About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 14 நவம்பர், 2021

நான் விரும்பிப் படித்த கதையோட்டம் ...

கவிவிஞர் நா.முத்துக்குமார் தன் பள்ளிப் பிராயம் பற்றி எழுதிய 'வகுப்பறைக்கு வெளியே கற்றுக்கொண்ட பாடங்கள்!'.

அப்போது நான் சிறுவனாக இருந்தேன்.

பர்மாவிலிருந்து தேக்கு மரங்களை கப்பல்களில் கொண்டுவந்து சுண்ணம் அரைப்போரும், சுண்ணாம்பு இடிப்போரும் இரவு பகலாக உழைக்க அந்திரசன் துரை என்கிற வெள்ளைக்காரன் கட்டிய கட்டடம் எங்கள் பள்ளியாய் இருந்தது.

ஆங்கிலேயன் கட்டிய பள்ளி என்பதால் ஆங்கிலம் எங்களுக்கு விரோதியாக இருந்தது. அச்சமும் பயமும் எங்கள் பாடமாய் இருந்தன.

பள்ளிக்கூடத்தைப் பற்றி நினைக்கையில் வகுப்பறைகளைவிட வெளியே இருக்கிற மரங்களும் மைதானங்களும் தான் என் நினைவுக்கு வருகின்றன.

எங்கள் பள்ளி மைதானத்தில் நட்டு வைத்த குடைகளைப் போல அசோக மரங்கள் வரிசையாக நின்று கொண்டிருக்கும்.

அசோக மரத்துப் பழங்களுக்கும் நாவல் பழங்களுக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கச் சொன்னால் ஆண்டவனால் கூட கண்டுபிடிக்க முடியாது. இரண்டின் நிறமும் வடிவமும் ஒரே கிளையில் கருவானவையோ என வியக்க வைப்பவை.

மீசை வைத்து பெண்ணாம் பெரிய மிதிவண்டியில் வரும் பெரிய வகுப்பு மாணவர்கள் முதல் நாள் பள்ளியில் நுழைந்த அன்று நாவல் பழம் என்று ஏமாற்றி அசோகப் பழங்களைக் கொடுத்து என்னிடம் இருந்து காசு பறித்தார்கள்.

முதன்முறையாக வகுப்பறை சொல்லித் தராத வணிகவியல் எனக்கு அறிமுகமானது.

எங்கள் பள்ளி தாலுகா ஆபீஸ் வளாகத்திற்குள் இருந்தது. காவல் நிலையங்கள், நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், கருங்குளம், தீயணைப்பு நிலையம் எனக் கலவையான மனிதர்களைக் கடந்தே பள்ளிக்குள் நுழைவோம்.

ஒரு முறை கள்ளச்சாராய கேன்களை கையகப்படுத்தி காவல் நிலையத்தின் வாசலில் வைத்து தீ ஊற்றி எரித்தார்கள்.

அந்தக் காற்றின் வாசம் வேதியலை எனக்கு அறிமுகப்படுத்தியது.

இப்படி இப்படி ஐந்து பைசாவிற்குப் பத்து கடலைகள் கொடுக்கும் பாட்டிக் கடை கணிதத்தையும்;

உடைந்த அரச மரக்கிளை பொந்திலிருந்து அவ்வப்போது பகலில் வெளியே எட்டிப் பார்த்து திரும்பவும் பொந்துக்குள் நுழையும் ஆந்தை விலங்கியலையும்;

ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுக்க கிராமத்து மாணவர்கள் கிளிப்பச்சை நிறத்துடன் ஒடித்து வந்து நீட்டும் மூங்கில் கழிகள் தாவரவியலையும்;

படம் வரைந்து பாகம் குறித்த கழிவறைகள் உயிரியலையும்;

மேற்கூரை கண்ணாடிச் சட்டகத்திலிருந்து உள் நுழைந்து கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்கும் சந்திரசேகர் மாஸ்டரின் முதுகில் விழுந்து C=3×108 வேகத்தில் பயணிக்கும் சூரிய வெளிச்சம் இயற்பியலையும்;

பள்ளிக்குப் பின்புறம் பாலிதீன் கவர்கள் மிதந்தோடும் செங்கழு நீரோடையின் பின்னணியில் ஒன்றிலிருந்து ஒன்று கிளைபிரியும் ஒற்றையடிப் பாதைகள் புவியியலையும்;

முன்புக்கு முன்பு பத்தாம் வகுப்புத் தேர்வில் ஃபெயிலானதால் தூக்குப் போட்டு இறந்த பழைய மாணவன் ஒருவனைப் பற்றிய வதந்திகள் வரலாற்றையும்;

‘As i am suffering from fever’ என்று தொடங்கி எழுத்துப் பிழைகளோடு எழுதப்படும் விடுமுறைக் கடிதங்கள் ஆங்கிலத்தையும் அறிமுகப்படுத்தின.

பிந்தைய நாட்களில் ஒருமுறை இடைவேளையின் போது காவல் நிலையத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த காசி அண்ணனின் ஐஸ் வண்டியில் சேமியா ஐஸ் வாங்கி, சட்டையில் சாயம் சொட்டச் சொட்ட சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு காட்சியைக் காண நேர்ந்தது.

காவல் நிலையத்திற்கு முன்பு லுங்கி கட்டிக்கொண்டு கையில் விலங்குடன் நின்றிருந்த ஒரு கைதியின் வாயில் பீடி பற்ற வைத்துக் கொண்டிருந்தார் ஒரு கான்ஸ்டபிள். சிரித்தபடி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

புரிந்தும் புரியாமலும் வாழ்வியல் அறிமுகமானது.

எல்லோருக்கும் போலவே எனக்கும் என் பள்ளி வகுப்பறைக்கு வெளியே தான் பாடங்களைக் கற்றுத் தந்தது.

ஆயினும் என்ன? கற்றுத்தர மட்டுமா பள்ளிகள்? சென்ற வருடம் என் பள்ளியில் நடந்த தமிழ் மன்றத் தொடக்க விழாவிற்கு என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள்.

பள்ளி வாசலில் அதே பழைய காசி அண்ணன் ஐஸ் விற்றுக் கொண்டிருந்தார்.

அருகில் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் முன் நிழலாடிய பல பிஞ்சு முகங்களில் என் முகமும் பெயரும் ஞாபகத்திற்கு வரும் என்பது என்று எப்படி நான் எதிர்பார்க்க முடியும்?

கொடுத்த நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டு “நீ நல்லா இருந்தா போதும் ராசா” என்று சொல்லிவிட்டு தன் முன் இருந்த ஐஸ் பெட்டிக்குள் குனிந்தார். அதில் காலம் கட்டி கட்டியாக உறைந்து கிடந்தது.

ஒரு படைப்பாளி எதிர்கொள்ளும் ஆகப்பெரிய வலி எது தெரியுமா? தன் பின்னால் பரந்து கிடக்கும் கடந்த காலத்தில் புதிர் வட்டப் பாதையில் பயணித்து காயங்களுடன் வலிகளுடன் திரும்பி வருவதுதான்.

துருப்பிடித்த பள்ளியின் நுழைவாயிலில் இரும்புக் கிராதி கேட்டைத் திறந்து என்னை வரவேற்கிறார்கள்.

முன்பு ஒவ்வொரு முறை அதைக் கடந்து உள்ளே நுழையும் போதும் அடிவயிற்றிலிருந்து மேலெழும் ஒரு பயம் தன் பழைய பாசத்துடன் மேலே வருகிறது.

‘இது என் பள்ளி! என் பள்ளி என்னால் பெருமை அடைய வேண்டும்! என் பள்ளியினால் நான் பெரும் அடைய வேண்டும்!’ என்று எழுதிய வாசகத்திற்கு மேல் இயேசு கிறிஸ்து கை நீட்டி அழைத்துக் கொண்டிருக்கிறார்.

பரிசுத்த ஆவியின் பெயரால் என் பள்ளிக்குள் நுழைகிறேன். காலை பிரார்த்தனை நேரத்தில் “ஜெபம் செய்வோம்” என்ற குரல் கேட்டு எத்தனை முறை மண் தரையில் முட்டி போட்டு இருப்பேன். அந்த மண் துகள்கள் இன்று எங்கு போய் உதிர்ந்தன?

“இதோ பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதப் போகும் மாணவர்களை உமது பாதங்களில் ஒப்படைக்கிறோம் எமது ராஜா… அவர்கள் படித்தது மனதில் பசுமரத்தில் அடித்த ஆணிபோல் பதியவும்,

அவர்களால் நமது பள்ளி மென்மேலும் உயரமும் ஆசீர்வதியும் எம் ராஜா” என்கிற பால்பாண்டி மாஸ்டரின் குரலும், அதைத் தொடர்ந்து ஒலிக்கிற ‘ஆத்துமமே என் முழு உள்ளமே’ என்கிற பாடலும் காற்றின் அலைகளில் கரையாமல் ஒலிக்கிறது.

எங்கள் பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியரும் சிறந்த சிறுகதை எழுத்தாளருமான அ.எக்பர்ட் சச்சிதானந்தம் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க விழா முடிகிறது.

மாணவர்கள் விடைபெற்றுப் போன பின் மாலையில் நான் படித்த ஒவ்வொரு வகுப்பிலும் மீண்டும் நுழைகிறேன்.

என் ஆதிக் கருவறையின் இருளும் ஒளியும் கலந்த அறைகள் எட்டாம் வகுப்பு ‘அ’ பிரிவில் நுழையும்போது மட்டும் என்னை அறியாமல் தேகம் சில்லிடுகிறது.

அதோ நான் அமர்ந்து எழுதிய பர்மா தேக்கு மேஜை. மீண்டும் என் பால்ய வயதிற்குள் சென்று காக்கி கால் சட்டையும் வெள்ளைச் சட்டையும் அணிந்து அமர்கிறேன்.

பிரில் இன்க் கரைபடிந்த என் பழைய மேஜையில் நான் எப்போதோ உணவு இடைவேளையின்போது காம்பஸ் முனைகளால் கிறுக்கிய N.M.K. என்ற என் இன்சியல் இன்னும் அழியாமல் இருக்கிறது.

ஒரு கணம் இனம் புரியாத உணர்வுக்குள் மூழ்கித் திரும்புகிறது மனது. இதோ நான் தொலைந்த பால்யத்தின் மிச்சம்.

என் பதின் வயதுகளில் ஒரு துண்டு. நான் கடவுளாக இருந்தபோது எனக்குள் இருந்த சாத்தான் உரித்த பாம்புச் சட்டை.

பள்ளிப் பிராயம் ஒரு நதியைப் போல நம் ஆழ்மனதில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன் மேல் மிதக்கும் சருகுகளும் பூக்களும் கரை சேர்ந்து விடுகின்றன.

நதியின் ஆழத்தில் மூழ்கும் கூழாங்கற்கள் மட்டுமே சகதிகளுடன் சேர்ந்து உறுத்திக் கொண்டிருக்கின்றன. என் பள்ளி எனக்கு சருகுகளையும் பூக்களையும் மட்டும் கொடுக்கவில்லை.

கூழாங்கற்களையும் சேர்த்துத்தான் கொடுத்தது.

~~~~~~~~ ~~~~~~~ ~~~~~~ ~~~~~~

இது மணாவின் 'பள்ளிப்பிராயம்' என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து எடுத்தது‌. உயிர்மை பதிப்பகம். ரூ.75/-



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக