ஆறுமுகனைப் பார்த்து ‘வா, என் அப்பனே!’ என்று சிவபிரான் அழைத்தார். முருகனை உயர் நிலைக்கு இட்டுச் சென்றதோடு, பிரணவதிற்குப் பொருள் கேட்டுச் சோதித்தார். பரவுணர்வு நிலையில் மகாரம் உணர்த்தும் ஊமை எழுத்தின் வெளிப்பாடே சகஸ்ராரத்தில் ஒலிக்கும் ஓங்காரம். ஓங்காரத்திற்குப் பொருள் கேட்ட சிவனை தன் சீடர் ஸ்தானத்தில் பணியச் சொல்லி, தானே குருநாதனாக இருந்து திருவேரகத்தில் சுவாமிநாதனாக/தகப்பன்சாமியாக இருந்து உபதேசம் செய்தான்.
பரம்பொருளான சிவனே அதன் உட்பொருளாக இருக்க முருகப்பெருமானின் பெருமைகளை உலகோர்க்கு உயர்த்திக் காட்ட இத்திருவிளையாடலை ஆடினான். முருகன் சிவனுக்கு என்னவெல்லாம் உபதேசித்தான்? ஆறாதார சக்கரங்களின் நிலைகளைக் கடந்து ஆகாயப் பரவெளி அம்பலமாம் சகஸ்ரார தளத்தில் ஓங்காரம் ஒலிக்கும் ரகசியத்தை உணர்த்தி, பராபரையாளின் மகிமையை உணர்த்தி, அஷ்டாங்க யோகங்களையும் சமாதி நிலைகளையும் விளக்கி, யாகங்களின் மேன்மையை உள்முகமாக (யோகத்தீ), வெளிமுகமாக (வேள்வித்தீ) பாவனையாக நிகழ்த்துவதையும், தேவியாள் குண்டலினி ரூபமாக குலதெய்வமாக வருவதையும் உணர்த்தினான். இந்த தத்துவங்களை முருகக்கடவுள் சிவனாருக்கு எடுத்துரைத்ததால் சிவனார் நிலைத்து இருந்தார்’ என்று பொருள்படும்படி இப்பாடல் உள்ளது.
ஒரு தகப்பனானவன் தன் மகனுக்கு ஞானம் ஊட்டி, அவனுடைய திறன்களை வெளிக்கொண்டு வந்து, அவனிடமே சந்தேகம் கேட்டுத் தெளிவடைவதுபோல் அவனை உயர்த்திக்காட்டிக் கொஞ்சி அரவணைக்க சிவனே நல்ல உதாரணம். ஆனால் சமுதாயத்தில் நடப்பது என்ன? தன் மகனின் வளர்ச்சியை சகித்துக்கொள்ளாத தகப்பன்களும் இருக்கும் கலி காலத்தில்தான் நாம் வாழ்கிறோம்.
ஆறு குழந்தைகளை உமையாள் ஒன்றிணைத்ததால் கந்தன் என்ற பெயரும் பெற்றான். சிவனும் சகதியுமாகச் சேர்ந்து அக்குழந்தையை யோக நிலைக்கு ஏற்றிவிட பயிற்சிகள் தந்தனர். முருகனுக்கு வாசியோகம் கற்றுத் தந்தும், காலனை வென்றிட வாசியில் நிலைத்திடவும், பிறவிகள் இல்லாமல் சாகாநிலை எய்த கற்பங்கள் உண்ணத் தந்தும், மாயையை வென்றிடவும், ஆறாதார சக்கரத்தின் உச்சியில் ஞான அமுது சிந்த அதைப் பருகச் சொல்லியும், உறக்கமில்லா நிலையை அருளி நித்திய கர்த்தவியங்கள் மேற்கொள்ள சிவனுக்கு ஈடாக முருகனைத் தயார் படுத்திப் போதிய சக்தியை அளித்து, என் கண்மணியே வாடா! என்று அணைக்கிறாள். அவளை மனோன்மணியாள் என்று முருகன் வர்ணிக்கிறான். மனோன்மணியாளைப் பற்றி சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதாகப்பட்டது, சிவன் பெற்றுவிட்டதால் திடீரென எல்லாம் தெரிந்துகொண்டு சூரனுடம் போர் செய்ய முருகன் ஓரிரவில் போய்விடவில்லை. அவன் வளரும் பிராயத்தில் எல்லாம் கற்றுக்கொண்டு, தன்னுள் மறைந்திருக்கும் பிரம்மத்தைத் தட்டியெழுப்பி அதை உணர்ந்தபின் தகப்பன்சாமி என பெயர் பெறுகிறான். யோக சாதனை எய்தி யோக சுப்பிரமணியமாகவும், சிவனின் இடகலையென சக்தி/மாதவன் பாகமாக இருக்கும்போது சக்திச்சரவணன்/ வேங்கடசுப்பிரமணியம் என்று பெயர் பெறுகிறான். ஆக, ஒரு மகவு வளரும்போது தாய்/தந்தை உறுதுணையாக இருக்கவேண்டிய அவசியத்தை முருகனே உணர்த்துவது தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக