நாங்கள் இருந்த பகுதியில் ராஜேந்திரன் (S/o கன்னியம்மா) என்ற கூலித்தொழிலாளி இருந்தார். அவர் நாட்டு வெடி தயாரிப்பு, சாராயம் காய்ச்சுதல் முதல் நடமாடும் இஸ்த்ரி வண்டி வரை எல்லா வேலையும் செய்தார். அக்கம்பக்கம் நடப்பதை எல்லாம் நான் சிறுவனாக இருந்தபோது கூர்ந்து பார்த்துள்ளேன், நினைவில் வைத்துக்கொள்வேன்.
கார்த்திகை தீபத்தன்று அவர் ஒருமுறை கையில் பிடித்தபடி 'சூம்ம்..சூம்ம்..' என்ற ஓசை எழுப்பிய எதையோ சுற்றினார். தலைக்கு மேலே தீப்பொறிகள் வட்ட வட்டமாய் சிதறியது கண்டு எனக்கு ஒரே மகிழ்ச்சி. வேடிக்கைப் பார்த்த நான் சுவரோரம் கேட் மீது அமர்ந்தபடி 'அது என்ன?' என்று கேட்டேன். இது 'சுளுந்து / மாவுளி' என்றார். அது என்னவென்று அவ்வயதில் எனக்குத் தெரியாது. உன் வயசுக்கு இது புரியாது என்று சொல்லாமல் அதை பொறுமையாக விளக்கினார்.
'அதுக்குள்ள என்ன பட்டாசு இருக்கு?' என்றேன்.
'இதுல டப்பாசு இல்லை. இதுக்குள்ள காய்ஞ்ச பனங்காய் குலை தண்டு, புல்லு, இஸ்த்ரிக்கு போடுற பற்றவெச்ச கரித்துண்டு போட்டு பெரிய ஓட்டை சாக்கு துணிகுள்ள கட்டிவெச்சு, முடிச்சு போட்டு, அதோட நுனில கயிறு கட்டி இப்படி சுத்துவோம். சரி, கீழ இறங்கிபோய் நீ தள்ளி நின்னு பாரு, தீபொறி படும்மில்ல' என்றார்.
அதுதான் 'மா ஒளி', பெரிய ஜோதி என்று பொருள்பட அழைத்தனர். அதன்பின் காய்ந்த பனை ஓலைகளை குவியலாகப் போட்டு கொளுத்தும் சொக்கபனை நிகழ்ச்சி நடக்கும். (பேச்சு வழக்கில் 'சொக்கப்பனை' பானையாக மாறியது.) முன்னாளில் காடுகளில் பயணிக்கும்போது இந்த சுளுந்தை தீபந்தம்போல் சுற்றிக்கொண்டே போவார்கள் என்று படித்துள்ளேன். தீபாவளி சமயத்தில் இன்று இதெல்லாம் நினைவுக்கு வந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக