ஆன்மிக முகநூல் பக்கத்தில் என்னுடைய கருத்துரைக்கு முன்பாக ஒரு அம்மையாரின் பதில் இருந்தது. அவருடைய பெயர் பரிச்சயமாய்த் தெரிந்ததால் அவருடைய ப்ரோஃபைல் பக்கத்தைச் சென்று பார்வையிட்டேன். என்ன ஆச்சரியம்! அவர் எனக்கு 10ஆம் வகுப்பு ஆசிரியை.
உடனே அவருக்கு, “மேடம், நான் படித்த பள்ளியில் நீங்கள்தான் எங்களுக்கு கிளாஸ் டீச்சர். உங்கள் கணவர் திரு.ராஜேந்திரபிரசாத் ஒரு மனநல மருத்துவர் என்று நீங்கள் ஒருமுறை சொன்னது நினைவுள்ளது. வேளச்சேரி விஜயநகரில் வசித்தீர்கள். பத்தாம் வகுப்பு தொடக்கம்வரை எங்களுக்குப் பாடம் நடத்திய திரு.மாணிக்கம் அச்சமயம் திருச்சி நேஷனல் காலேஜுக்கு வேலை கிடைத்துப் போனதால் நீங்கள் வந்தீர்கள். மெட்ரிகுலேஷன் வகுப்பிற்கு ஆங்கிலம் துணைப்பாடம் ‘டிரெஷர் ஐலன்ட்’ இருந்தது. உள்ளூர் திரையரங்கில் அப்பழைய படம் ஓடிக்கொண்டிருந்ததை அறிந்து மொத்த வகுப்பையும் உங்கள் செலவில் படம் பார்க்க அழைத்துச் சென்றது நினைவிருக்கிறதா? உங்களை இங்கே கண்டதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் பல்லாண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ இறையருள் புரியட்டும்” என்று பதிவிட்டேன்.
அதைப் பார்த்துவிட்டு அவர், “ஆமாம்ம்ம்... நன்றாக நினைவுள்ளது. இதைவிட எனக்குப் பெருமையான தருணம் இருக்க முடியுமா? மிக நீண்ட... பல வருடங்கள் கழித்து என்னை என் பழைய மாணவர் நினைவு வைத்துக்கொண்டு பேசியுள்ளது மட்டற்ற மகிழ்ச்சி... ஆனந்தம்! ஃபிரென்ட் ரிக்வெஸ்ட் தருகிறேன் எற்றுக்கொள்ளவும்” என்று திருமதி ரமணி பிரசாத் போட்டிருந்தார்.
காலம்தான் எத்தனை வேகமாய்க் கடந்து போய்விட்டது! நம் உடல் மூப்படைந்து போனாலும் மனம் மட்டும் என்றுமே இளமைக்காலத்து நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை. தற்போது கோவை அருகே பாலக்காட்டில் கணவருடன் வசிக்கும் அவருக்கு வயது 74.
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக