About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 20 ஜூலை, 2026

"குலதெய்வம் காலாவதி ஆகுமா?"

இப்படத்திலுள்ள ஜோதிடர் காணொளி ஒன்றில் "ஒவ்வொரு வம்சத்திலும் அதன் குலதெய்வம் எத்தனை தலைமுறை வரைக்கும் காக்கும்?" என்பதைப் பற்றிப் பேசினார். 

அந்த விளக்கம் எதுவும் எனக்குத் திருப்திகரமாக இருக்கவில்லை.

வம்சத்தில் ஒரு மூதாதையர் இருந்தார் என்றால் அவரிலிருந்து அதிகபட்சமாகப் பதினான்கு தலைமுறைகள் தொடர்ந்து அந்த வம்சக் கிளைகள் வரும். வம்சத்தில் ஒரு குடும்பத்தில் எல்லாருக்கும் உடனே நின்றுவிடாது. அதில் ஒரு மகனுக்கு நிற்கும். அடுத்த தலைமுறையில் அவன் அண்ணன் / தம்பி யாருக்கேனும் நிற்கும். அடுத்த தலைமுறையில் அவன் பங்காளிக்கு நிற்கும். குலதெய்வத்தை ஆராதிக்க இப்படி ஏதோ ஒரு கிளையில் இன்னும் பல தலைமுறைகளுக்கு அக்குலதெய்வம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். தெய்வம் எக்காலத்திலும் விட்டுப்போகாது. 

சங்கிலித் தொடரில் விட்டுப்போவது அதுவல்ல நாம்தான். அதாவது இனி அந்த வம்சத்தில் நாம் பிறப்பு எடுக்க அவசியமில்லாதபோது நின்றுபோகும். ஒரு தந்தைக்கு மூன்று மகன்கள் என்றால் ஒருவனுக்குப் பெண் குழந்தை மட்டும் இருக்கும், இன்னொருவனுக்கு குழந்தை இல்லாமலோ திருமணம் ஆகாமலோ இருக்கும், ஒருவனுக்கு ஆண் வாரிசு இருக்கும். அக்குடும்பம் அடுத்த தலைமுறைக்கு வளராமல் படிப்படியாகக் குறைந்து போய் குலதெய்வ ஆராதனை நின்றுபோகும். அதுவே பெரியப்பன்/ சிற்றப்பன் மகன்களுக்கு ஆண் வாரிசுகள் இருக்கலாம். அவர்களது அடுத்த தலைமுறையில் தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஒவ்வொன்றாய் நிற்கலாம். 

ஆக இப்படியாக வம்சாவளியில் தன் மகன்/பங்காளி வயிற்றுப் பேரன்கள் கொள்ளுப்பேரன்கள் ஒவ்வொன்றாய் விடுபடும். அதற்கேற்ப அவரவர் ஜாதகத்தில் 12 ஆம் வீட்டில் குருவின் நிலை அமையும். குலதெய்வம் அதுவரை காலாவதி ஆகாது. தக்க காலத்தில் வம்சத்தில் ஒவ்வொருக்கும் விடுதலை தந்து அனுப்புகிறாள். அந்த வம்சத்தில் ஏதோவொரு கிளை தொடராமல் முற்று பெறும் மற்றவை கொஞ்சம் தொடரும். இது சூட்சுமம் நிறைந்த விஷயம். 

-எஸ்.சந்திரசேகர்

திங்கள், 13 ஜூலை, 2026

தேவர்களுக்கு ஏன் வியர்வை வராது?

 நிழல் விழாது ஏன்?  ஆன்மீகமும் அறிவியலும் காட்டும் ரகசியம்! 

நம் புராணங்களில் தேவர்களைப் பற்றிப் படிக்கும்போது, அவர்களுக்குப் பூமியில் நடக்கும்போது நிழல் விழாது என்றும், அவர்களுக்கு வியர்வை வராது என்றும் சொல்லப்பட்டிருக்கும். சாதாரண மனித உடலுக்கு முற்றிலும் மாறுபட்ட இந்தத் தன்மைகளுக்குப் பின்னால் இருக்கும் ஆச்சரியமான காரணங்களைப் பார்ப்போம்:


தேவர்களின் உடல் நம்மைப் போன்ற பஞ்ச பூதங்களின் பௌதிகக் கூறுகளால் (நாடி, நரம்புகள், சதை, இரத்தம்) ஆனது அல்ல. அவர்களின் உடல் முற்றிலும் தூய்மையான ஒளியால் ஆனது.

சதை உடம்பு இல்லாததால், உடலில் இருந்து அசுத்தங்கள் வெளியேற வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை. இதனால் வியர்வை வராது. அவர்களின் உடல் ஒளிரும் தன்மையுடையதாக இருப்பதால், புற ஒளி அவர்களின் உடலை ஊடுருவிச் சென்றுவிடுகிறது. ஒளி தடுக்கப்படாததால், அவர்களின் உருவத்திற்குப் பூமியில் நிழல் விழுவதில்லை.

நவீன அறிவியல் மற்றும் இயற்பியல் ரீதியாக இதை நாம் உற்று நோக்கினால்:

மனித உடலில் தசை இயக்கங்கள் மற்றும் செரிமானம் நடக்கும்போது அதிக வெப்பம் உருவாகிறது. இந்த உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கவே வியர்வைச் சுரப்பிகள் மூலம் வியர்வை வெளியேறுகிறது. ஆனால், முற்றிலும் ஆற்றல் வடிவமாக இருக்கும் ஒரு தேவர் உடலுக்குள் ரசாயன மாற்றங்களோ, பௌதிக வெப்பமோ உருவாவதில்லை. அதனால் வியர்வை சுரப்பதில்லை.

அறிவியல் விதிகளின்படி, ஒரு தடிமனான பொருள் ஒளியை வழிமறிக்கும் போதுதான் அதன் பின்புறம் நிழல் உருவாகிறது. ஆனால், தேவர்களின் உடல் ஒளியின் துகள்களான "போட்டான்களால்" ஆன உயர் அதிர்வு நிலையில் இருந்தால், வெளிச்சம் அவர்களைத் தடையின்றி ஊடுருவிச் செல்லும். ஒரு கண்ணாடி அல்லது தூய ஒளியின் மீது மற்றொரு ஒளி விழும்போது நிழல் உருவாகாதது போன்ற தொழில்நுட்பம் இது!

சித்தர்கள் தங்களின் ஆன்மீகப் பயிற்சிகளால் உடலின் அணுக்களை மாற்றி, அழியாத "பிரணவ தேகம்" அல்லது "ஒளி உடல்" பெற்றார்கள் என்று சித்தர் பாடல்கள் கூறுகின்றன. அந்த நிலையை அடையும்போது மனித உடலும் பௌதிக விதிகளுக்குக் கட்டுப்படாமல், இது போன்ற தெய்வீகத் தன்மைகளைப் பெற்றுவிடுகிறது!

ஞாயிறு, 12 ஜூலை, 2026

பலி படையல்!

இப்படியொரு செய்திப்படத்தை முகநூலில் பார்த்தேன். 


ஆடி மாதம் கிடா வெட்டிப் பலி படையல் போட்டுவிட்டால் குலதெய்வம் ஏமாந்து விடுமா என்ன? அதன் பிறகு அவன் பாவங்கள் செய்யாமல் தரும நெறியைப் பின்பற்றி சத்தியமாய் வாழ்கிறானா? வண்டி வண்டியாய்க் கர்ம பாரம் சுமந்து வந்துவிட்டு ஆண்டுக்கு ஒரு பலி தந்தால் ஊழ்வினை/சாபம்/பாவம் குறைந்து போய் தீர்ந்துவிடும் என்றால் கடன் வாங்கியாவது ஆடு/சேவல் பலியிட்டுப் பழைய கர்மா லோன் எல்லாவற்றையும் அடைத்து விடலாமே! 

கிராம தேவதைகள், காவல் தெய்வங்கள், முனீஸ்வரன், மதுரைவீரன், கருப்புசாமி போன்றவைகளைக் குலதெய்வமாக வழிபடும் குடும்பங்களில் ஆடு/கோழி பலியிடும் வழக்கம் தொன்றுதொட்டு உள்ளது. இது அல்லாத மற்றவர்களுக்கு இல்லை. உங்கள் குல வம்சத்தில் பலி படையல் பழக்கம் இல்லாதோர் புதிதாய் இப்படத்திலுள்ள அறிவுரையைப் பின்பற்றக்கூடாது. உஷார்! உங்கள் முன்னோர்கள் செய்து வந்து நடுவில் விட்டுப்போனது என்றால் தொடரலாம். நமக்குத் தெரிந்து பெரும்பாலும் பூசை செய்து பொங்கல் படைத்து வழிபடுவது வழக்கம்.

எனக்குத் தெரிந்து இதுபோல் பலியிடும் குடும்பங்களிலும் வினைப் பயனுக்கு ஏற்ப குலதெய்வம் எவ்வித பாரபட்சம் இல்லாமல் தண்டிக்கிறது.  அவர்களுக்கும் இன்னல்கள் ஏமாற்றங்கள் வரத்தான் செய்கிறது. இவ்விதம் பலியிடுவதால் கர்மா முற்றிலும் அழிந்து அக்குடும்பத்து இன்றைய ஆன்மாவினர் சுபிட்சமாய் வாழ்ந்து இன்னொரு பிறவி எதையும் எடுப்பதில்லை என்பதற்கு என்ன சாட்சி? மரபு வழிபாடு வேறாக உள்ளது, புரிதலும் பரப்புரையும் வேறாக உள்ளது. 🥺

-எஸ்.சந்திரசேகர்