About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 20 ஜனவரி, 2023

எப்படி நம்புவது?

நேற்றைய பதிவைப் பற்றி ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். “செவ்வாய் கிரகத்துல காந்த சக்தி மூன்று வேளையும் வருவதற்கு பழனிதான் காரணம்னு எப்படி சொல்றீங்க? நவபாஷாண சிலை பற்றி தெரிஞ்ச நாம் வேணும்னா இதை நம்பலாம் ஆனால் வெளிநாட்டுக்காரங்க ஒத்துப்பாங்களா?”

அவர் கேட்டது சரியே. 👍 ஆன்மிகத்தை வைத்துத்தான் அறிவியல் நிகழ்வு ஒன்று நிரூபிக்கப்படவேண்டும் என்று இருந்தால் அதை உலக விஞ்ஞானிகள் நிராகரிப்பார்கள். தென்னிந்தியாவில் எங்கோ பழனியில் உள்ள மூன்றடி உயர ஒரு சிலை எப்படி 250 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் விளைவுகளை ஏற்படுத்தும்? நான் சொன்ன கருத்தை ஏற்பதா வேண்டாமா என்று இந்த முகநூல் குழுவில் உள்ளவர்களே நினைக்கலாம்.

செவ்வாய் கிரகம் பூமியின் கர்ப்பத்திலிருந்து விடுபட்டுப்போன ஒரு செந்நிறமான கோள். அதில் உயிர்கள் வாழாது ஏனென்றால் -80°C குளிர், நீர் இல்லை, உப்பும் ரசாயனங்களும் பாறைகளும் நிறைந்த நிலப்பரப்பு, ஏறக்குறைய காற்று இல்லாத வெற்றிடம், அங்கே புவியீர்ப்பு விசை என்பது நாற்பது விழுக்காடுகூட இல்லை.

நம் பூமியிலிருந்து ரேடியோ சிக்னல் சமிக்ஞை அனுப்பினால் அது அங்கே சென்று சேர குறைந்தது 3 நிமிடம் முதல் 22 நிமிடம் வரை ஆகும். பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தூரத்தைப் பொறுத்தே நேரம் அமையும். ஆக சிக்னல் இங்கிருந்து போய் அங்கே அடைந்தபின் மீண்டும் பூமிக்குத் திரும்ப எப்படியும் சராசரியாக 12 நிமிடங்கள் ஆகும். 

முன்னொரு சமயம் பழனி விக்ரகத்தில் சாற்றிய ராக்கால சந்தனத்தை எடுத்துக் கரைசலாக்கி அதில் என்னென்ன உலோக பாஷாணங்கள் கரைந்துள்ளது என்பதை அடாமிக் ஸ்பெக்ட்ரோமீட்டார் மூலம் கண்டறிய முயன்று, அதில் எந்தவொரு உலோக அணுக்களும் வெளிப்படாது போனதே நவீன தொழிநுட்பதிற்குக் கிடைத்த பெருந்தோல்வி.

விளாபூஜை, உச்சிகாலம், சாயரட்சை காலங்களில் பழனி முருகனுக்கு நடக்கும் அபிஷேகம் ஆராதனையின்போது அங்கே செவ்வாயில் நாஸா செயற்கைக்கோள் இறக்கிவிட்ட யந்திரம் காந்தப்புல வீரியத்தை அளவீடு செய்து பார்த்தால் முடிவு தெரிந்துவிடும். சந்தன கரைசல் போலவே காந்தப்புல சோதனையில் தெய்வசக்திபற்றி எதுவும் தெரியாமல் போனாலும் ஆச்சரியமில்லை.     

ஆன்மிகத்தைக் கொண்டு அறிவியலை நிரூபிக்க இருப்பின் அதை இவ்வுலகம் ஏற்காது. Theory of doubt, அடிப்படையில் பழனி அத்தியாயத்தை ஓரமாய் வைப்பார்கள். வெகுகாலமாய்த் துப்புத் துலங்காத ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் சம்பந்தப்பட்ட காவலர், கடைசியாய் அஷ்டகர்ம மாந்திரீகரிடம் சென்று அந்தக் கொலையை யார் செய்தது, அதற்கான தடயங்கள் எங்கேனும் உள்ளதா என்பதை ரகசியமாய்க் கேட்டறிந்து, மேய்ந்து, இழுபறியான வழக்கை விரைந்து சரியாக முடித்துவிடுகிறார். அஷ்டகர்ம பிரயோகத்தில் வெளிப்பட்ட விஷயங்களை நம் சட்டம்/நீதி ஏற்காது என்பதால் தனிப்பட்ட காவலர் புரிதலில் ஏற்றுக்கொள்ளலாமே தவிர அதை ஒரு வாக்குமூல சாட்சியாய் ஏற்கமுடியாது. 

கிரகண காலத்தில் உணவுப் பண்டங்களின் மீது தர்ப்பைப்புல் போட்டால் அது கதிர்வீச்சைத் தடுக்கும் என்பதை மேலையில் ஏற்கவில்லை. ஆனால் அதை நெடுங்காலமாய் வீடுகள்தோறும் சாஸ்திரமாக நாம் கடைப்பிடித்தோம். பல நூற்றாண்டுகளுக்கு முன் போகர் நிறுவிய நவபாஷாண சிலையானது காலத்தால் தேய்மானமாகி வலுவிழந்தது என்றாலும், இன்னும் சக்தியை இழக்கவில்லை. அதை அவ்வப்போது போகர் தன் நிலவறையிலிருந்தே செப்பனிடுகிறார் என்று நான் சொன்னாலும் அதற்கு ஏது சாட்சி? 

அதுபோல்தான் செவ்வாயின் காந்தப்புலமும் பழனி முருகனின் அபிஷேகங்களும். காந்தப்புல சோதனையில் இந்து சமய நம்பிக்கை வெற்றிபெற்றால் வல்லரசு நாடுகள் இதை விரும்பாது. அதையும் தாண்டி இச்சோதனையில் தன்னுடைய சக்தியை உலகறிய வெளிப்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டியது தண்டபாணித் தெய்வமே தவிர நாம் அல்ல! நான் சொன்னது ஒரு தகவலாக இருக்கட்டும். 🙏

-எஸ்.சந்திரசேகர்





3 கருத்துகள்: