About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 11 ஜனவரி, 2020

தூங்கா நகரம்

மதுரை, சங்ககாலம் முதல் இன்று வரை இயங்கி வரும் ‘தூங்கா’ நகரம். இரவு நேர இட்லிக் கடைகள், கையேந்தி பவன்கள் என்று நள்ளிரவு தாண்டியும் இயங்கும் நகரம் என்று சொன்னாலும் மதுரைப் பற்றிய இலக்கியச் சான்றுகள் இன்னும் உள்ளன.

போகர் தன்னுடைய பெருநூலில் செழிப்பான ‘பாண்டிவள மெத்தநாடு’ என்றும் ‘மானான மகாதேவர் மதுரையைத்தான் மகத்தான் ஸ்தலமென்று மதிப்பிட்டாரே’ என்று ஏழாம் காண்டத்தில் சொல்லியுள்ளார். மதுரைக்குள்ளே பஞ்சபூதத்தலங்கள் உண்டு. வானவர் போற்றும் மூதூர் மாநகர் மதுரை என்று சங்கப்பாடல்கள் குறிப்பிடுகிறது.

சங்கம் கூடிய மதுரையில் எல்லா புலவர்களும் குழுமி இருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். இறந்தமொழி எனத் தூற்றி, சமஸ்கிருதமா? தமிழா? என்று மக்கள் அடித்துக் கொள்வதுபோல் அன்றைக்கு எந்தப் புலவரும் ஈசனை இழித்துப் பேசத் துணியவில்லை. சொல்லப்போனால் நாம் யாரையெல்லாம் சம்ஸ்கிருத ரிஷி/புலவர்கள் என்று நினைக்கிறோமோ அவர்கள் அனைவரும் இரண்டாம் சங்கத்தில் வீற்றிருந்தனர் என்று தெரிகிறது.

வால்மீகி இயற்றிய இராமாயணம்தான் இன்றளவும் முதன்மையான மூலநூலாகத் திகழ்கிறது. அந்த வால்மீகியும் சங்கத்தில் இருந்தார். ஆறாம் காண்டத்தில் அவரைப்பற்றி விவரிக்கும்போது, ‘மராமரா உபதேசம் பெற்ற வேடர்குல ஞானசித்தன், துய்ய தமிழ்ப் பண்டிதன் வேதாந்த வால்மீகி சமாதிமுகம் சென்றதில்லை. காயாதி கற்பமுண்டு வாழ்ந்த நேர்மை எழுநூற்று சொச்சம் வருடங்கள்’ என்கிறார்.

பழைய மதுரையைப் பற்றிய விவரங்களை சுக்ரீவன் வாயிலாகச் சொல்வதுபோல் இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டம், அத்தியாயம்-41, ஸ்லோகம் 18-19, 'ததோ ஹேமமயம் திவ்யம் முக்தாமணி விபூஷிதம், யுக்தம் கவாடம் பாண்டியானாம் கதா த்ரக்ஷ்யத வானரஹ' என்கிறார் வால்மீகி. வானர வீரர்களே! இலங்கை நோக்கிப் போகும்போது பாண்டியர்கள் ஆட்சி செய்யும் கவாடபுரம் வரும். இரத்தின மணிகள் மின்னும் தங்கமயமான நகரம்தான் பாண்டிய தேசம்' என்கிறது இந்த வரிகள். அந்த நிலப்பரப்பு எதுவரை மேற்குத் தொடர்ச்சியில் இருந்தது? “தாம்ரபரணீம் க்ராஹ ஜுஷ்டாம் தரிஷ்யத மகாநதீம், த்ரஷ்யத ஆதித்ய ஸம்காஷம் அகஸ்த்யம் ரிஷீம் சத்மம்” என்கிறார். அதாவது அன்றைய பிரதேசமானது அகத்தியர் வழிபட்ட குற்றாலநாதர் பாபநாசம் பகுதிவரை நீண்டிருந்ததாம். அவர் குறிப்பிட்ட தாமிரபரணி நதி இன்றும் பாய்கிறது.

இன்று விமானத்தில் நேராகத் தெற்கு நோக்கிப் பயணித்தால் இலங்கை வந்திடும். ஆனால் அன்று கவாடபுரம் வழியாகப் பறந்துபோக என்ன அவசியம் இருந்தது? அப்படி என்றால் பழைய மதுரை தென் மேற்கே குமரிப்பரப்பில் இருந்துள்ளது. ஏன்? தனகோடிக்குத் தென் மேற்கே உள்ள தீவுகளில் ஸ்ரீராமர் தவமியற்றினர் என்று போகர் குறிப்பிடுகிறார்.

அந்த நிலபரப்புப் படத்தை ஓரளவுக்குத்தான் கற்பனை செய்து பார்க்க முடியும். காலவோட்டத்தில் பூமித்தட்டு இடம்பெயர்ந்து மாறியிருக்கும். கடல்கோள் வந்தபின் பாண்டிய தேசம் சுருங்கிபோய் இன்றைய மதுரையைத் தலைநகராகக் கொண்டது. ஆக மொத்தம், கலியுகம் தொடக்கத்திலிருந்தே இயங்கும் ஒரு தூங்கா நகரம் என்றால் அது கூடல்மாநகர் மதுரையே!

சோழன் ஆக்கிய கட்டுமானங்களைப் பார்த்து இன்று வியக்கும் நாம் அன்றைக்கு இதைவிட பன்மடங்கு பிரம்மாண்டங்கள் பாண்டியர்களின் பழைய மதுரையில் மிஞ்சும் அளவில் இருந்திருக்கும் என்பது சந்தேகமில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக