About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 14 நவம்பர், 2021

சிந்தித்து முடிவெடுக்கும் பாங்கு!

முன்னொரு சமயம் நாங்கள் குடியிருந்த தெருவில் பாலகிருஷ்ணா & சன்ஸ் என்ற மின்னியல் என்ஜினியரிங் கம்பனி நடத்தி வந்தார் ஒரு செல்வந்தர். அரிமா சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். அவருடைய சொந்தமான பங்களாவில் இரண்டு அம்பாசடர் கார்கள் இருந்தன, அவர் மனைவியின் கழுத்து முதல் இடுப்புவரை பரதநாட்டிய செட் நகைகள்போல் எல்லாம் தங்கத்தில் மின்னின. இரண்டு மகன்கள். அதில் மூத்தவன் கல்லூரி படிக்கும்போதே செயின் ஸ்மோக்கர் என்ற பெருமையைப் பெற்றவன். இன்னொருவன் பிசினஸ் செய்கிறேன் என்று அகலக்கால் வைப்பவன். இவர்கள் படித்ததெல்லாம் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் ஏற்காடு மான்ட்ஃபோர்ட் போர்டிங் பள்ளி.

எனக்குத் தெரிந்து அத்தெருவில் மதிப்பு மரியாதையுடன் வாழ்ந்தார், யாரிடமும் பந்தா காட்டியது இல்லை. அவர் மனைவி அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு நபர்போல் இருப்பார். நவராத்திரி சமயத்தில் ஜடை பின்னல் வைத்து ராக்கொடி காசுமாலை சங்கிலி வளையல் புல்லாக்கு ஒட்டியானம் முதல் கொலுசுவரை அத்தனை நகைகளையும் அள்ளிப் போட்டுக்கொண்டு இடுப்பில் சொருகிய சிறிய பிச்சுவா கத்தியுடன் இரண்டு வீதிகளையும் வாக்கிங் சுற்றி வருவர். அந்தப் பெரியம்மாவின் கோலத்தைப் பார்த்து யாரும் அவர் எதிரே சிரித்து விடக்கூடாது. அவரைக் கிண்டல் செய்தால் போச்சு! ஆங்கிலத்திலேயே விளாசுவார். நான் பள்ளிக்குச் சென்று வரும்போது என்னைப் பார்த்தால் ‘டேய் கொளந்த, come home for special sundal and payasam’ என்று சொல்வார். நான் பயத்தில் மண்டையை ஆட்டுவேன். 

காலங்கள் ஓடியது. 2014ல் ஒரு நாள் அத்தெருவில் குடியிருக்கும் பெரியவரை எங்கோ சந்திக்க நேர்ந்தது. அப்போது பழைய ஆட்களைப் பற்றியும் செல்வந்தர் பற்றியும் விசாரித்தேன். 

“பாலு சார், கடந்த 1998க்கு பிறகு நொடிஞ்சு போனார். சின்னவன் வெளிநாட்டுல பிசினஸ் செய்யறேன்னு பைனான்ஸ் கம்பனியில கடன் வாங்கினான். தன் அப்பா/ தம்பியோட பெரிய மனஸ்தாபத்துல பெரியவன் குடும்பத்தோட தனியா போயிட்டான். வாங்கின கடனுக்கு வட்டி அசல் கட்ட முடியாம கம்பனியை யாருக்கோ கைமாத்தி வித்தார், இருந்த வீடு ஜப்தி ஆனா மானம் போகுமேனு வேற வழியில்லாம அடிமாட்டு விலைக்கு 17 லட்சத்துக்கு வித்தார். கார் ஆக்ஸிடன்ட் ஆனதுல இன்சுரன்ஸ் பணம் முழுசா வரலை. பொண்டாட்டியோட நகைகள மூட்ட முடியாம போயி அதை பேங்க் காரங்க ஏலம் விட்டாங்க. அப்புறம் அவர் தன் சொந்த ஊருக்குப் போறதா காலி செய்துட்டு போனார். அதன் பொறவு எந்த சேதியும் இல்ல’ என்றார்.

‘முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை, கெட்டவனும் இல்லை’ என்பது கரியன் சூரியனைச் சுற்றி வரும் கால அளவு அடிப்படையில் பேசப்படும் ஒரு வாக்கியம். என்னதான் கல்வி, அனுபவம், செல்வாக்கு, விவேகம் இருந்தாலும் விதி விளையாடும்போது எல்லாம் பயனற்றுப் போகும். துணிந்தவனுக்குத் துயரம் இல்லை என்பது எதுவரை வரும்? 

ஒரு நிலைக்கு மேல் தன்னால் இனி மீள முடியாது என்று தூரப்பார்வையுடன் சிந்தித்தால் அகலக்கால் வைக்க அவசியம் இருக்காது. அடமானம் வைத்த நகைகளையும் வீட்டையும் மீட்க முடியாது என்ற நிலையை முன்பே யூகித்து அதை எல்லாம் விற்றிருக்க வேண்டும். குறைந்த அளவு தாக்கத்துடன் போயிருக்கலாம். 

ஓடிக்கொண்டிருக்கும் நல்ல கப்பல் பழுதாகி அதை ஒரு கட்டத்தில் சரி செய்ய இயலாது என்ற நிலையில் கேப்டனும் சிப்பந்திகளும் அவசரகால நடவடிக்கையில் இறங்கித் தப்பிக்க வேண்டும். நடுக்கடலில் மூழ்கத் தொடங்கும் நிலையில் அதனை அணைத்தபடி தாம் பயணித்த மலரும் நினைவுகளைக் கொண்டாட முடியாது. Ship Abandoned என்று அவசர செய்தி விடுத்த நிலையில் சிப்பந்திகளுக்கான மீட்புக் கப்பலும் ஹெலிகாப்டரும் வட்டமிடும். 

ஆனால் நிஜ வாழ்க்கையில் கடவுளைத் தவிர மீட்பர்கள் யாருமில்லை. அதனால் வாழ்க்கையில் இலக்கின்றி, பேராசையுடன் வாழ்ந்து, வேண்டாத சுமைகளை ஏற்றிக்கொண்டு, மூழ்கும் சொத்துக்களைச் சக்திக்கு மீறி மீட்கப் போராடும் பிடிவாத குணத்தை எப்பாடுபட்டேனும் கைவிடுவதே நல்லது! 

- எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக