அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நான் முதுகலை படித்தபோது தவறாமல் கோயிலுக்குப் போவேன். அவ்வூரில் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தீட்சிதர் குலத்தின் மூத்தவர்களைப் பார்ப்பேன். அவர்கள் கருத்த தேகத்துடன் இருந்தனர். தூரத்திலிருந்து பார்த்தால் யார் என்றே தெரியாத அளவுக்கு நிறம். நெற்றியில் விபூதி பட்டை, பூணூல், முன் குடுமி மட்டும் பளிச்சென்று தெரியும். இவர்களுடைய கருத்த தோற்றத்திற்கான காரணம் அப்போது எனக்குத் தெரியாது.
இவர்கள் தங்களுக்குள்ளேயே சம்பந்தம் செய்து கொள்வதால் தங்கள் ஆதிகுடி மரபணு தன்மையின் அடையாளத்தை இழக்காமல் உள்ளனரோ என்று நினைப்பேன். அவர்களுடைய பழைய ஓடு வீடுகள் பலகாரக்கடையைப்போல் பொலிவின்றி இருந்தது. ஓரிருவர் வீட்டு வாசலில் மட்டும் சைக்கிள் இருந்தது. இன்றைய தலைமுறையினரின் தோல் நிறம் மெள்ள மாறி வருவது கண்கூடு. வாழ்வாதாரம் ஊசலாடுவதால் இதுவரை ஆற்றிய சிவத்தொண்டு போதும் என்று முடிவெடுத்து சில ஆண் வாரிசுகள் வேறு வேலைக்குப் போய்விட்டனர். தில்லைக்கு உள்ளேயே சொந்தங்களில் சம்பந்தம் செய்து வருவதால் குழந்தைப்பேறு இல்லாமல் போகும் நிலையே உள்ளது. அதனால் இக்காலத்தில் கோத்ர பிரவரம் சம்பிரதாயம் மீறி தீட்சிதர்கள் மணமுடிக்க சாத்தியமுண்டு.
கடந்த வாரம் தீட்சிதர்களை இலக்காக வைத்து நடந்த அக்கப்போர் அனைவரும் அறிந்ததே. சந்தடி சாக்கில் அவர்களைப் பற்றிய வதந்திகளும் பரப்பப்பட்டன. அது என்ன? பராந்தக சோழன் வேய்ந்த பொன் கூரையின் ஆணிகளைப் பிய்த்து எடுத்து தீட்சிதர் குடும்பத்துப் பெண்கள் நகை செய்து கொள்கிறார்களாம். கனகசபை மீது ஏறி நின்று தரிசிக்க அங்கே பணம் தர வேண்டுமாம். சிவன் சொத்தை விற்று ஜீவனம் செய்கிறார்களாம். இப்படிச் சில பரப்புரைகள். கனகசபை சர்ச்சை இன்னொன்று. கனகசபை மேடை என்பது சிறப்பு நாளில் இறைவனை அங்கே எழுந்தருளச்செய்து அபிஷேகம் பூசைகள் நடத்தும் புனிதமான இடம். அவர்களைத் தவிர யாரும் அங்கே நிற்கவோ பஞ்சாட்சரப்படி ஏறி மிதிக்கவோ விதியில்லை. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் அதை அனுமதித்தனர். இப்போது சீருடையில் பெண் காவலர்கள் உள்ளே திபுதிபு என ஏறிப்போய் நிற்பதை டிவியில் காட்டினார்கள். 🤔
"சிவன் சொத்து குல நாசம்" என்ற முதுமொழி இவர்களுக்குப் பொருந்தாது. மூத்தவனாம் சிவனின் சொத்து இவர்கள் சொத்து, இவர்கள் உண்ணும் சோறு சிவனுடையது. கைலாய பூதகணங்கள் எல்லாம் அந்தணர்களாகி சிவனிடம் தீட்சை பெற்றபின் சிவனே இவர்களைத் தில்லையில் அமர்த்தினான். அவர்களே தில்லை மூவாயிரத்தார் (எ) தீட்சிதர்கள். இவர்களைப் பேணினால் சிவத்தொண்டு புரிந்த புண்ணியம் கிட்டும் என்பதால் ஒவ்வொரு காலகட்டத்தில் மன்னர்கள் கோயிலை விரிவாக்கி நிலங்கள் மானியங்கள் வழங்கினார்கள். இன்று பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே உள்ளது, எங்கே போனது என்பது இவர்களுக்கே தெரியாது. அதிக அளவில் அந்நியர் படையெடுப்பின்போது கோயில் சூறையாடப்பட்டது என்று வரலாறு சொல்கிறது.
தில்லை அந்தணர்களை வைத்தே ஈசன் பல திருவிளையாடல்கள் புரிந்தான் என்கிறது திருத்தொண்டத்தொகை மற்றும் பெரியபுராணம். நந்தனாரின் மேன்மை, பூட்டிக்கிடந்த அறையிலிருந்து எடுத்து நம்பியாண்டார் நம்பி தொகுத்த திருமுறைகள், மாணிக்கவாசகர் பாடியதை ஈசனே சுவடிகளில் தன் கையால் படியெடுத்த நிகழ்வு, போன்ற பலவற்றைச் சொல்லலாம்.
இக்குலத்தினரின் எண்ணிக்கை இன்று 150ஐ தாண்டவில்லை. ஆண்- பெண் சதவிகிதம் சமன்பாடின்றி உள்ளதும் கஷ்டம்தான். அவர்களை நசுக்கிவைக்க சமூக-அரசியல் எதிர்ப்புகள் வலுக்கின்றன. ஒரு கட்டத்தில் ஆதி தீக்ஷிதர் வம்சத்தில் அந்த ஆதி மரபணு தொடராத நிலை வரலாம். இக்கலியுகத்தில் அவர்களுக்கு விதிக்கப்பட்டது அவ்வளவுதான் என்றாலும் இன்றும் அவர்களுள் சிவனும் ஒருவனாக இருந்து அவர்களைக் காத்து வழி நடத்துவது சிறப்பு. தனி நபர் அளவில் அவர்கள் செய்யும் தவறுகள் ஏதும் இருப்பின் அது அவர்களையும் சிவனையுமே சேரும். டிவி செய்திகளைப் பார்த்து இவர்களைப் பற்றி ஆர்வக்கோளாறில் நாம் விமர்சனம் என்ற சிவநிந்தனையைச் செய்யாமல் இருப்போம். 🕉️🙏
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக