என் மெசஞ்சர் உள்பெட்டியில் பலருடன் பேசிய மிகப்பழைய உரையாடல்கள் எல்லாம் இருக்கிறது. அதில் வேண்டாத சிலவற்றை நீக்கலாமென நினைத்து பார்வையிட்டேன். நான் மறந்துபோன /தொடர்பில் இல்லாத பல பெயர்கள் இருந்தன. அதில் ஓர் உரையாடல் மதுரையைச் சேர்ந்த வாசி/அஷ்டாங்க யோகி திரு. வி. ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடையது.
ஏழாண்டுகள் பழைமையான தகவலைத் திறந்து வாசிக்கும்போதுதான் இருவரும் என்னென்ன உரையாடினோம் என்பது புலப்பட்டது.
என் ஆன்மிக நிலையைப் பற்றியும் பின்புலத்தில் என்னைக் கண்காணித்து வழிநடத்தும் சித்தர்கள் பற்றியும் அதில் சொல்லியிருந்தார். பெரும்பாலும் ஐயா இரவில்தான் தொடர்பில் வந்துள்ளது தெரிந்தது.
என் பிறப்பு முதல் சித்தர் போகர் பிரான் என் தீக்காயத்திற்கு வைத்தியம் செய்தது வரை துரிய தியானத்தில் சென்று அவர் கண்டுணர்ந்து விவரித்தார். வாசி/ அஷ்டாங்கம் குறித்து விவாதங்கள் செய்துள்ளேன். ஒருவர் மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்திட வாசியும், உடல் அழியாமல் இருக்க அஷ்டாங்கமும் தேவை என்றால் எதைத் தேர்ந்தெடுத்து ஆழமாகக் கடைப்பிடிப்பது? என்று கேட்டேன். அதற்கு அவர் சிலருடைய விருப்பங்களைச் சொல்லி தன்னுடைய கட்டுரையின் link-ஐ அனுப்பினார். அதன்பின் இடைப்பட்ட காலங்கள் நான் அவருடன் தொடர்பில் இருக்கவில்லை.
ஆக நம் ஆன்மா மீண்டும் பிறக்காமல் இருப்பதே மரணமில்லாத பெருவாழ்வு. இந்த உடலுக்கு அழிவே வராமல் இருக்க வேண்டுமானால் அது உயர் வித்தை. அதை நிலைநிறுத்த உபாயங்கள் தேவை என்று சித்தர்கள் சொல்லியுள்ளனர். "வந்த நோக்கமும் யுகாந்திர காலமும் முடிந்தால் கல்பதேகமும் ஒருநாள் மண்ணுக்கும் போகவேணும்" என்று சித்தர் பாடல்கள் குறிப்பிடுவது மெய். சித்தியும் யோகமும், சித்தியும் மருத்துவமும் இரு வழித்தடங்களாக இருந்து வருகிறது. சமாதியில் அமர்ந்த சித்தர்களில் சிலர் காயகற்பம் உண்டும், சிலர் யோகம் மட்டுமே கையாண்டும் இருந்தனர் என்பது தெரிகிறது.
நம்மைப் பொறுத்தவரை ஆன்மாவுக்கு வீடு கிடைத்தாலே உத்தமம்! இவ்வுடலை உறுதியாக்கிக் குறிக்கோளின்றி நீட்டித்து வைத்துக்கொண்டு இக்காலத்தில் என்ன செய்ய?
"பின்கலையும் இடகலையும் மாறும் போது
அறிவான சுழிமுனையில் மனதை வைத்து
அசையாமல் ஒருமனதாய்ப் பார்க்கும் போது
குறியான சிவயோகம் சித்தியாச்சு
கோடி சென்மம் சித்தரைபோல் வாழலாமே"
என்பது வாசியோகம் பற்றி சித்தர்களின் வாக்கு.
ஐயா அவர்கள் சொன்னதுபோல் இது எனக்குச் சித்தி ஆனதா? ஆகியது என்பதை இரு தருணங்களில் கண்டு உணர்ந்தேன். எப்படி என்பதைச் சொன்னால் அச்சப்படுவீர்கள் என்பதால் இங்கே சொல்லாமல் ரகசியமாக வைக்கிறேன். வாசியோகப் பயிற்சி என எனக்கு எதுவுமில்லை என்றாலும் ஜாதக ரீதியாகக் கோள்களும், மூதாதையர் ஆசியும் என்னுள் வாசியை இயல்பாய்த் தூண்டி நடத்தியுள்ளது என்பது புரிந்தது. எல்லாம் சிவசித்தம். 🕉️
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக