About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 18 ஜூலை, 2023

பிறவி எடுக்க அச்சம், பாவம் செய்ய மோகம்!

மனிதன் மரணித்தபின் அவ்வுடலைத் தகனம் செய்யாமல் வைத்தால் என்னவாகும்? 

இயற்கையாகச் சித்தியாகும் யோகிகளின் தேகம் பல மணிநேரங்கள்/ நாட்கள் ஆகியும்கூட கெடாமல் இருந்துள்ளது. ஆனால் நம்மைப்போல் சாதாரண மனிதர்களின் நிலை அப்படியல்ல. அவரவர் உடல்வாகைப் பொறுத்து வெப்பம் மெள்ளக்குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமல் போகும். அந்தச்சருமம் உயிரோட்டப் பொலிவை இழந்து மாற்றமடையும். என்னதான் வாசனாதி ஊதுபத்திகள் ஏற்றினாலும் அதன் மண இயல்பை மாற்றும் வல்லமை தசவாயுக்களுக்கு உண்டு.  

1 நாள் கழித்து ஈக்கள் முட்டையிடத் தொடங்கும், 2 நாள் கழித்துப் புழுக்கள் தோன்றுகின்றன, 3 நாட்களில் நகங்கள் விழும், 4 நாட்களில் ஈறுகள் கரையும், 5 நாட்களில் மூளை உருகும், 1 வாரத்தில் வாயு தேங்கி வீங்கி வயிறு வெடிக்கும், 2 மாதங்களில் உடல் உருகித் திரவமாகிறது. தக்க சீதோஷ்ண நிலை உறுதுணையாக இருந்தால் உடல் நிலைப்பொறுத்து ஒரு மாதத்திலேயே சதையும் கொழுப்பும் ஒழுகிக் காணாமல் போகும். ஆக எப்படியும் அறுபது நட்களுள் அடையாளம் இல்லாமல் வெறும் எலும்புக்கூடு மட்டுமே மிஞ்சும்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஒரு வருடத்திற்குள் ஒரு புழு/பூச்சி (ஆண்/ பெண்) உருவாகி வயிற்றில் தங்காதா என்று புதிதாய்த் திருமணமான பெண்ணின் உறவுகள் காத்துக் கிடக்கும். யாத்திரைப் போகாத தலங்கள் இல்லை, இருக்காத விரதங்கள் இல்லை, பார்க்காத வைத்தியர் இல்லை, எடுக்காத முயற்சிகள் இல்லை என்று பெரும் கடுந்தவத்திற்குப்பிறகு கரு தரித்து வயிற்றில் ஒரு சிசு உருவாகி, பிரம்மப்பிரயத்தனத்திற்குப் பிறகு பிரசவத்தில் குழந்தைப் பிறக்கிறது. 

கர்ப்பத்தில் இருக்கும்போது முதல் 2-3 மாதங்கள் சதைப்பிண்டமாக இருந்தபின் ஆறு மாதங்களில் விதிக்கப்பட்ட ஆன்மா ஒன்று அதில் நுழைந்துத் தங்கும். அப்போது ஊழ்வினை கனத்தால் தலை குப்புற கவிழும். வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்த நீர் நிறைந்த கருவறைக் குடத்தினுள்ளே அச்சத்தில் அவ்வான்மா திணறும் தப்பிக்க நினைக்கும். “நான் போன பிறவிகளில் ஆட்டம் போட்டேன், தலைக்கனம் பிடித்து ஆணவத்தில் பாவங்கள் புரிந்தேன், இனி செய்ய மாட்டேன். மன்னித்துவிடு. தப்பிக்க வழியற்ற ஆரண்யத்திலிருந்து என்னைப் போகவிடு இறைவா” என்று மன்றாடிக் கெஞ்சும். 

ஆனால் தூய்மையாகப் பிறந்தபோதும் உள்ளே இருக்கும் திமிரு பிடித்த ஆன்மா மெள்ள தன் வாசனையை உணர்ந்து மீண்டும் ஆட்டம் போடும். கர்ப்பத்தில் இருந்தபோது இறைவனிடம் சத்தியம் செய்து கெஞ்சியதை காற்றில் விடும். காலப்போக்கில் பிராரப்த கர்மாவின் பிடியில் சிக்கி விட்டகுறைப்பயனாக மீண்டும் ஆகாம்ய பாவங்கள் ஈட்டி நரகதிக்கு வழி தேடிக்கொள்ளும்.

மரணித்தபின் வெளியேறிய ஆன்மா போக்கிடம் இல்லாமல் அங்கேயே சுற்றிக்கொண்டு இருக்கும். மீண்டும் அந்த உடலுக்குள் எப்படியேனும் நுழைய வழியுண்டா என்று தவிக்கும். ஆனால் உடலின் நவதுவாரங்களை அடைத்துவிடுவார்கள். இறுதியாக அது ஆசனவாய் வழியாகவாவது நுழைய முடியுமா என்று நினைக்கும். ஆனால் கால் கட்டைவிரல்களைச் சேர்த்து இறுகக்கட்டிவிட ஆசனவாய் வழியும் மூடிவிடும். அதன் கடைசி முயற்சியும் தோல்விதான். தகனமாகிக் காரியங்கள் முடிந்து கடைசி நாளில் சூட்சும தேகம் பெறும் அந்த ஆன்மாவைக் கிங்கர்கள் இழுத்துப் போவார்கள். 

அச்சமூட்டும் கர்ப்பத்திலிருந்து வெளியே தப்பித்துப்போனால் போதும் என இருந்த நிலை மாறி, கடைசியில் வெளியே போன ஆன்மா மீண்டும் அவ்வுடலுக்குள்ளே வர வழியில்லையா இறைவா என்று கதறும். அது இறைவனைத்தவிர அதன் வீட்டார் யார் காதுகளுக்கும் விழாது. அதன் வாரிசு எள்ளும் நீரும் இறைத்து அதற்குப் பிண்டம் வைத்துச் சோறு போட்டால் உண்டு. இல்லாவிட்டால் போக இடமின்றிக் கோபமாக அலைந்துத் திரியும். 

கோபப்பட அதற்கு யோக்கியதை உண்டா? உயிருடன் இருக்கும்போது ஆட்டம்போடு என்று இறைவனா சொன்னான்? மேன்மேலும் வினைகளைச் சேர்த்துக்கொள்ளச் சொன்னது யார்? “நான் ஆதியில் படைத்து உயர்நிலைக்கு அனுப்பிய ஆன்மா எப்படி அப்பழுக்கில்லாமல் தெய்வீகமாய் இருந்ததோ அப்படித்தான் என்னிடம் வந்து சேரவேண்டும். தக்க குருநாதர் வந்து உன்னை நல்வழிப்படுத்தும்வரை பிறவிதோறும் அடிபட்டு மிதிபட்டுப் பாடம் கற்றுக்கொள்” என்பான். அந்த ஆன்மா பாவம் செய்து கெட்டதாகவே இருந்தாலும் அதன் சந்ததியர் அதைத் தென்புலத்தார் என்ற அளவில் கும்பிடவேண்டும், அதனிடம் ஆசி பெற வேண்டும் என்கிறது நம் சாஸ்திரம். 

ஆதலால் இப்பிறவியில் இக்கண்ணாமூச்சி விளையாட்டிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமானால் தர்மநெறி பின்பற்றி, குருவின் சொல் ஏற்று அதன்படி நற்கதிக்கு வழியைத்தேடி மோக்ஷம் அடையவேண்டும்.

- எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக