வேத மந்திரங்கள் எதுவும் ஜெபிக்க வேண்டாம், மலைக் கோயில்களுக்குப் போய் தரிசிக்க வேண்டாம், நதி /கடல் என்று எதையும் தேடி அலைந்து நீராட வேண்டாம், திருமுறைகளைப் பண்ணிசைத்துப் பரவசமாய்ப் பாடி உருக வேண்டாம். இவை எதுவும் பயனில்லை. இப்படிச் செய்தால் மெய்ஞான புத்தி வருமா? உண்மையைப் பேசினால் போதும், உடனே சித்தி வாய்க்கும்!’ என்பது படத்திலுள்ள இப்படாலின் பொருள்.
இதெல்லாம் ஒரு சாதகனுக்குத் தொடக்கத்திலேயே சொல்வது சரியா? இவை அகத்தே யோக மார்க்கத்தில் கண்டு தரிசிக்கலாம் என்பது எப்போது புரியும்?
ப்ளே ஸ்கூலில் உள்ள குழந்தைக்கு அங்கு வேலை செய்யும் ஆயாதான் சோறு ஊட்டுவாள், குடிக்கப் பால் தருவாள், விளையாடுவாள். பின்மாலைப் பொழுதில் அக்குழந்தையின் பெற்றோர் வந்து அழைத்துச் செல்லும்வரை நெடுநேரம் ஆயாவின் முகத்தைத்தான் பார்க்கும். அதனால் அக்குழந்தை வளர்ந்தபின் தன் தாய்/தந்தையிடம் பாசத்துடன் ஒட்டுவதில்லை, அன்பாக உறவாடுவதில்லை, பெற்றோர் பேச்சைக் கேட்பதில்லை, அவர்களை முது வயத்தில் பேணிக் காப்பதில்லை. வளர்ந்த பிள்ளை இப்படி இருந்தால் அந்தத் தவறு அவனுடையதல்ல. ஏன்? அவன் வளரும் பிராயத்தில் தாய்-சேய் உறவு இல்லை தாயின் ஸ்பரிசம், கொஞ்சும் மொழி இல்லை; தாயின் மடியில் படுத்துக்கொண்டு தாயின் முகத்தை நெருக்கத்தில் பார்ப்பதில்லை, தாயின் மன அலைகளைப் புரிந்துகொள்ளும் அவகாசமில்லை. இதுபோல் தொடக்க நிலை குறைகள் நிறைந்திருந்தால் குழந்தை இப்படித்தான் இருக்கும்.
சரியை கிரியை என்கிற தொடக்க நிலைகளைக் கடந்த பின் ஞானம் யோகம் என நிலைகளைக் கடந்திட வேண்டும். கலியுகத்தில் முறைப்படி மக்கள் பெரிய அளவில் சடங்குகளும் உபாசனைகளும் செய்ய வழியில்லை, செய்ய மாட்டார்கள் என்பதை முன்பே தீர்க்க தரிசனமாய்ச் சொல்லிவிட்டனர். அதனால் மந்திரம் ஓதுவது, கோயில் தலங்களுக்குச் சென்று வழிபட்டு மனமொன்றிப் பாடுவது, புண்ணிய நதியில் நீராடுவது, நாம ஜெபங்கள் செய்வது என்ற அளவில் இருந்தால் உத்தமம் என்று வகுக்கப்பட்டது. இதுவும் கூடாது என்றால் என்ன செய்ய?
ஆனால் அதெல்லாம் பயனில்லை தண்டம் என்றால் பழநி மலைமீது போகர் பாஷாண தண்டபாணியை வேலை மெனக்கெட்டு நிறுவி இருக்க வேண்டாம், குன்றுதோறாடும் குமரனைக் கஷ்டப்பட்டு யாரும் போய் தரிசிக்க வேண்டாம், சடாக்ஷரம் ஜெபிக்க வேண்டாம், காவடி எடுக்க வேண்டாம், திருச்சீரலைவாயில் நீராட வேண்டாம், கைலாசம் கங்கை பஞ்சபூத தலங்கள் என எதையும் நாடிப்போக வேண்டாம். நிறைவாக விபூதிப் பட்டையும் கழுத்தில் கொட்டையும் அணிந்தால் வேடதாரி என்று யாரேனும் நினைக்கலாம்.
ஆக நாம் உண்மை மட்டும் பேசினால் போதும் அக்கணமே சித்திகள் வாய்க்கும் என்றால் மரபு எதற்கு? குரு எதற்கு? தீட்சை எதற்கு? மந்த்ரோபதேசம் எதற்கு? ஆன்மா கடைத்தேற நல்லதொரு வழியைக்காட்ட குரு வேண்டும். அதுவும் சமயநெறிகளைப் பிசகாமல் கடைப்பிடிக்கும் குரு வேண்டும். குரு இல்லாத வித்தை பாழ், நெய் இல்லாத உண்டி பாழ். ஆகவே நல்லதொரு மெய்ப்பொருள் பாடலை அதன் கனம் அறியாத ஒருவருக்குத் தவறான காலத்தில் உபதேசிப்பதால் நன்மையைவிட தீமையே வரும்.
வேதங்கள் உரைத்ததை, நால்வர் உணர்த்தியதை அறிந்து இறைவனைச் சுயமாக உணர்ந்து அவனுடைய ஆற்றல்மிகு ஆசிகளைப் பெற்று உயர வேண்டும். இதுகாறும் நம் வம்சத்தில் மூதாதையர்கள் உருவேற்றி வைத்த பக்தி ஆற்றல் மற்றும் குண நலன்களின் புண்ணிய பலன்களின் விளைவாக நாம் இப்போது பெடல் செய்யாமல் மிதி வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்கிறோம். இது எத்தனை தூரம் செயல்படும்? மேட்டில் வண்டியின் வேகம் குறைந்து வண்டி நிற்காமல் இருக்கச் சமய நெறிகளைக் கடைப்பிடித்து நம் உந்து சக்தியைப் பெருக்கிப் பயணிக்க வேண்டும்.
‘மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்’ என்று கொன்றை வேந்தனில் ஔவை சொன்னதன் பொருள் என்ன? காலங்காலமாகச் சொல்லபட்டு வரும் மூத்தோர் வழி முறை உபதேசங்களைத் தட்டாமல் அப்படியே பின்பற்று என்பதாகும்.
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக