‘தமிழ் பாஷை தெரியாத ஷிர்டி சாயிபாபாவுக்குத் தமிழ்நாட்டில் செழிப்பாகக் கோயில்கள் உள்ளன. ஆனால் ஊர்காத்த ஐய்யனாரையும் கருப்புசாமியையும் தமிழர்கள் மறந்து விட்டார்களே. எப்போதுதான் திருந்துவார்களோ?’ என்ற வாசகத்தை முகநூலில் எங்கோ படித்தேன். உடனே சிரிப்பு வந்தது! ஆரியம்- திராவிடம் சண்டையில் எதோ எல்லா ஊர்களிலுமே இந்நிலை இருப்பதாக ஒரு மாயையைத் தோற்றுவித்து வருகிறார்கள்.
நம்மவர்களுக்கு ஒரு சூட்சுமம் இன்னும் விளங்காமல் போவது வேதனையான விஷயம். கிராமத்தில் பல காலமாய் ஆராதிக்கபட்டு வந்த கருப்புசாமியை/ ஐய்யனாரை மறந்துபோய், அதற்கு எவ்வித பூசையோ கோயில் புனரமைப்போ செய்யாமல் போவது என்பது வம்ச சாபம்/ பாவம் இருப்பதைக் காண்பிக்கும். காவல் தெய்வங்கள் ஊரைவிட்டுப் போகும்போது அங்கு அதுகாறும் வளர்ந்திருந்த ஓங்குயர் பனைமரங்கள் பட்டுப்போகும் (அ) எதோவொரு காரணத்திற்காக வெட்டப்படும். சிறுதெய்வங்கள் ஊரை விட்டுப்போவதன் அறிகுறிகள்தான் இவை. சில ஊர்களில் அவை சக்தி இழந்து அரூபமாகவே நிலைத்திருக்கும். கிராம தேவதைக்குட்பட்ட இந்த சிறுதெய்வங்கள் எப்போதுமே அக்கோயிலைச் சார்ந்து உள்ளேயோ அல்லது ஊருக்கு வெளியேவோ இருக்கும். பூசாரி தினமும் மாரியம்மனுக்கு நைவேத்தியம் படைத்தபின் அதைக்கூடையில் வைத்துத் தன் தலையில் சுமந்தபடி தன் வாயைத் துணியால் கட்டிக்கொண்டு கையில் மணியை அடித்தபடி கருப்புசாமி இருக்கும் எல்லைக்குப்போய் படைத்துவிட்டு வருவதை எங்கள் கோயிலில் நான் பார்த்துள்ளேன்.
அப்படியிருக்க பளபளக்கும் ஷிர்டி சாயிபாபா கோயில் வருவது மட்டும் எப்படி? இதுவும் சூட்சுமம்தான்! கலியுகத்தில் அதர்மம் வீழும்போது அங்கே சக்தியூட்ட அனுமனையே சாயியாக அவதரிக்கப் பணித்து அதில் தம் சக்தியை அருளியது மும்மூர்த்தி சுவரூபமான ஸ்ரீதத்தாத்ரேயர். தமிழர்கள் மறந்து போனதாக மேற்படி பேசப்பட்ட ஐய்யனார் (சாஸ்தா) தான் தத்தர். தங்கள் ஊரை விட்டு ஒரேடியாகப்போய் யாரெல்லாம் தம் குலதெய்வத்தை மறந்தார்களோ அவர்களுக்குக் குறைந்தது ஒரு நூற்றாண்டுவரை (அ) மூன்று தலைமுறைகள் வரை தங்கள் குலதெய்வத்தை வழிபட பிராப்தம் இருக்காது. உங்கள் கர்மவினை ஆட்டிப் படைக்கும். சில ஊர்களில் புதர்கள் தெரிய சுதைச் சிலைகள் மிகவும் சிதிலமடைந்து கேட்பாரற்றுக் கிடக்கும். குல தெய்வம் எது? எங்குள்ளது? என்ற தகவல் எதுவுமே தலைமுறைக்குத் தெரியாமல் போகும். மூதாதையர்களை மறந்ததற்குச் சமம். அதனால் காவல் தெய்வமும் கோபத்தில் இருக்கும். அச்சமயத்தில் ஊரைக் காக்க வேறு ரூபத்தில் இறை சக்தி தன்னை புதுப்பித்துக் கொண்டு காக்கும் கடமையைச் செய்யும்.
நீங்கள் சாயி நாதரை வணங்கும்போது உங்கள் கிராம தேவதையை மனமார எண்ணி இங்கே மலர்கள் சாற்றுங்கள். அது உங்கள் ஊரில் குலதெய்வத்தை/ கருப்புசாமியை/ ஐய்யனாரைச் சென்றடையும், உக்கிரம் குறையும். சாந்தமடைந்து தணியும்போது உங்கள் ஊரில் குல தெய்வத்தைப்போய் தரிசிக்கவும் கோயில் புனருத்தாரணம் செய்யவும் பிராப்தம் வாய்க்கும். நீங்கள் தவறை உணரும் வரை கருப்பு வர விடாது ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக