About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

மறைந்த கலாச்சாரம்!

ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் காலத்தில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் The Madras Devadasis (Prevention of Dedication) Act, 1947 நிறைவேறும்வரை அந்தப் பழக்கம் பரவலாக இருந்து வந்தது. கீழ்த்தரமாக நினைக்கும் அளவில் அதன் நிலை போய்விட்டது. கோயிலில் ‘பொட்டு’ கட்டும் ஒரு சடங்கில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பூசை நேரத்தில் இறைவனுக்கு உபசாரங்கள் நடக்கும்போது ஆடல் பாடல் மூலம் இசை விருந்து அளித்து நிறைவேற்றினார்கள். அன்று முதல் தேவதாசி என்று அழைக்கப்பட்டனர்.

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பே இறை நிந்தனை பெருகியதாலும், கோயிலில் பின்பற்றப்படும் கலாச்சாரங்கள் விமர்சிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் வழக்கொழிந்து போனதால், பிற்காலத்தில் தேவதாசிகளை வேலியில்லா பயிர் என்று பாவித்துக்கொண்டு ஊர் சபை பெரிசுகள் அவர்களை வலம் வந்து அடிபணிய வைத்தனர். தேவர் அடியார்கள் என எந்தப் பழக்கம் ஒரு காலத்தில் மேன்மையுற விளங்கியதோ, திருமுறைகளில் மதிப்புடன் பாடப்பட்டதோ, அது கொச்சையானது. சட்டம் இயற்றி அக்கலாசாரத்தை அடியோடு ஒழிக்கும் அளவுக்கு அந்தச் சம்பிரதாயம் பற்றிய புரிதல் மாசுபட்டுப் போனது.
அப்பாரம்பரியத்தில் வந்தோர் எல்லோருமே திரைப்பட நடிகைகளாகவோ, இசை/நாட்டிய கலைஞர்களாகவோ கட்டாயம் இருந்துதான் ஆகவேண்டும் என்று எந்தவொரு கட்டாயமும் இல்லை. பரத நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்களின் குருதான் திருவிடைமருதூர் டி.ஏ.ராஜலக்ஷ்மி. நாட்டிய விதூஷி இராஜலட்சுமி அவர்கள் பந்தநல்லூர் பாணியில் பயிற்சி எடுத்தவர், தேவதாசி குடும்பத்திலிருந்து வந்தவர்.
அவருடைய மகன் திரு.நாராயணன் மகாலிங்கம் இருபது ஆண்டுகளுக்குமுன் என்னுடன் ஒரே நிறுவனத்தில் பணி செய்தவர். பல்லாண்டுகளுக்குமுன் இவருடைய தாத்தா திருவிடைமருதூர் பழனியப்பா பிரபல தவில் வித்வானாகப் பரிமளித்தவர். தன்னுடைய அம்மா முழு அர்ப்பணிப்புடன் இறைவன்முன் மெய்மறந்து ஆடுவார் என்பதை அவர் என்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது.
அவர் என்னுடன் பேசும்போது, ‘நட்டுவாங்க ஜதி சொல்வதற்கும், தவில் கொன்னக்கோல் சொல்வதற்கும் நிறைய வேற்றுமையுண்டு என்பார். அதில் வரும் சொற்கட்டுகள் மாறும். ‘ஜம்’ என்று நாட்டியத்திலும், ‘ப்ளாங்’ என்று தவில் கொன்னக்கோலிலும் வரும். அதுபோன்ற சொற்கட்டுகள் நாக்கைப் புரட்டிப்போடும். வயதாகும்போது நரம்புத்தளர்ச்சி பிரச்சனையால் நா குழறாமல் இருக்க நல்ல பயிற்சியாகும் என்பார். திருப்புகழ் முத்தைத்தரு என்ற பாடலும் இந்த முறையில் வரும் சுழற்சிப் பிரயோகம்தான். வடமொழி ஓசைகளை அப்படியேதான் சொல்லவேண்டும். ‘சூம்’ என்றோ ‘பிளாங்கு’ என்றோ அழுத்தத்தைத் தமிழ்ப் படுத்தினால் இசை-நடனம் நயம் அடியோடு கெடும்’ என்பார். தொலைக்காட்சியில் இன்று அக்காலத்து நாட்டிய ஆவணப்பட துக்கடா ஒன்றைப் பார்க்கும்போது, எனக்கு ஏனோ இந்தப் பழைய நினைவு வந்தது. உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
-எஸ்.சந்திரசேகர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக