About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 21 ஆகஸ்ட், 2019

மாசற்ற சோதியன்

“ஆரியம் தமிழோடு இசை ஆனவன்” என்று திருமுறையில் அப்பர் சுவாமிகள் பாடியிருப்பார். இந்த ஆரியன்/ஆரியம் குறிப்பதென்ன? சிவபெருமான். மேன்மையான, அழகான, சிவந்த நிறமுடைய, புலமைமிக்க, ஓதுகிற என்று பலவாறு பொருள் கூறலாம். அவனுக்குத் திருவாதிரையன் என்ற பெயரும் உண்டு. சிதம்பரத்தில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் என்பது வெகு விமரிசையாக நடைபெறும். தேவாரப் பதிகங்களில் இவ்விழாவைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அந்த நாளில்தான் பிரபஞ்ச நடனமாடி பதஞ்சலி வியாக்ரமர் முதலிய ரிஷிகளுக்கு நடராஜர் தரிசனம் தந்தார். அதேபோல் பெருமாளுக்குத் திருவோணம் சிறப்பானது.

ஆங்கிலத்தில் இந்த நட்சத்திரம் Orionis எனப்படுகிறது. அதனால்தான் தொன்மையான, தொடக்கம் அறியாத இனம், மொழி, வகையான சங்கதிகளுக்கு Ori என்பது முன்னொட்டாக வருகிறது. அவை எல்லாமே ஆதிரையனிடமிருந்து வெளிப்பட்டதுவே. நம் தென்னகத்தில் மட்டுமல்லாது எகிப்து கிரேகம் தென்னமரிக்க தேசங்களிலும் சிவனுடைய இந்த நட்சத்திரம் சிறப்பாகப் போற்றப்படுகிறது. இவை எல்லாவற்றையும் கணக்கில்கொண்டு பார்த்தால், பல யுகங்களைக்கண்ட விஞ்ஞான சித்தர் போகருடைய பங்களிப்பு இதில் நிச்சயம் இருக்கும். ஏன்? பூமியின் சப்த சாகரங்களைச் சுற்றிவந்து அங்கெல்லாம் பலகாலம் தங்கி பஞ்சாங்கம், பண்டிகை, விழா, பூஜைகள் என பலவற்றை அமைத்துக் கொடுத்தார். அது பிற்காலத்தில் வெவ்வேறு கதைகளுடன் பரிணாமம் பெற்றிருக்கும். உலகத்திலுள்ள எல்லா பிரமிட்களுக்கும் தில்லையிலுள்ள பொன்னாலான பிரமிட்தான் சக்தியூட்டுகிறது. பரவெளி இணைப்பு, காலப்பயணம் முதல் வேற்றுகிரக சஞ்சாரம் வரை சகலமும் அடங்கும்.

ஓசைக் கொடுத்தவனாக தன் டமருகத்தை பதினான்கு (நவபஞ்ச) முறை சிவபிரான் அடித்தபோது அதிலிருந்து வெளிவந்த சப்தங்கள் ‘மகேஸ்வர சூத்திரம்’ எனப்பட்டது. வேதம் சார்ந்த எல்லா பூஜைகளிலும் இம்மந்திரம் இடம்பெறுகிறது. அந்த வடமொழி சப்தங்களில் கனமான புருஷ அம்சம் இருப்பதால் சமஸ்கிருதத்தை ‘ஈசனின் வடமொழி’ என்று சித்தர்கள் போற்றினர். (வட)ஆலமரம் அடியில் அமர்ந்து தெற்கு நோக்கி குரு தட்சிணாமூர்த்தியாக ஈசனே முனிவர்களுக்கு வேதம் அருளியதால் அது வடமொழி எனப்பட்டது. ‘மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறையோதும் எங்கள் பரமன்’ என்கிறார் அருணகிரியார். 

சிவனிடமிருந்து சக்தி வெளிப்பட்டதைப்போல், தன்னிலிருந்து வெளிப்பட்ட ஸ்திரீ அம்ச சப்தம்தான் தமிழ். அது மென்மையான ஓசையைக் கொண்டது. சக்தி தனித்துவமாகத் தெரிந்தாலும் அவளுக்குச் சிவன்தான் சக்தியூட்டுகிறான். ‘சிவனின்றி சக்தி இல்லை’ என்பதுபோல் இரண்டுமே அவனிடத்தில் சங்கமம். தமிழை சமஸ்கிருதமாக மாற்ற முடியாது. ஏன்? அதற்கான புருஷ சப்தங்கள் இதிலில்லை. தமிழில் சமஸ்கிருதத்திற்கு நிகராக சப்த சுத்தம் இல்லையென்றாலும் ஓரளவுக்கு உச்சரித்து எழுதுவது எப்படி என்று தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் உரைக்கிறது. அதனால்தான் ‘ஷ ஸ ஸ்ரீ ஜ ஹ ப்ஹ’ போன்றவை 247 தமிழ் எழுத்துகளில் வராது. ஆனால் இவையும் உயிருள்ள பீஜங்கள்தான்.

தமிழை மட்டும் ஆராயும் நேசர்களும் பகுத்தறிவு மொழியாளர்களும் இவ்விஷயத்தை எற்க முடியாததால் என்றுமே சண்டை ஓயாது. வடமொழி வேதங்களின் தலைவனான அவனே தமிழ்ச்சங்கத்தின் தலைவன். அதனால்தான் தேவாரம் முழுக்க ஆரியன் என்ற சிவனை போற்றுகின்றனர். இங்கே இணைப்பில் மகேஸ்வர சூத்திரம் உள்ளது. முதலில் உச்சரிப்பு தனித்தனியாகவும் பிறகு கோவையாக இசையுடன் ஒலிக்கும். உடுக்கையை கடைசியாகத் தட்டும்போது ஒலிக்கும் ‘சாப்பு’ சப்தம் அலாதி.

‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து’ என்று மனோன்மணியம் சுந்தரனார் பாடினார். அதுவே தவறு. அது இறை மந்திரமொழி என்பதால் என்றுமே அழியாது. 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று பாரதி சொன்னதுபோல் தமிழ்தான் உலகத்து முதுமொழியாகப் பேசப்படுவது. சிவன் எப்படி மறையனோ அதுபோல்தான் அம்மொழியும் மறைந்திருக்கும். மரத்தின் ஆதாரமான வேர் மறைந்திருக்க சக்திதான் விருட்சமாக வெளிப்படும். அதை அழிக்கவோ ஒழிக்கவோ ஒருவனால் முடியும் என்றால் அவன் மனிதனல்ல, ஈசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக