பீஜம் என்ற விதைக்குள் எப்படி ஒரு விருட்சம் இருக்குமோ அப்படியாக பீஜ மந்திரத்திற்குள் தெய்வங்கள் உறைகிறார்கள். முருகன் தன் சீடர் அகத்தியர்க்கு 'சுப்பிரமணிய ஞானம்' உபதேசிக்கையில் சிவனாரிடமிருந்து தான் உதித்த விதத்தைப்பற்றி விவரிக்கிறார்.
ஓம் சௌம் என்ற பீஜத்தில் சௌ+ஹூம் என்பது இணைந்துள்ளது. இது படைப்புத் தொழிலுக்கேற்ற பிரம்ம பீஜம். சிவபிரான் தன்னுடைய ஆறாதார சக்கரங்களின் அம்சங்களை ஒன்று திரட்டி ஒளிப்பிழம்பாக லலாடம் (எ) முக்கண் (எ) ஆக்ஞா வழியே ஆறு தீப்பொறிகளாக விண்ணில் இடிமுழங்க வீசினார். கீழே சிதறி விழுந்தவைகளை ஆறுமுகா என்று ஈசனே அழைத்தார். தனக்கு வாசி (மயில்) ஏறக் கற்றுக்கொடுத்து, ‘என் அப்பனே! என் குருநாதா!’ என்றார். சுப்பிரமணி என்றழைத்த சிவனார் எப்போது முருகா என அழைத்தார் என்ற சந்தேகம் உங்களுக்கு வருகிறதா? அதை இன்னொரு பாடலில் உரைத்துள்ளார்.
சரவணப் பொய்கையில் எழுந்தருளிய ஆறுமுகப் பெருமான் ஒன்றிணைந்து ஸ்கந்தமானான். அப்படி உதித்த தனக்குப் பூரண பிரம்மக்ஞானம் சுயம்புவாக நிலைக்கொண்டதால் சுப்பிரம்மணியம் என்ற பெயர் பெற்று திருவேரகம் (எ) சுவாமிமலையில் தகப்பன்சாமியாக சிவனுக்கே பிரணவத்திற்குப் பொருளுரை உபதேசம் செய்ய முடிந்தது. அசுரர் குலத்தை வேரறுக்க சிவன் தன் மேரு (கபால) பீடத்தில் பிரம்மாவின் பணியை மேற்கொண்டு ஒளிரூபமாக என்னைப் படைத்தார்.'
திருமந்திரத்தில் ‘நந்தி அருள்பெற்ற நாதரை நாடினின், நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்றிவர் என்னோடு எண்மருமாமே’ என்று சொல்லும்போது தன்னையும் சேர்ந்து எண்மர் இருந்தோம் என்று திருமூலர் சொன்னார். அந்த நந்திகள் நால்வரில் ஒருவரான சனத்குமரர்தான் ஆறு தீப்பொறிகளாக முக்கண் முன்னே சிவனின் ஆக்ஞைப்படி வெளிவந்தார். தாய் உமை இல்லாமல் தகப்பன் சிவனே பிள்ளையைப் பெற்றவிதம் இதுதான். ஆகவே நந்தி/சிவன் அம்சமில்லாமல் வாசி மயிலேறிய முருகக்கடவுள் இல்லை.
கந்தகுரு கவசத்தில் வரும் முருகனின் மூலமந்திர வரிகள் நினைவுக்கு வருகிறதா? அதைத்தான் படத்தில் தந்துள்ளேன். ஆத்ம சுத்தியுடன் இதை 1008/ 100008 என விருப்பம்போல் உருவேற்றுக! முருகனின் தரிசனம் நிச்சயம் வாய்க்கும்.
- எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக