'சுப்பிரமணியர் ஞானம் 500’ என்ற நூலை முருகன் அகத்தியர்க்கு உபதேசிக்கும்போது, சில இடங்களில் வெகுண்டு பேசியுள்ளது தெரிகிறது. ஞானியர் என்று சொல்லிக்கொண்டு திரியும் பொய்யர்களையும் வேடதாரிகளையும் பற்கள் உடைத்துப் பாடம் கற்பிக்க வேண்டும் என்கிறார். இதையே போகர், கருவூரார்கூட தம் பாடல் திரட்டுகளில் உரைத்த நினைவுள்ளது.
ஆனால் இதைப் படிப்போர், ‘அச்சச்சோ! முருகனா இப்படி உடைக்கச் சொல்லி உபதேசித்தான்? இருக்காது. அவன் காழ்ப்புணர்ச்சியோடு இருக்க மாட்டான். எந்தக் கடவுளும் பல்லை உடை, உயிரை எடு என்று சொல்லாது. அறிவுளர் அறிவார் குணக்கடலோன் என்று அவன் போற்றப்படுகிறான்’ என்று வாதம் செய்வார்கள்.
அண்மையில் சூரசம்ஹாரம் கண்டோம். முருகன் குணக்கடலோன் என்றால் ஏன் சூரனை சம்ஹாரம் செய்யவேண்டும்? மெனக்கெட்டு சக்தியிடம் வேல் வாங்கிப்போன முருகன், உண்மையிலேயே சூரனை ஏன் தாக்கி இரு கூறாக்கிச் சேவலும் மயிலுமாய் மாற்றி தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும்? திருப்போரூர் திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் ஆகிய தலங்களில் போர் புரிய வேண்டாமே! யோக சக்தியால் வெறுமனே சூரனை ஆட்கொண்டால் போதாதா?
சம்ஹாரம் என்றாலே உமையும் திருமாலுமே நிகழ்த்துவார்கள். இங்கே முருகன் மூலமாக உமைதான் வேலிலிருந்து வதம் செய்தாள். முருகன் குணக்கடல் ஆயிற்றே, ஜீவ வதையை அவன் விரும்ப மாட்டானே! ஆனால் அவன்தான் சம்ஹாரத் திருவிளையாடலை நிகழ்த்தினான். அப்படியிருக்க அவனுடைய அந்தக் கோபம், சம்ஹாரம், ஆட்கொள்ளுதல் ஆகியவற்றைத் தண்டனை சட்டத்தின் கீழ் வரும் செயல்களென சிலர் தவறான புரிதலால் விமர்சிப்பார்கள். குணங்கள் மூன்று (த்ரிகுணம்) என்றாலும் சிவனும் அவனுடைய பிம்ப முருகனும் நிர்குணமானவர்கள்.
அகத்தியர் பெருமானுக்கு முருகன் உபதேசித்த சுப்பிரமணியர் ஞானம் நூலிலுள்ள சில வரிகள் இங்கே ...
நானடா நானிருக்கு மிடந்தான்கேளு
நவிலாவிட்டாற் பல்லுதிர வடித்துத்தள்ளே ... 162
சூராதி சூரனையும் பொடியதாக்கிச்
சுப்ரமென்று அற்புதமாய் வந்தேன்பாரே ... 319
தப்பியே செந்தூரில் மேருவேறிச்
சண்டாள வசுரர்களை வதைத்தேன்பாரே ... 393
சொல்லடா விந்தவகை யெனக்குமைந்தா
சொல்லாட்டாற் பல்லுதிர வடிப்பேன்பார் ... 429
பாரப்பா வேடமிட்டே யலைந்திடாதே
பாவயரை யனுதினமு மருவிடாதே ... 430
பற்களை அடித்துத் தள்ளு என அகத்தியர்க்கு உபதேசித்த விஷயத்தை ஏதோ நமக்குத்தான் முருகன் சொன்னான் என நினைத்து முருகன் மீது கோபப்படுவது தவறு. சித்தனாதன் எங்கே எல்லாம் கோபமடைகிறான்? தன் மெய்யடி சித்த மரபுக்கும் மாண்புக்கும் களங்கம் வரும் வகையில் எவன் ஒருவன் வேடதாரியாய்ச் சுற்றிவந்து ஆறாதாரம் அறியாமல், பாம்பை மகுடியூதி எழுப்பாமல் வாசியோகம், தசதீட்சை, மூல மந்திரம் உபதேசித்தல், சித்தாடல் காண்பித்தல் என்று போலியாய் வந்து ஏமாற்றுவானோ அவனுடைய பற்களை உடை என்கிறான்.
‘பல் போனால் சொல் போச்சு’ என்பது பழமொழி. ஈறுகளை அழுந்தத் தேய்த்து, பற்களைப் பாதுகாக்க என்னென்ன மூலிகை குச்சியால் விளக்க வேண்டும் என்று சித்தர் பாடல்களில் உள்ளது. மாந்திரீக தந்திர பிரயோகம் செய்பவர்கள் பற்களை ஜாக்கிரதையாகப் பாதுகாத்துக் கொள்வார்கள். அஷ்டகர்மம் மந்திரம் ஓத பற்கள் வேண்டுமே! இதுபோல் ஏமாற்றும் தில்லாலங்கடி ஆசாமியைக் கிராமத்தார் பிடித்து முதல் வேலையாகப் பற்களைத்தான் உடைப்பார்கள்.
ஒருவன் சித்தனாகத் தகுதி உடையவனா என்பதை அகத்தியர்தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார் போகர். அவரிடம் ‘விருது பெற்ற சித்தன்’ என்ற அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்கிறார். முருகன் அகத்திய முனிக்கு உபதேசம் தந்த வாயிலாகச் சித்த மரபில் வரும் ஏனையவர்களுக்கு இது பாடமாகவும் ஒழுங்குமுறை அறிவிப்புமாய் அமைந்தள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சித்தர்களிடம் ஈர்ப்புள்ளோர் மறைப்புள்ள சித்தர் பாடல்களில் உரைக்கப்பட்டவைகளை எடுத்த எடுப்பிலேயே தவறு என்று குறை சொல்வதை விடுத்து அப்பாடல்களை வரிசையாக முன்னும் பின்னும் ஆழ்ந்து வாசித்துப் பொருளறிய வேண்டும். முருகன் விவரிக்கும் அதுபோன்ற வேடதாரிகளுக்கு நம் பதிவுகள் நெருஞ்சி முள் போல் தைக்கிறது என்று புரிகிறது. நாம் என்ன செய்ய?
முருகன் அகத்தியர்க்கு உபதேசித்த அனைத்து ஞான யோக அஷ்டகர்ம அம்சங்களையும் உள்ளபடி இங்கே பதிவிட அதை எல்லாம் நான் கற்றறிருந்திருக்க வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை! அதில் விருப்பமுமில்லை! தேவைப்பட்டால் அவற்றை எனக்குக் கனவிலோ நேரிலோ குருமார்கள் செய்துகாட்டி கற்பிப்பதுதான் வழக்கம்.
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக