வாசகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். மேருமலை என்பது வடக்கே கேதார்நாத் -திபெத் அருகே இருப்பதாகவும், கிழக்கே ஓடிஷா கடல் பகுதியில் இருப்பதாகவும், தெற்கே குமரிக்கண்டத்தில் இருப்பதாகவும் ஏதேதோ சொல்லப்படுகிறது, இதில் எது உண்மை?
மேரு என்பது கயிலாய பர்வதம் அமைந்த இமயமலைப் பகுதிதான் என்பது இரண்டாம் காண்டம் பாடல்களில் ஆங்காங்கே வெளிப்படுகிறது. போகர் சீனதேசத்தைக் கடந்து தக்ஷிணம் வரும்போது மேருவைத் தரிசித்தார்.
'பார்த்திருந்து துவாபரமாய் யுகத்தில் யானும் பர்வதாமேருகிரி தன்னில்வந்தேன் வந்திட்டேன் சீனபதியான் கடந்து வாகுடனே மேருகிரி காணவந்தேன்'
இப்படத்தில் நாம் பார்க்கும் பழுத்த நிறத்தில் தகிக்கும் சொர்ண மேருதான் கயிலாயம் என்பது போகர் பாடலில் தெரிகிறது. இந்த நிறம் எங்கிருந்து வந்தது? பனி அடர்த்தியாய் இருந்தால் உதயத்தில் சூரிய ஒளிச்சிதறல் காரணமாக இந்நிகழ்வு ஏற்படும் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். பிரம்ம முஹூர்த்த 3.45 - 5 மணிக்கு சூரிய உதயம் இல்லை. சரி! சூரியன் உள்ளது என பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும் அந்நேரம் பனி இல்லாத வெறும் பாறையிலும் செந்நிறம் வரக் காரணம் யாது? அதுவே பனி படர்ந்த வெளிச்சுற்றுப் பகுதியில் செந்நிறம் ஏன் இல்லை? முற்போக்கு அறிவியலாளர்களால் பதில் சொல்ல முடியாது. அங்கே அக்கணம் ரசவாதம் நிகழ்கிறது என்று போகர் சாட்சி சொல்கிறார்.
'மூட்டினார் சித்தகிரி பர்வதத்தை முனையான மூலிகைகள் முழுதும்பூசிமாட்டினார் துருத்திக்கொண்டு வூதிக்காட்டி மகாமேரு சாரலைப் பழுக்கச் செய்தார்'
ஆக அரூபமாய் அங்கே தவத்தில் இருக்கும் எண்ணற்ற ரிஷிகளும் சித்தர்களும் ஒருங்கே கயிலாய மலையைப் பொன்னம்பலமாக மாற்றும் நிகழ்வே அது. அதற்கு நம் அறிவியலாளர்கள் ஏதேதோ காரணம் சொல்கிறார்கள். அறிவியல்படி பனி படர்ந்த 2500 கிமீ நீள இமயமலைத் தொடர் முழுவதுமே தங்கமயமாய் ஒளிர வேண்டும். ஆனால் இம்மலை மட்டும் ஏன்? அதைத்தான் போகர் பாடல் சொல்கிறது.
இங்கே படத்தில் கயிலாயமலை பெருவுடையாரைச் சுற்றி அகழிபோல் உள்ளது. பனி பொழிந்து நிரம்பினால் இந்தச்சுற்றுப் பள்ளத்தின் ஆழம் நம் கண்களுக்குப் புலப்படாது. பனி இல்லாதபோது எடுத்த இப்படம் மிகத் துல்லியமாய் உள்ளது. ஓம் நமசிவாய. 🙏🙏
இதேபோல் தென்காசியில் மலைக்கு மூலிகைப்பூசி, துருத்தி கொண்டு ஊதி அதைத் தங்கமயமாக மாற்றத் துடித்த தேரையர் செயலால் கலக்கமுற்ற ரிஷிகள் நேரே அகத்தியரிடம் முறையிட அதனால் அகத்தியர்க்குக் கோபம் வந்து தேரையரைத் தண்டித்த கதைதான் நினைவுக்கு வந்தது.
-எஸ்.சந்திரசேகர்