சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் (2007) ஒரு நாள் திரைப்பட இயக்குனர் திரு ஏ. பாலகிருஷ்ணன் அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சலும் தொலைபேசி அழைப்பும் வந்தது. அப்போது நான் கர்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டு வார இறுதி விடுமுறைகளில் இதழியலாளராக இருந்தேன்.
பின்மாலை நேரம். மகாலிங்கபுரத்தில் ஒரு சிறிய அலுவலகம். காமராஜ் திரைப்படம் எடுத்தவர் என்று தன்னைஅறிமுகம் செய்துகொண்டார். தான் ஒரு இணையதளம் தொடங்கவிருப்பதாகவும், அதில் நான் கட்டுரைகள் எழுத முடியுமா என்று கேட்டுக்கொண்டார். அதற்கான சந்திப்புதான் இது.
அவரோடு பேசுகையில், 'நீங்க காமராஜ் ரோல் தேர்வு எப்படி செய்தீங்க சார்? என்றேன். அவர், 'நான் மதுரை விமான நிலையத்துல உட்கார்ந்திருந்தபோது என்னைத் தாண்டி ஒரு பயணி போனார். அப்போதே இவர்தான் என் சரியான தேர்வுன்னு முடிவு செய்துட்டேன். என் படத்துல வரும் ஹீரோ நடிகரா இருக்கக்கூடாது... முகச்சாயல் இருக்கணும்... நான் சொல்றபடி இயல்பா பேசி செயல்பட்டா போதும்' என்றார். அலுவலகத்தில் அவரைச் சுற்றி பட சுருள் பெட்டிகள் அடிக்க வைக்கபட்டிருந்தன.
'படம் உங்களுக்கு பெரிய அளவில் பேர் வாங்கிக் கொடுத்திருக்கும். ஆனால் பெரிய ஹீரோ நடித்த படங்கள் அளவுக்கு உங்களுக்கு வசூல் கொடுத்ததா?' என்றேன்.
'அந்த வகையில பார்த்தா வசூலை அள்ளித்தரலை. அரசு ஏதோ உபகாரம் செய்தாங்க அவ்வளவுதான். திரைப்பட ஹீரோக்களைவிட எனக்கு நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருந்தவங்களைத்தான் பிடிக்கும். அவர்களைப் பற்றிய படம்தான் எடுக்க விருப்பம். எதிர்காலத்துல காந்தியைப் பற்றி படம் எடுக்க எண்ணம் இருக்கு... பாப்போம்' என்றார்.
அப்படம் 2012ல் வெளிவந்தது என அறிந்தேன். இப்போது எம்ஜிஆர் (biopic) வாழ்க்கை சித்திரம் பற்றி ஒரு படம் செய்யப் போவதாக இன்றைய டைம்ஸ் செய்தித்தாளில் படித்தேன். அவர் முயற்சி வெற்றி பெறட்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக