முருகனை சிலை ரூபமாய் செய்வித்துப் பிரதிஷ்டை செய்தால் தன் காலத்திலும், தன் காலத்துக்குப் பின்னும் என்றென்றும் அவ்விடம் வரும் பக்தகோடிகள் ஞான மார்க்கத்தில் மனதைச் செலுத்தி முருகன் கிருபைக்கும் அருளுக்கும் பாத்திரமாகி முக்தி பெறலாம். அப்படி உய்ய ஆலய வழிபாடே சாலச்சிறந்தது என்றெண்ணி தனது வைத்திய வாதத் தொழில் திறமையாலும், முருகனின் அனுகிரகத்திலும் நவபாஷாணங்களை ஒன்றாகக் கட்டி, அழகான விக்ரகம் செய்து அதற்குத் தண்டபாணி என்று நாமகரணம் செய்வித்து, தன் ஆசிரமத்திற்கு அருகில் உள்ள பழநி மலையின் மீது நிறுவினார். அதன்பின் சேரர்கோன் காலத்தில் சேர அரசனால் முழுமையாக இக்கோயில் கட்டப்பட்டது என்று கல்வெட்டுகளில் கூறப்படுகிறது.
வைய்யாபுரி நாட்டில் போகருடைய பெருமைகளையும் மகிமைகளையும் அறிந்த அங்குள்ள மலைவாழ் மக்கள், தினந்தோறும் வந்து முருகனை தரிசிக்கலாயினர். தன்னை தரிசிக்க வரும் மக்களுக்குள்ள பிணிகளைத் தீர்த்தும், உபதேசங்களைச் செய்தும், இறை வழிபாடும் நடத்தி வந்தார்.
‘பாணி’ என்றால் ‘கொண்டவன்’ என்று பொருள்படும். கையில் கம்புடன் நின்ற முருகனுக்குத் தாகம் எடுத்ததால் பாணி என்ற பின்னொட்டுடன் தண்டபாணி என்ற பெயர் வந்ததாகக் கதை அளக்கக் கூடாது. தண்டாயுதபாணி, சக்ரபாணி, சாரங்கபாணி, ஷங்கபாணி, பினாகபாணி, கோதண்டபாணி, வஜ்ரபாணி என இரு சொற்கள் இணைந்த பெயர்களின் அர்த்தம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். அவன் நிராயுதபாணியாக களத்தில் நிற்கிறான், அவனுடன் போர் புரியாதே என்று மகாபாரதத்தில் வரும் வர்ணனையின் பொருள் விளங்கியதா? எந்த ஆயுதமும் கையில் இல்லாமல் அவன் நிர்-ஆயுத-பாணியாக நிற்கிறான் என்பதாகும்.
புலிப்பாணி என்ற பெயரும் அப்படித்தான் வந்தது. நைனாத்தே உடையாருக்கு மிருக வசிய மந்திரத்தைப் போகர் சொல்லிக்கொடுத்தார். முருகனுக்கு அபிஷேக தீர்த்தத்தை விரைவில் கொண்டுவர பணித்தபோது, சீடர் பொய்கைக்குப்போய் நீர் முகர்ந்து வரும்போது பானை உடைந்துவிட, உடனே புலியை வரவைத்து அதன்மீது அமர்ந்து சுரைக்காய் குடுவையில் நீர் கொண்டு வந்ததால், போகர் அவருக்குப் புலிப்பாணி என்று பெயர் சூட்டினார். அதாவது வேங்கையை வாகனமாகக் கொண்டு அமர்ந்து வந்தவன் என்பது பொருள்.
ஆக, பாணியின் உள்ளர்த்தம் என்ன என்பது இப்போது உங்களுக்கு நன்கு விளங்கியிருக்கும்! வஜ்ரவேலுடன் இருக்கும் முருகனுக்கு வஜ்ரபாணி என்ற பெயருமுண்டு. அதேபோல் திபெத் பௌத்த ஆலயத்தில் புத்தரை வஜ்ரபாணியாக உருவகப்படுத்தி இருப்பார்கள்.
போகரின் சமாதி பிரவேசத்திற்குப்பின் பழநி மலைமீதுள்ள நவபாஷாண முருகன் சிலைக்குப் புலிப்பாணி நித்திய பூசைகளையும் பதினாறு வகை (சோடச) உபசாரங்களும் ஆகம முறைப்படி செய்து வந்தார். அதற்கென பூசை விதிகள் நூலையும் இயற்றினார்.
“பாரப்பா மலையதுவின் உச்சியிலே
பாங்கான போகருட சமாதியருகே
கட்டான பாடாணவகை எட்டோடொன்று
காணவே சேர்த்துவார்த்த சிலைதானும்
நண்ணவே பிரதிட்டைதான் செய்து
நவிலுவேன் பூசை சோடசமுஞ்செய்ய
ஆற்றினேன் பூசைவிதிகள் தானும்
ஆரப்பா அறிவார்க் களாருமில்லை.”
பல கோயில்களில் அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனை நைவேத்தியம் ஆராதனை உற்சவம் என்ற அளவில் ஆறு வகை உபசாரங்களுடன் நிறுத்திக் கொள்வதுண்டு. இன்னும் சில ஆலயங்களில் தச உபசாரம் வரை செய்வதுண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக