முகநூலில் பலர் பதிவேற்றும் படங்கள் எனக்கு ஆச்சரியத்தைத் தரும். மிகவும் பெருமையுடன் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட செயல்கள் என்று தலைப்பிட்டு குமரன்கள் முதல் கிழடுகள் வரை அலாதியான படங்களைப் போடுவார்கள். அவை:
௧. புறநகர் பகுதியில் வேப்பம் கொட்டைகளை விதைத்தோம், மரக்கன்றுகள் நட்டோம், காய்ந்த செடிகளுக்கு நீர் பாய்ச்சினோம் என்பதை பல கோணங்களில் காட்டும் ஒரு செல்ஃபி.
௨. உள்ளூர் கோயிலில் உழவாரப் பணி செய்தோம் என்று விபூதி பூசிக்கொண்டு புதர்மேடு, கிணற்றடியில் வேலை செய்யும் ஒரு போஸ்.
௩. கோடைக் காலத்தில் பந்தல் வைத்து தண்ணீர்-மோர் வழங்கினோம் என்று கேமிராவை நோக்கியபடி குடிக்க வருவோர்க்கு ஊற்றிக் கொடுப்பதாக ஒரு படம்.
௪. சாலையோரம் பிச்சைகார முதியவருக்கு உணவுப் பொட்டலம் தந்து பசியாற்றியதாக ஒரு குணசித்திரப் படம்.
௫. என்றோ ஒருமுறை முதியோர் இல்லத்தில் ஒருவேளை சோறு போட்டதற்கு அக்குடும்பமே கரண்டியுடன் களத்தில் பரிமாற நிற்கும் படம்.
௬. தன்னுடைய மனைவிக்கு-மகளுக்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, அவர்களுடைய வண்ணப் படத்தை பதிவிட்டு, முகம் தெரியாத எல்லோரையும் வாழ்த்தச் சொல்லச் சொல்லும் பரிதாபம்.
தகிக்கும் வெயிலில் வந்து குடிக்கப்போகிறவனுக்கு நிற்க இடமின்றி உபயதாரர் அத்தனைப்பேரும் நீர்மோர் பந்தலில் ஆக்கிரமிப்பார்கள். சிறிய மரக்கன்று ஒன்று நட ஆறு பேர் சூழ்ந்து நிற்பார்கள். இதுபோல் எத்தைனையோ நகைச்சுவையான படங்கள் உண்டு.
ஒவ்வொருவரும் அன்றாடம் சர்வ சாதாரணமாகச் செய்யவேண்டிய ஒரு சிறு சேவையை படம் பிடித்துப்போட்டு அதை அதிசயமான நிகழ்வாகக் காட்டிக்கொள்ளும் காலத்தில்தான் வாழ்கிறோம் என்பதை இவை நினைவூட்டுகிறது. மாம்பூ பூத்தாலும், காட்டுத்தீ எரிந்தாலும், கடும் வெயில் சுட்டெரித்தாலும், கால்நடை சாணம் போட்டாலும், உடனே தமிழ்/தமிழர் உணர்வை/ திருவள்ளுவரை அங்கே வலிய இழுத்து எப்படியேனும் இணைத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்போர் அதிகம்.. விந்தை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக