சற்றுமுன் சந்தைத்தெருவில் ஒரு கடையின் முன்பாகத் தாண்டிச் செல்லும்போது அலாதியான ஊதுபத்தியின் நறுமணம் என்னை வசீகரித்து நிறுத்தியது. அக்கணமே நான் என்னுடைய 3-5 வயது பால பருவத்திற்குப் போய்விட்டேன். என்னுடன் விளையாடியவர்கள், வாசலில் இராபிச்சை வருவது, பள்ளிக்கூட நாட்கள், அண்ணன்-அக்காளுடன் நிலாச்சோறு உண்டது, காவிரிப் படித்துறையில் பாறைமீது அமர்ந்து தாத்தா நீச்சல் அடிப்பதைப் பார்த்தது, காலில் ஆறும் புண்ணை மீன்கள் கொத்தியது, என மிகப் பழைய நினைவுகள் என் மனத்திரையில் கதைவோட்ட அசைவுகளாக வந்து போயின.
நம்முடைய மூளையில் ஆல்ஃபேக்டரி பகுதியின் செயல்பாட்டினால் சிறுவயது சம்பந்தமாக பதிந்த நினைவுகளை ஆழத்திலிருந்து பல வருடங்களுக்குப் பிறகும் தட்டி எழுப்பும் ஆற்றல் உண்டு. சிறுவயதில் நாம் உணர்வு பூர்வமாக சில சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தொடர்புப்படுத்தி வைத்திருந்ததை நம்மை அறியாமலே மீட்டுக்கொண்டு வந்ததை அதிவேகமாக இன்று நன்றாக உணர்ந்தேன். மனமும் உடலும் புத்துணர்ச்சி பெற்றது.
நம் நாசியில் நுழையும் வாசம் நரம்பு மண்டலம் வழியே மூளையின் அடிப்பகுதிவரைச் சென்று உணர்வுகளைத் தூண்டுகிறது. விறகடுப்புப் புகை வெளிப்படுத்தும் வாசம், அதிகாலை காற்றின் வாசம், சில மலர்களின் நறுமணம், அணைந்த திரிஸ்டவ் எழுப்பும் வாசம், சிசுவின் தோல் வாசம், என பலதும் நம் கடந்தகால நினைவுகளை அடியிலிருந்து மீட்டுக்கொண்டு வரும். அது எத்தனை வருடங்களுக்கு முன்னே இருந்தாலும் உடனே வெளிப்படத் தவறுவதில்லை. வயதாகும்போது இதுபோன்ற நறுமணங்களை நுகர்ந்து மூளையின் செயல்பாட்டை பராமரித்து அதிகரிக்க முடியும். முதுமையை நோக்கிப்போகும்போது அல்ஷீமர்ஸ் /பார்கின்சன்ஸ்/ ஸ்கிசோஃப்ரீனியா நோய்கள் நம்மைத் தாக்காமலிருக்க இது அருமையான யுக்தி.
அப்பருவத்தைக் கடந்தபிறகு இதுபோன்ற நறுமணங்களை அனுபவத்துடன் தொடர்பு படுத்துவது அநேகமாக குறைந்தோ/ நின்றோ போய் விடுவதால், நம்முடைய சிறுவயது நினைவுகள் மட்டுமே தங்கி விடுகின்றது. அவ்வப்போது இதுபோன்ற நறுமணங்கள் மூலம் நம்முடைய வாழ்க்கையை ரீவைண்ட் செய்து பார்த்தால் எத்தனை இனிமையாக இருக்கும்! நியாபக மறதி வராமல் தடுக்கலாம். அதனால்தான் அக்காலத்தில் ஆண்களும் பெண்களும் தலையில் கொண்டையைப் போட்டு அதில் நறுமண மலர்களைச் சூடினர். இது வாசனாதி வைத்திய முறை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக