அக்டோபர் 1918 ல் மகாசமாதி அடைந்தார் ஷிர்டி சாயிநாதர். 1954 வரை இப்போதுள்ள ஸ்தலத்தில் சிலை வழிபடு எதுவும் இருக்கவில்லை. தென்னகத்தில் நம் ஆகம விதிகள்படி பளிங்குக்கல்லில் கோயில் சிலைகளை நாம் செதுக்குவதில்லை. ஆனால் வடக்கே பெரும்பாலும் நம்முடைய ஆகம வழிமுறை பின்பற்றப்படுவதில்லை. மகான் சமாதியாகி 36 வருடங்கள் கழித்தே இக்கோயிலில் விக்ரகம் நிறுவப்பட்டது. ஆனால் இது உருவான வரலாறு மெய்சிலிரிக்க வைக்கும்.
இத்தாலியிலிருந்து வந்திறங்கிய ஒரு பளிங்குக்கல் மும்பாய் துறைமுகத்தில் கேட்பாரற்றுக் கிடந்தது. அதை யாரும் உரிமைக் கோராததால் சில மாதங்களுக்குப்பிறகு அதை ஏலம் விட்டனர். பளிங்குக்கல்லின் உயர் தரத்தால் கவரப்பட்ட ஒரு செல்வந்தர் அதை ஏலத்தில் எடுத்து ஷிர்டி சமஸ்தான கோயிலுக்கு அர்ப்பணித்தார். கோயில் நிர்வாகம் அதில் சிலை வடிக்க முடிவு செய்தபின் சிற்பி திரு.பாலாஜி வசந்த் அவர்களிடம் ஒப்படைத்தது.
ஷிர்டி மகானின் பழைய கருப்புவெள்ளைப் படத்தைப் பார்த்து வடித்தால் ஓரளவுக்குத்தான் ஒற்றுமை நிலவும். அதுவே மகானை நேரடியாக பார்த்துக்கொண்டே வடித்தால் துல்லியமாக இருக்கும் என்று நினைத்தார். தான் வடிக்கப் போகும் மகானின் உருவம் சரியாக வரவேண்டுமே என்ற கவலையும் இருந்தது. மகானை மனமுருகி வேண்டிக்கொண்டார். ஒரு நல்ல நாளில் காலையில் தன்னுடைய சிற்பகலா ஸ்டுடியோவுக்குள் கதவைத் திறந்து விளக்கைப் போடும் முன்பாக அரங்கில் வெளிச்சம் கூடியிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். அங்கே ஷிர்டி மகான் இவருக்காக ஒளிவெள்ளத்தில் தரிசனம் தர காத்திருந்தார்.
வணங்கிக்கொண்டு உடனே தன்னுடைய உளியையும் சுத்தியையும் எடுத்து ஆனந்தப் பிரவாகத்தில் செயல்பட ஆரம்பித்தார். முழு உருவத்தையும் எல்லா திசைகளிலும் பார்த்துக்கொள்ள ஏதுவாக மகான் சுழன்று தன் முகத்தின் நெளிவுகளையும் கிட்டத்தில் காட்டினார். முழங்கால் அருகே கல்லில் சிறு வெற்றிடம் இருந்ததைக் கண்டு சிற்பி திடுக்கிட்டார். அதைத் தட்டினால் கீழ்பகுதி சிற்பம் உடைந்து விடும் அபாயம் இருப்பதால் மேற்கொண்டு செய்வதறியாது கலக்கத்தில் சும்மா இருந்துவிட்டார். ‘தொடர்ந்து செதுக்கு ஒன்றும் ஆகாது’ என்று கனவில் அவருக்கு அசரீரி ஒலிக்க நம்பிக்கையுடன் செய்து முடித்தார். அவருடைய ஆசிகளுடன் 5 அடி 5 அங்குல விக்ரகம் உருவானது. 1954 அக்டோபர் மாதம் விஜயதசமி நன்னாளில் அது கோயிலில் நிறுவப்பட்டது. இந்து சமய விதிமுறைகள்படியே இங்கு பூஜைகள் செய்யப்படுகிறது. அதிகாலை முதல் இரவு வரை அவருக்கு நான்கு காலமும் அலங்காரம் நடக்கிறது. ஆரத்தியில் நிவேதன அமுது படைக்கப்படுகிறது.
நம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் சிவலிங்கம் தான் இருக்கும். அங்கு தத்தாத்ரேயர் என்று கருவறைக்குள் தனியாக விக்ரகம் இல்லை. லிங்க வடிவில் மும்மூர்த்தியும் அங்கே சங்கமித்துள்ளனர். ஷிர்டியில் இந்தப் பளிங்கு விக்ரகம் நிறுவப்பட்டபிறகுதான் நாடெங்கும் ஸ்ரீதத்தாத்ரேயரின் அவதார உருவங்கள் பளிங்கில் வடிக்கப்பட ஆரம்பமானது. மகானின் சிலை வழிபாட்டு விக்ரகமாக மாறிய அற்புத லீலை இதுதான்.
அந்தப் பளிங்குக்கல் எங்கே போக வேண்டுமோ அங்கே போய்ச் சேந்தது. சிற்பி பாலாஜியின் வேண்டுதலுக்கிணங்க மகானே வந்தமர்ந்து தரிசனம் தந்து தான் விருப்பப்பட்ட சிலையை உருவாக்க அருள் புரிந்தார். பரத்வாஜ கோத்திர இஸ்லாமிய சுஃபி மகானாக அவதரித்த ஸ்ரீதத்தரின் லீலைகளை யாராலும் கணிக்க இயலாது. ஷீரடியில் இது தானுகந்தத் திருமேனியாக இன்றும் அருள் பொழிகின்றது. எப்போதும்போல் இவரைப் பழித்துத் தூற்றுவோர் இவரைத்தொழ இன்னொரு பிறவி எடுக்ககும்வரை காத்திருக்க நேரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக