சிறியாநங்கை என்ற மூலிகை விஷ ஜந்துக்களை அண்டவிடாது. அதனால் வேலியோரம் நிறைய இருக்கும். மஞ்சள்காமாலை, கல்லீரல் பிரச்சனை, காய்ச்சல், சளி, உடலில் வீக்கம், மதுமேகம் (டையாபடிஸ்) போன்றவகைகளுக்கு மட்டும் பயன்படுவதில்லை. அது யோக மார்க்க உயர்வுக்கும் சின்மயத்தில் ஒளியைத் தரிசிக்கவும் காரணமாக உள்ளது என்றால் மிகையில்லை. இதுபோன்ற மூலிகை அஷ்டகர்மத்திலும் பயன்படும்.
எந்த ஒரு பச்சிலை மூலிகையாக இருந்தலும், அதைப் பறித்து உபயோகப்படுத்த நம் உடல்நிலை ஏற்றம் பெறும் அதோடு அதன் ஆன்மா மேன்மை அடையும். விதியாளியின் கர்மவினைக்கேற்ப அம்மருந்து உடலிலும் யோகத்திலும் செயல்படும் என்பது சித்தர் விதி.
தோட்டத்திற்குப்போய் கீரை பறிப்பதுபோல் மருத்துவ மூலிகைகளை பறித்தேன் எடுத்தேன் என்று வந்திட முடியாது. அதற்கும் உயிர் சக்தி, மந்திர சக்தி உள்ளது, என்பதால் அதனிடம் மந்திரம் ஜெபித்துச் சாப நிவர்த்தி செய்துகொள்ளவேண்டும். இது சைவ மார்க்கத்தின் சிறப்பு.
சிறியாநங்கையின் அனைத்து பாகங்களும் சமூலமாய் உபயோகித்தல் மருந்தே. அந்தச் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து வஸ்திரகாயம் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். ராஜக்கனி என்று அழைக்கப்படும் எலுமிச்சையின் சாற்றை ஒரு படி ஊற்றி மூன்று சாமம்வரை அரைத்தபின் அதை வில்லைகளாகத்தட்டி காயவைக்க வேண்டும். அதன்பின் அதன் எடைக்குச் சமமாகச் சீந்தில்கொடி சர்க்கரையை போட்டு பசும்பால்/ நெய் விட்டு நான்கு சாமம்வரை மைய ஆட்டி எடுக்கவேண்டும். இதில் ஒரு வராகன் (4 கிராம்) எடுத்து 'மசி' என சொல்லிவிட்டு அந்தி சந்தி என தினம் இருவேளை ஒரு மண்டலம் உண்டு வந்தால் வாசி திரிகூட பர்வதத்தில் சங்கமிக்க, ஆக்ஞாவில் சுடரொளி அக்னியாய்ப் பிரகாசிக்க, அங்கே பிரம்மரந்திரம் திறக்கும்போது கபாலபீட மேருவில் நாதங்கள் கேட்கும். திரிகூடம் எங்கே உள்ளது? புருவ மத்திதான் அது!
அதனால் சாகாக்கால் வேகாத்தலை போகாப்புனல் என்று சித்த குறியீட்டில் சொல்வதற்கேற்ப வைத்தியம் யோகம் ஞானம் ஆகிய மூன்றுக்கும் இந்த மூலிகைச்சமூலத்தின் கிருதம் ஏற்றம் தரும். எப்போதும்போல் இதற்கும் பத்தியம் தேவை.
அதென்ன கிருதம்? ஒவ்வொரு நோய்க்குத் தக்கவாறு மூலிகைகளுடன் நெய் சேர்த்துத் தரும் மருந்துதான் கிருதம் என்கிறது ஆயுர்வேதம். முருகப்பெருமான் அகத்தியர்க்கு உபதேசித்த சுப்பிரமணியர் ஞானம் நூலிலிருந்து மேற்படி பாடல்களை இங்கே சிந்தித்தோம்.
-எஸ்.சந்திரசேகர்