தமிழ் நாள்காட்டியிலும் பஞ்சாங்கத்திலும் கரிநாள் பற்றிய குறிப்பு உள்ளதை நாம் காண்கிறோம். மேழ சித்திரை முதல் பங்குனி மீனம் வரை அதை நம் முன்னோர்கள் 'உதவாத' நாட்கள் என்று நிரந்தரமாக வைத்தனர். அன்றைய நாளில் எந்த சுப நிகழ்ச்சியையும் தென்னகத்தில் துணிந்து யாரும் செய்வதில்லை. அன்றைக்கு வழிபாடு பூசைகள் என்ற அளவில்தான் இருக்கும். கூட்டிப்பார்த்தால் வருடத்தில் கரிநாள் மொத்தம் 35 வரும். அன்றைய தினத்தில் வில்லங்கம் எதுவுமில்லாத சுத்த நாளாக இருந்தாலும் இந்த குறிப்பிட்ட தினங்களை முத்திரை குத்தி வைத்துள்ளனர். அந்த நாளில் ஏதோவொரு சோக நிகழ்ச்சி நடந்திருக்கும் அதனால் முன்னோர்கள் புறக்கணித்ததை அறிகிறோம்.
‘பூமி அதிர அட்டதிசையும் நடுங்கலாச்சு, சடுதியில் சப்த சாகரங்களும் பொங்கியெழ மாடமாளிகைகளும் மலைகளும் பகலிரவாக முழுகலாச்சு, நாடாண்ட ராஜாதி ராஜர்களும் மாண்டனர்’ என்று போகர் தன்னுடைய பெருநூலில் நிறைய முறை சொல்லியுள்ளார். திரேதா யுகம், துவாபரம், முதல் கலி பிரதமபாதம் வரை கடல்கோள்கள் வந்ததை போகர் உறுதி செய்கிறார். மாதங்கள் வாரியாக அதை விளக்காமல் துவாபர/ கலியுகத்தின் லட்சத்து இத்தனையாவது வருடங்களில் என்று விவரித்துள்ளார்.
கரிநாள் என்பது அந்தந்த கண்டங்கள் தோறும் (காரணம் தெரியாமல்) பின்பற்றப்படுகிறது. கலியுகத்தில் சங்கம் கூடிய பிற்பகுதியில் கடல்கோள் சமயத்தில் இனி தேவையில்லாத நூல்கள் என்று ஈசனே கருதியவை அழிந்துபோக, எஞ்சிய நிறைய நல்ல நூல்கள் தங்கிற்று. அதுபோன்ற நூல்களில் ‘ஜோதிட கிரக சிந்தாமணி’யும் ஒன்று. வரும் தை மாதம் முதல் மூன்று நாளும் கரிநாள் என்பதால் அதை வழிபாடுக்கு ஒதுக்கினர். அன்று வீடு மாற்றுவதோ, கிருஹப்பிரவேசம் செய்வதோ, திருமண முஹூர்த்தம் வைப்பதோ இல்லை. நம் தென்னகம் நீங்கலாக வடக்கே இதை யாரும் பார்ப்பதில்லை. திருமணம்கூட நடக்கிறது.
“இன்பமுறுமேடமதிலாறு பதினைந்தாம்
ஏறதனிலேழுபதி னாறுபதினேழாம்
அன்புமிகுமானியொன்று மாறலவனிரண்டோ
டையிரண்டுமைந்நான்கு மாவணியிரண்டும்
ஒன்பதேழுநான்குகன்னி யுற்றபதினாறே
டொன்றொருமுப்பான்றுலையிலோராறுதேளில்
முன்சோமவாரமொன்று பத்துபதினேழாம்
முனியாறுமின்பதும்பன்னொன்றுமுதவாநாள்.
உதவாத நாள் கலையிலொன்றிரண்டுமூன்று
வொருபதுடனின்றுபதி னேழதுவுமாகா
துதிபெருகுமாசிபதி னைந்துபதினாறும்
சொல்லுபதினேழுகடை மாதமதிலாறும்
பதினைந்துமொன்றொழியைந் நான்குமிகுதீதாம்
பகர்ந்தமாதந்தோறுந் தெய்தியெனக கொண்டு
கதிதருநற்தியைவரை முனிவனுரைத்திட்ட
கரிநாண்முப்பானான்குங் கண்டறிகுவீரே”,
அந்த நூலில் தை 1,2,3,10,17 கரிநாள் என்று உள்ளது.
ஆகவே, இந்த கரிநாள் கான்செப்ட் குமரிக்கண்டப் பகுதிகளில் நிலவிய சம்பிரதாயம் என்பது நிரூபணமாகிறது. அதை ஏன் எதற்கு என்று வினவாமல் நாமும் கடைப்பிடிப்போம். அதுபோல் சில குடும்பங்களில் நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்த சந்ததியில் ஒரு பண்டிகை நாளில் தீய நிகழ்வு நடந்திருக்கும். அதனால் பின்வரும் சந்ததியினர் அதை முன்னிட்டு அந்தப் பண்டிகை நாளை கரிநாளாக பாவித்து மறுநாள் கொண்டாடும் வழக்கம் இன்றுமுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக