முந்தைய யுகம்வரை உலகளாவிய முன்னேற்றம் பெற்றிருந்த பாரத வம்சத்தின் கோலோச்சும் அதிகாரம் கலியுகத்திற்குப்பின் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகிப்போனது. இது கலியுக லட்சணம் என்ற நோக்கில் பார்க்காமல் எல்லோரும் விமர்சித்து வருவது இயல்பாகிவிட்டது. வந்தோரும் போனோரும் நம்மை வீழ்த்தினர், நம் இலக்கிய நூல்களை எரித்தனர், கடந்தகால சுவடுகளை அழித்தனர், நம் அடையாளத்தை சிதைத்தனர், என்றெல்லாம் சிலர் கூக்குரல் இடுவதை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த மாற்றம் குறித்துக் குறைகூற இம்மியும் அவசியமில்லை. அது காலசக்கரத்தின் கட்டாயம்.
நம் பாட்டன் பூட்டன் வாழ்ந்த வாழ்க்கையை இன்று ஏன் நாம் வாழவில்லை? வம்சத்தில் யார் நுழைந்து பலவந்தப்படுத்தி மாற்றியமைத்தது? அவர்கள் பெற்றிருந்த அபரிமிதமான கல்வி கேள்வி ஞானம் இன்று ஏன் நமக்கு வாய்க்கவில்லை? அதை நமக்குச் சேரவிடாமல் வம்சத்தில் முடக்கியது யார்? அதைப் பெறவிடாமல் குடும்பத்தில் தடுத்தது யார்? இது எதற்கும் நம்மிடம் விடை இல்லை. நம் மூதாதையர்கள் வாழ்ந்த சில நூற்றாண்டுகள் முன்புவரை யோகிகளும் சித்தர்களும் சர்வ சாதாரணமாகவே சமுதாயத்தில் வலம் வந்தனர். சிவன் கோயில்களில் மூன்று கால பூசைகள் நடந்தன. வேத மந்திரங்கள் ஒலித்தன, தேவாரப் பண்ணிசையும் பாடப்பட்டன. குற்றங்கள் இருக்கவில்லை. பஞ்சபூதங்கள் சுபிட்சமாய்ப் பேணிக் காக்கப்பட்டன. எங்கும் சிவ நிந்தனை இல்லை. சிவ சொத்து களவாடப்படவில்லை. களவாடும் அளவுக்கு யாரும் மதிகெட்டுப் போகவில்லை. சித்தரிஷிகளும் மகான்களும் அதைச் செய்யவிடவில்லை. எல்லோரும் தூய சைவ உணவை உண்டு பக்தி நெறியில் வாழ்ந்து உடல்/ மனம்/செயல்/வாக்கு என அனைத்திலும் தூய்மையைக் கடைப்பிடித்தனர். சில பிரிவினர் மட்டும் கள்/ மாமிசம் என்று பழகினர்.
புனித நூல்கள் இயம்பியதை முற்போக்காகத் தர்க்கம் செய்ததில்லை. மாறாக ஒப்பீடு, இலக்கியச் சுவை, புலமை, ரசம் வெளிப்பட அதைப் பகுத்தறிந்து மெய்ஞானம் வெளிப்பட விவாதித்தனர். ஆனால் இன்று நடப்பது இதுவா?
அருட்கடாட்சம் இருந்த படியால் பரனும் பரையும் பேணிக்காத்த மெய்ஞானம் வம்சத்தில் தலைமுறை வழியே பயணித்து வந்தது. இன்று ஒரு மந்திரம் கற்கவோ, பதிகம் பாடவோ கூகிளில் அதை அடித்துத் தேடிப் பார்க்கவேண்டிய நிலை. ஏன்? எதையும் நாம் மனனம் செய்யாமல் இருந்துவிட்டோம். அதைக் கற்பதனால் ஆவதென்ன, அதை அனுதினமும் உருவேற்ற நேரமேது என்ற சிந்தனையில் வளர்ந்து விட்டோம். படிப்பு, வேலை, பொறுப்பு என்று எல்லா கடமைகளால் மெய்ஞானம் ஊட்டும் சங்கதிகளை புறம் தள்ளினோம். மந்திரங்கள், ஸ்துதிகள், திருமுறைகள், புராணங்கள், சித்தர் பாடல்கள் என்றாலே வேம்பாகக் கசந்தது. நவீனம், பொருளாதார முன்னேற்றம், என்று நம் புத்தி அடிமைப்பட்டு இருந்ததால் மெய்ஞானம் பற்றிய ஆழமான சிந்தனை இல்லாது இருந்தோம். இது போதாதென நாத்திக பிரசாரங்களும் முற்போக்கு அரசியலும் மாசடையச் செய்தன. அவரவர் குலப்படி அனுசரிக்கவேண்டிய அனுஷ்டனங்கள் முக்கியத்துவம் இழந்தன. ஆனால் இன்று பகுத்தறிவு என்றாலே அது கருஞ்சட்டை நாத்திகம் என்று அர்த்தமாகிவிட்டது.
இந்த 10-20 வருடங்களில் சித்தர் பாடல்களுக்கு மவுசு கூடிப்போனது. அன்று தவறவிட்ட கோஷ்டியினர் இன்று திடீரென அதை ஈடுசெய்ய கிளம்பிவிட்டனர். எங்கு காணினும் சிவ ஸ்துதிகள், சித்தர் பாடல்கள், பிரதோஷம், கிரிவலம், சித்த சமாதிகளைத் தேடி மக்கள் போவதும், இராமனும் கிருஷ்ணனும் முக்கியத்துவம் அடைவதும் ... கலியில் நடக்கும் சுத்தி முறையாகும். ஆயினும் காலம் கடந்து மெய்ஞானம் தேடி வந்ததால் மேற்படி மரபுகளை ஆசைத்தீர ஆழமாய் உழுது பார்க்க வயதும் உடலும் இடம் தருவதில்லை என்பதே பலருடைய வருத்தம். அத்தகையோரிடம் ‘போகட்டும் விடுங்கள், இப்போதாவது அது பற்றிய நற்சிந்தனை வந்ததே ... சந்தோஷம்’ என்பேன். ஊழ்வினைப் பயனாக அதுவரை உணராதோர் அதிகம்.
பழம் நூற்றாண்டுகள் கழிந்தாலும், நவீனங்கள் முன்னேற்றங்கள் ஒருபக்கம் இருந்தாலும், இன்னும் நாம் சுவாசிக்கிறோம், உண்கிறோம், மலம்/சிறுநீர் கழிக்கிறோம். இது மட்டும் ஏன்? விட்ட மூச்சை வாங்காமல் போனால் என்ன? மூச்சு ஒரே கலையில் ஓடிக்கொண்டிருந்தால் என்ன? செரித்த உணவு பிரியாது போனால் என்ன? இவை எல்லாம் காலனை அழைக்கும் அறிகுறிகள். இதை எதிர்த்துப் போராட வேண்டுமென்றால் யோகம் மெய்ஞானம் நாம் பெறவேண்டும். தர்மநெறி பின்பற்ற வேண்டும். தான் அவனாகும் நிலை வரும்வரை இவை எல்லாம் நல்ல முறையில் நடக்க அவன் தயவு வேண்டும். அப்போது அறிவியல் என்பது மாயை, அது மெய்ஞானத்தினுள் அருவமாக ஒளிந்திருக்கும் விஞ்ஞானம், அது அவனுடைய திருவிளையாடலே என்பது தெளிவாகும்.
- எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக