ஒரு கோவில் எப்படி அமைய வேண்டும், சிலைகள் எப்படி வடிக்கப்பட வேண்டும், எப்படி பிரதிஷ்டாபனம் செய்ய வேண்டும் என்பது வரை ஆகம விதிமுறைகள் பல இருக்கின்றன. ஒரு பீடத்தின் மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து அது பீடத்திலிருந்து அகலாமல் இருக்க அடிபாகத்தில் அஷ்ட பந்தன மருந்து சாத்து செய்வார்கள்.
அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை. இந்த எட்டுப் பொருள்களைச் சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும். கொம்பரக்கு தொடங்கி ஒவ்வொரு பொருளாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இந்த மருந்து கல்போல் இருக்கவும் கூடாது, இளகலாகவும் இருக்கக்கூடாது.
எல்லா பொருட்களை எந்தெந்த அளவு சேர்த்து எவ்வளவு நேரம் இடிக்க வேண்டும் என்பதற்கும் கால அளவு உள்ளன. சித்தர் பாடல்களிலும் பதார்த்த செய்பாகமுறை சொல்லப்பட்டுள்ளது.
"கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி
செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது
நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து
ஆக்கல் அட்டபந்தனம் ஆம்"
இது பொதுவான அஷ்டபந்தன முறை என்றாலும் சில தலங்களில் தங்கத்தால் சொர்ண பந்தனமும் செய்யப்படுகிறது. இவை குறிப்பிட்ட காலம் வரையே கெட்டியாக நிற்கும். அபிஷேகம் மற்றும் தினசரி பூசைகளால் காலப்போக்கில் தேய்மானமாகி பலவீனப்பட்டு உதிரும் தன்மை உடையது. ஒவ்வொரு முறையும் குடமுழுக்கின்போது மூலவர் விக்ரகத்தை வெளியில் எடுத்துச் செப்பனிட்டு அதன்கீழே புதிதாய் இந்த சிவப்பு மருந்தை இடுவார்கள்.
ஊர் அரட்டை அடித்துக்கொண்டு மருந்து இடிக்க முடியாது. உரலில் இடிப்பவர்கள் மந்திரங்கள் ஜெபித்தபடி ஆச்சாரமாகச் செயல்பட வேண்டும். அம்மருந்தில் சக்தி அலைகள் உருவேற்றப் பாய்ந்திட தெய்வீகத் தன்மையைப் பெறும். கும்பாலங்காரம் செய்யும்போது வெவ்வேறு பிரமாணங்களில் நூல் சுற்றும்போது மானசீக மந்திர ஜபம் நடப்பது போலவே இம்மருந்தையும் உருவேற்றி இடிக்க வேண்டும்.
ராஜராஜ சோழன் கட்டுவித்த தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் முதல் குடமுழுக்கின்போது கருவூராரை அழைக்காமல் அகம்பாவத்தில் மன்னன் அவமானப்படுத்தியதால் பெருவுடையார் அடிபாகத்தில் மருந்து ஒட்டவில்லை. என்ன செய்வதென அறியாமல் அங்கே அந்தணர்கள் குழம்பினர். சோழன் தன்னுடைய தவறை உணர்ந்தபின் சித்தரைத் தேடிப்போய் அழைக்க, அவர் தன் வாயில் தரித்திருந்த தாம்பூலத்தை உமிழ்ந்து 'இதைப் போய் அதில் சாத்து' என்றதும், அதன்பின் அஷ்டபந்தனம் திடப்பட்டு லிங்கத்திருமேனி ஸ்திரமாக நின்றது என்பதும் நாம் ஏற்கெனவே அறிந்த விஷயம்தான்.
ஆக, ஆகம விதிப்படி கல் தேர்வு, சிலை வடிப்பு, சோதனை முறைகள், வேள்விகள், ஸ்தாபனம், மந்திரங்கள், அஷ்டபந்தன மருந்து சாத்து, சம்ப்ரோக்ஷணம் வரை எல்லாம் நூல் பிடித்தபடி வரிசையாக நடக்கும். தெய்வீக பந்தனம் நமக்கும் காப்பாக இருக்கும்!
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக