அகத்தியர் கனகமணி நூறு என்ற நூலில் நோய்விதி, நோயாளி பரிட்சை, வைத்திய செய்பாகம், பிரயோகம், அனுகூலங்கள் எல்லாம் விவரிக்கும்போது யாரெல்லாம் மருந்து செய்து கொடுக்கக்கூடாது என்ற பட்டியலையும் (பா:54) சொல்கிறார்.
அம்பட்டர், வண்ணார், எண்ணெய் வியாபாரிகள், வட்டித்தொழில் ஈட்டுவோர், விஸ்வகர்ம கம்மாளர்கள், குயவர்கள், கள் இறக்குவோர், வேடர்கள், துர்க்குணம் கொண்டோர், முன்கோபிகள், சாஸ்திரங்களை மதிக்காதவர்கள், அன்னமிடாதவர்கள், கருமிகள், நீதிநெறி இல்லாதவர்கள், அக்கிரமக்காரர்கள், தற்பெருமை பேசுவோர், கள்வர்கள், தெய்வபக்தி இல்லாதவர்கள் ஆகியோர் மருந்து செய்து கொடுக்கலாகாதவர்கள் என்கிறார் அகத்தியர்.
அவர் உரைத்தது இன்றைக்கும் பொருந்துமா என்பது எனக்குத் தெரியாது. செயலால் மனத்தால் வாக்கால் களங்கப்பட்டவர்களும், மாசு நிறைந்த தொழிற்பணி செய்பவர்களும் வைத்தியராக இருக்கவோ மருந்து செய்துகொடுக்கவோ கூடாது என்கிறார். அப்படியே அவர்கள் செய்துகொடுத்தாலும் அபய சுவஸ்தம் என்கிற ஹீலிங் டச் அவர்களிடம் இருக்காது என்கிறார்.
மேற்சொன்ன குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரவர் ஜனனகால ஜாதக கோள் சஞ்சாரப்படி வைத்தியம் சார்ந்த தொழில் விதிக்கப்பட்டிருந்தால் அதை யாராலும் மாற்றமுடியாது. எனக்குத் தெரிந்து இந்தப் பட்டியலில் வரும் மருத்துவர்களிடம் கூட்டம் வருகிறதைக் காண்கிறேன்.
அதுபோக வைத்தியரின் லட்சணங்கள் என்னென்ன என்று இன்னொரு பாடலில் சொல்லியுள்ளார். சாந்தகுணமும் சக்தியுள்ளவனாயும், நூல் கற்றவனாய், நன்மைகள் செய்தவனாய், வசீகர சிவப்பு மேனியுள்ளவனாய் இருக்கவேண்டும்; சூரணம் பற்பம் மெழுகு லேகியம் தைலம் ஜெயநீர் சுண்ணம் சரக்குவைப்பு திராவகம் பூநீறுவழலை செய்யத்தெரிந்தவனாய் இருக்கவேண்டும் என்றும்; அஷ்டகர்மம் யோகம் மந்திரப் பிரயோகமும், சக்தி பூஜை செய்பவனாகவும் இருக்கவேண்டும். வைத்தியர் அங்கத்தில் எல்லா அவயங்களும் குறைவின்றி இருக்கவேண்டும். குருடு செவிடு முடம், குருத்துரோகி, ஆகாத குணமுடையோன், ஜீவவதை செய்தவன், கல்வி கற்காதவன், தாய்தந்தையின் சாபம் பெற்றவன், லோபி, வைத்தியனாகத் தகுதியற்றவன் என்கிறார்.
ஆக லட்சணங்கள் பொருந்திய உத்தம வைத்தியரிடம் அணுகி மருந்து வாங்கி உண்டால், கொடுநோயெல்லாம் குணமாகும். அத்தகைய வைத்தியர்களுக்கு நிதி, வஸ்திரம், நெல்லரிசி, பண்டங்கள், தாம்பூலம் வைத்துத்தந்து கௌரவித்து அவர்கள்பால் பக்தி விசுவாசம் கொள்ளவேண்டும் என்று அகத்தியர் உரைக்கிறார்.
எங்கள் ஊரில் மொண்டி வைத்தியர் ராமலிங்கம் என்பவர் இருந்தார். திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அவர் கைராசியும், தொழில் சுத்தமும் நிறைந்தவர் என்று என் தாத்தா சொல்லக்கேட்டுளேன்.
ஆக, இதெல்லாம் பொதுவான விதியாகக் கொண்டாலும் அவரவர் கர்ம வினைக்கேற்பத்தான் கைராசி வைத்தியர் அமைவதும் நோய் குணமாவதும் உள்ளது. அகத்தியரின் பாடல்களைத் தோண்டி ஆராய்ந்து இக்காலத்தில் இவ்விதிகள் சரியா? சாதிபேதம் தகுமா? மருத்துவத்தை வியாபாரமாக்குவது சரியா? என்ற போக்கில் அதில் குற்றம் குறை காணாது இருப்பது நலம்.
- எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக