பாரப்பா ஜெகசால ஞானியோர்கள்
பசிபொறுக்க மாட்டாமற் புரட்டுப்பேசி
ஆரப்பா வேடங்கள் தரித்துக்கொண்டு
அவன்காலிற் குறடிட்டே யலைவான்பாவி
நேரப்பா தேர்நிலையு மரியாதகோசி
நிலையான பராசக்தி பூசைக்கென்று
தேரப்பா சத்தியமாய்ப் புரட்டும்பேசி
தெளிவான சித்தன்போற றிவான்காணே
(சுப்பிரமணியர் ஞானம், பா:162)
‘ஞானியர் என்ற போர்வையில் ஜெகஜ்ஜால கில்லாடி கபடதாரிகள் உண்டு. உண்டி வளர்க்கப் பாடுபடுவார்கள், பசியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் புரட்டும் பேசி தங்களை உயர்வாகக் காட்டிக்கொள்வார்கள். வெறுங்காலில் நடக்கப் பொறுக்காமல் பாதக்குறடுகள் அணிந்துத் திரிந்திடுவார்கள். அன்னமய கோசத்தின் மேல் ஆசை வைத்து அதை வளர்த்துப் பேண எதற்கும் துணிவார்கள். தேகத்தின் ஆறாதாரச் சக்கரங்களில் வாசி என்ற தேரின் ஓட்டத்தை அறியா பாவிகள். பராசக்தியை நோக்கிப் பூசைகள் செய்வதாய்ப் பொய் புரட்டுப்பேசி அறிவார்ந்த சித்தன்போல் காட்டிக்கொள்வார்கள்’ என்கிறது மேற்கண்ட சுப்பிரமணியர் ஞானம் பாடல்.
இதற்கு அடுத்த பாடலில் ‘வாசி நிலை காட்டடா என்றால் தெரியாது, ரவி-சசியின் கலை எங்கேடா என்றால் தெரியாது, தாரணையை விளக்கிச் சொல் என்றால் தெரியாது, தான் இருக்கும் நிலையைக் கேட்டால் தெரியாது, குருநிலை யாது, உன் குலதெய்வம் எங்குள்ளது என்று கேட்டால் தெரியாது என்பான். நான் அவனுள் எங்குள்ளேன் என்று கேளு, இதெற்கெல்லாம் பதில் சொல்லாவிட்டால் அவனுடைய பற்கள் உதிர அடித்துக் கேள்’ என்று முருகன் சொல்கிறான்.
இக்காலத்தில் இதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. தங்களை ஞானியர் என்று பிரகடனப் படுத்திக்கொண்டு நீள்முடி கேசம், தாடி, தினுசான ஆடை அங்கிகள், தலைப்பாகை, காலில் செருப்பு அணிந்து, ஆங்கிலம் பேசி, விஸ்தாரமான சொகுசுக் குடில் அமைத்து, யோகம் கற்பிப்பதாய்ச் சொல்லி, பக்தர்களை வசியப்படுத்தி, நவீன நடனமாடி, தானே சிவம் என்று சொல்லியபடி தங்களுக்கென ஓர் ஆன்மிக அடையாளத்துடன் வாழ்வாதாரம் தேடிக்கொண்டு சௌகரியமாய் இருக்கிறார்கள்.
முருகன் அகத்தியர்க்கு உரைத்தவை எல்லாமே இன்று கண்ணெதிரே காண்கிறோம். அடையாள விவரிப்புகளை வைத்து இந்நேரம் அந்த ஆசாமிகள் யாரென நீங்கள் யூகித்திருப்பீர்கள். 😃
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக