சங்க இலக்கியங்களில் பலவிதமான கவிப்பாடல்களைப்பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். பக்தி, சந்தான விருத்தி, ஆயுள் ஆரோக்கிய ஆசிகள் நல்கும் வாழ்த்து, வேதனைப்படும் உயிர் விடுதலை பெற பிரார்த்தனை, எதிரியைத் தண்டிக்க அறம் பாடுதல், சரம கவி இயற்றல் என்று பல்வேறு ரகங்கள் உள்ளன. உற்ற நேரத்தில் அருள்புரி என்று சித்தர்களை, குலதெய்வத்தை வேண்டிப்பாடினால் உடனே நிறைவேறும்.
இதெல்லாம் நம்பும்படி இல்லை என்று இக்காலத்தில் நினைப்போரே அதிகம். சமஸ்கிருதம் தமிழ் மட்டுமல்ல எந்த மொழியில் பாடினாலும் பலன் உண்டு. பாடும் கவிஞனின் மனத்திலும் வாக்கிலும் பாடப்படும் கவிப்பாடலிலும் தன்னலமற்ற சக்திவாய்ந்த பிரயோகமும் தெய்வீகமும் இருக்கவேண்டும். அக்காலத்தில் ஔவையார், காளிதாசன், நந்திவர்மன், கம்பன் போன்றோர் பாடிய கனமான நடையில் நிறை இலக்கணம் ஏற்றிய பாடல் போன்று இருக்கவேண்டும் என்பதில்லை. எழுதப்படிக்கத் தெரியாத ஊமையன் மானசீகமாகப் பாடினாலும் அதற்குப் பலனுண்டு.
சமூக வெளியில் இரண்டு வரிகளில் வாழ்த்துவது இயல்பான ஒன்று. ஆனால் கூடியவரையில் நெருங்கிய நட்புகளை வாழ்த்த பிரத்தியேக தனிப்பாடல்களைத் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அக்கணம் தருவது என் பழக்கம். நாம் பாடும் நேரம் நம்முடைய ஜீவகாந்த எண்ணங்கள் பரமாகாச வெட்டவெளியில் எதிரொலிக்கும், அந்த அலைகள் ஜீவராசிகள் மூலம் கடத்தப்பட்டு அந்தந்த நபரை வந்தடையும். அவர்களும் உடனே அதை உணர்ந்து ஆமோதிப்பார்கள். எனக்குத் தெரிந்து மதுரை சென்னை இலங்கை லண்டன் ஆகிய தலங்களிலுள்ள நண்பர்கள் என் எண்ணங்களைத் திறம்பட கிரகிக்க முடிகிறது. இங்கே அவர்களுடைய பெயர்களைச் சொல்லக்கூடாது.
அன்றாடம் எந்த மனநிலையில் இருந்தாலும் நல்ல இன்சொற்கள் சொன்னால் மட்டும் போதுமா? போதாது! ஏன்? சில சமயங்களில் வாக்குவாதம் முற்றிப்போய் பாதிக்கப்பட்டவர் கோபத்தில் “நீங்க நல்லா இருப்பீங்கடா” என்று அழுதுகொண்டே அனல் கொதிக்கும் புண்பட்ட மனத்துடன் சொன்னாலும் அது கேடு விளைவிக்கும். “மனஸா வாச்சா கர்மனா” என்றுதான் கிருஷ்ணர் சொல்கிறார்.
“ஆமா, சொன்னா உடனே பலிக்குற அளவுக்கு இக்காலத்துல ஒரு பய கிடையாது. இப்படி சும்மா உதார் பேசி பயமுறுத்துறாங்க” என்று தவறாக எண்ணுவோர் உண்டு. கல், தாவரம், மீன், பறவை, நாய், பசு, மனிதர் என்று இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லா சரம்-அசரம் ஜீவனும் சக்தி அலைகளை வீசும் நம்மை வாழ்த்தும் என்பதை மறந்திடக்கூடாது.
இரண்டு நண்பர்களுக்காக வாழ்நாளில் இதுவரை இருமுறைதான் மோட்ச கவி பாடியுள்ளேன். பாடிய இரண்டே சாமத்தில் அவர்கள் இறையடி சேர்ந்தனர். பதிவிடும் பதிகங்களின் வீரியத்தை அப்போதுதான் இறைவன் எனக்கு உணர்த்தினான். அது முதலே சொற்பிரயோகங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறேன். ஓம் நமசிவாய! 🙏
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக