About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 13 ஜனவரி, 2020

மார்கழியில் தைப்பொங்கல்!

கடந்த சில தினங்களாக ஊரெங்கும் சமத்துவப் பொங்கல்/ தமிழர் பொங்கல்/ பாரம்பரியப் பொங்கல் என ஏதேதோ பெயர்களில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், முற்போக்கு சங்கங்கள், மாணவிகள், சுற்றுலா பயணிகள், என் அனைவரும் கொண்டாடியதை நேற்றும் இன்றும் டிவியில் காட்டினர்.

பொங்கல் வைக்கும் பெண்டிரில் பல ரகங்களைப் பார்த்தேன். மஞ்சள் புடவையைக் கட்டிக்கொண்டு பரட்டைத் தலையுடன் கட்சி விழாவுக்கு அவசர கதியில் அலங்கோலமாய் அழைத்து வரப்பட்ட கூட்டம் என்பதும் தெரிந்தது. கல்லூரி வளாகத்தில் மாணவிகள் எல்லோரும் கட்டாயமாக நெஞ்சுக்கு முன்புறம் மல்லிகைப் பூச்சரத்தைத் தொங்கவிட்டு, காலில் செருப்பு அணிந்து, இறை பக்தி ஏதுமின்றி, கடனுக்கே என தீ மூட்டிவிட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்க, பால்சோறு அதன் போக்கில் வெந்து பொங்கட்டுமா வழியட்டுமா என்று பானையின் வாயில் எட்டிப் பார்த்து ஒரு கணம் நின்று இந்த முகங்களைப் பார்க்க வெட்கப்படும் வேளையில், 'பொங்கலோ பொங்கல்' என்று கூப்பாடு போட்டு கைகொட்டி ஆராவாரம் செய்தபின் கொஞ்ச நேரத்தில் சிலர் ஜூட் விட்டார்கள்.

சலவைபுரத்தில் துணிகளைக் கொடியில் உலர்த்த நிற்கும் குறுக்குக் கம்புகள்போல் கரும்புகள் சாய்ந்தபடி நின்றிருந்தன. மஞ்சள் கொத்தின் இலையும் அடிக்கிழங்கும் கருகிப்போகும் அளவில் நம் அறிவுக் கொழுந்துகள் பானையின் கழுத்தில் கட்டித்தொங்க விட்டிருந்தார்கள். இன்னொரு பெண் அகப்பையைப் பானையிலேயே போட்டு வைத்துவிட அதை பிடித்துக் கிண்டுவதற்குள் சூடு பொறுக்காமல் கைகுட்டையைத் தேடினாள்.

எத்தனைப் பானைகளில் பொங்கல் தீய்ந்து அடி பிடித்ததோ? பொங்கலை இவர்கள் தின்றார்களோ கால்நடைகளும் பறவைகளும் தின்றதோ? எத்தனை மல்லிகைப் பூக்கள் பொங்கல் பானைக்குள் விழுந்து வெந்து கசந்ததோ? அந்த ரகசியம் சூரியனுக்கே வெளிச்சம். மெய்யான நம் பக்திபூர்வமான பொங்கல் சமர்ப்பணம் எங்கே? தைப்பொங்கல் வருவது ஒருமுறையே! அதை ஏன் கேலிக்கூத்தாக்க வேண்டும்?

-எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக