கார தன்னுணர்வை விதைத்து விட்டால் எளிதில் அவற்றை வென்றிடலாம்” என்றார். சொன்னபடியே விதைத்து விட, பதுமைகளின் அகவலிமை நீர்த்துப்போனது. அதனால் தோற்றுப்போயின. இதன்பிறகு அவற்றுக்கும் தொடர் வினைப்பயன் வந்து சேர பல பிறவிகளை எடுக்கும்படி ஆனது.

இந்த தாமா வியாளா கடா என்பவைதான் பிற்பாடு பீமா, பாஸா, த்ருதா என்ற பிறப்புகளை எடுத்ததாக, வால்மீகி எழுதிய யோக வஸிஷ்ட நூலில் உள்ளது. 'வசிஷ்ட மஹாராமாயண தாத்பர்ய பிரகாசம்’ என்ற வடமொழி நூலை அடித்துத் தேடிப்பார்த்தேன், அத்தியாயம் 33இல் இந்த செயற்கை நுண்ணறிவு திறனூட்டப்பட்ட பதுமைகளைப் பற்றி, அவை உயிர்பெற்று மும்மலங்கள் ஈட்டி சாதாரணப் பிறவிகளை எடுத்து, அதன் பின் மோக்ஷகதி அடைந்தவரை விஷயங்கள் உள்ளன. சூரசம்ஹாரம் முதல் மகிஷாசுரவதம் வரை நடந்த எல்லாமே இந்த அடிப்படையில் சிருஷ்டிக்கப்பட்டு, அகங்காரம் விதைக்கப்பட்டு, பல பிறவிகள் எடுத்ததபின் வதம் செய்யப்பட்டு, இறையோடு ஐக்கியமாகிவிடுவது என்பது நமக்குத் தெரிந்த கதைகள்தான்.      

அதெல்லாம் சரி, நம் போகநாதர் இதைப்பற்றிச் சொன்னது என்ன? தன் எழாயிரத்தில் நான்காம் காண்டத்தில் ‘பதுமை வித்தை’ பற்றி சொல்லியுள்ளார். கோட்டைக்குள்ளே படைகளின் எதிரே நின்று பேசும் தளபதி போல் ஒரு பெண் பதுமையானது, கையில் வாளும் கேடயமும் ஏந்தி நிற்க, அதை எட்சிணி மந்திர வசியம் மூலம் பேச வைத்து, வாளையும் சுழட்டி வீசச்செய்து, பலருடன் போர் புரியச் செய்யமுடியும் என்று கூறியுள்ளார். இக்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திர ரோபோ போன்றே நினைத்துக்கொள்ளலாம்.

வெளிநாடுகளில் செய்தி வாசிப்பாளர், ரோபோ நாய், ஹோட்டல் சர்வர், விண்வெளிக்குப்போகும் இயந்திர மங்கை, அலுவலக வரவேற்பாளர், அறுவை சிகிச்சை மருத்துவர், என்று எல்லாமே ரோபோ மயமாகிவிட்டது. அப்படி என்றால் நம் சித்தரிஷிகளின் வாக்கும் உண்மையே!

-எஸ்.சந்திரசேகர்

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

கட்டை!

கோபத்தில் ஒருவரை யாரேனும் 'கட்டையில போறவனே' என்று வசை பாடினால் அது எனக்குச் சிரிப்பை வரவழைக்கும். ஒரு கட்டை இன்னொரு கட்டையைத் திட்டுது என்று நினைத்துச் சிரிப்பேன்.

"உண்ட மயக்கம்.. தூக்கம் வருது.. இப்படி கொஞ்சம் கட்டைய சாய்ச்சிக்கிறேன்."

"அவன் செம்ம நாட்டுக்கட்டை போல"

"டேய், இது உழைச்சு காப்பேறிய வைரம் பாய்ஞ்ச கட்டைடா"

நகைச்சுவையாக, ஆபாசமாக, வீரமாக, மேலே உள்ள இந்த வர்ணனை எல்லாம் இந்த அழுகும் உடலென்னும் கட்டையைப் பற்றியது என்பது விளங்கும். பாடை என்னும் கட்டை மீது போகும் கட்டையைப் பற்றியதுதான் முதல் வரியில் உள்ளது.

அவ்விதம் கட்டையில் சுடுகாடு போய்ச் சேராமல் தூலமாக இந்தக் கட்டையுடன் அப்படியே கயிலாயம் (எ) காடுவெளிக்கு ஏறிப்போனால் என்ன சொல்வார்கள்? 😄

-எஸ்.சந்திரசேகர்



திங்கள், 3 ஆகஸ்ட், 2026

மானிடப் பிறவி!

இங்கே பதிவில் இருப்பது உண்மையான தத்துவார்த்தமான நல்ல கருத்துள்ள படம்.


இன்னொரு பிறவியே வேண்டாம் சாமி என்றும், வாழும்வரை நோயற்ற ஆரோக்கியம் இருந்தால் போதும் என்றும், எப்படியாவது உயிர் பிழைத்து மீண்டு வந்தால் போதும் என்றும், இனியும் வாழப்பிடிக்கவில்லை விபரீத முடிவு வேண்டும் என்றும், இதுபோல் ஒவ்வொருவரும் பல வேண்டுதல்களை வைக்கிறார்கள். இதில் சரி/ தவறு என்று எதுவுமில்லை. அவரவர் அனுபவங்கள் தந்த வலியும் வேதனையும், புத்தியின் செயல்படும் அக்கணம் நிலவும் சூழலுமே இதை முடிவு செய்யும். 

நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தான் என்றும், ஆயுசு கெட்டி போல எப்படியோ பிழைச்சிட்டான் என்றும், வாழ வேண்டிய வயசுல தப்பான முடிவைத் தேடிகிட்டான் என்றும், சமூகத்தில் பல விமர்சனங்கள் வரும். எதுவாயினும் எல்லா முடிவுகளும் முடிவானவையே என்பது கர்மாவின் தத்துவக் கோட்பாடு. புல் பூண்டு மிருகம் மனிதன் என்று நிலைகள் உயர எத்தனை லட்சம் பிறவிகள் எடுத்து ஓர் ஆன்மா முன்னேறுகிறது என்பதைச் சிவபுராணம் நன்கு உணர்த்துகிறது. 

அப்படி இருக்கும்போது இந்த ஆன்மா சிவனுக்குச் சொந்தமானது. நாம் அதன் காப்பாளர்கள் மட்டுமே! பிறவி தோறும் வந்துவிட்டுப்போகும் நமக்கு அதை அவனிடமே துப்புரவாக ஒப்படைப்பது வரை பிறவிப் பணி ஓயாது, அதன் மீது உரிமையைக் கோர முடியாது.

-எஸ்.சந்திரசேகர்